என் மலர்
ஆந்திர பிரதேசம்
- பக்தர்கள் சிரமமின்றி ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக ஏற்கனவே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடபட்டுள்ளது.
- 10 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் வருகிற 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக ஏற்கனவே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடபட்டுள்ளது.
10 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினங்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பரிந்துரை கடிதங்கள் ஏற்க்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 61,499 பேர் தரிசனம் செய்தனர். 24,789 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இலவச நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- `டைம் ஸ்லாட்’ தரிசன டோக்கன்கள் ரத்து.
- டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திருமலை:
திருமலையில் உள்ள அன்னமய பவனில் வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தானத்தின் பல்வேறு துறை தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதன் பிறகு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு `சொர்க்கவாசல்' திறக்கப்படுகிறது. இந்தச் சொர்க்கவாசல் தரிசனம் ஜனவரி 1-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது.
22-ந்தேதி மதியம் 2 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்ட்டர்கள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் திருமலையில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் வழங்குவோம்.
திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதானம், ஜீவகோணா உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமாநாயுடு உயர்நிலைப் பள்ளி வளாகம், பைராகிப்பட்டிகை ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், எம்.ஆர்.பள்ளி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
22-ந்தேதி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட `டைம் ஸ்லாட்' தரிசன (எஸ்.எஸ்.டி.டோக்கன்கள்) டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.
தரிசன டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலையில் குறைந்த எண்ணிக்கையிலான அறைகள் மட்டுமே இருப்பதால், இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு திருப்பதியில் அறைகளை பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் நேரில் வரும் புரோட்டோகால் வி.ஐ.பி.பக்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டோக்கன் இல்லாதவர்கள் திருமலையை சுற்றி பார்க்கலாம்
வைகுண்ட துவார தரிசனத்தின் பலன் 10 நாட்கள் நீடிக்கும். எனவே வி.ஐ.பி. பக்தர்கள் மற்றும் பிற பக்தர்கள் 10 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னால் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரலாம். ஆனால், சாமி தரிசனம் செய்ய முடியாது. அவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தலாம். மேலும் திருமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம்.
தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சாமி தரிசனத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1900 ஒப்பந்த பணியாளர்கள் துப்புரவு வேலை செய்து வருகின்றனர்.
- மாதந்தோறும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என கூறி ஆஸ்தான மண்டபம் அருகே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
திருப்பதி கோவில் வளாகங்கள், பக்தர்கள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வைகுந்தம் சமையலறை உள்ளிட்டவைகளை பராமரிக்கபட்டு வருகின்றன.
இதற்காக 1900 ஒப்பந்த பணியாளர்கள் துப்புரவு வேலை செய்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் இ.எஸ். ஐ, பி.எப் பிடித்தம் போக மாதந்தோறும் ரூ.9,600 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள் 2 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். மாதந்தோறும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என கூறி ஆஸ்தான மண்டபம் அருகே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அலுவலர் தேவி, வி.ஜி.ஓ நந்தகிஷோர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏற்கனவே 2 மாத சம்பளம் வழங்காமல் உள்ள சுலப் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- சிறுமி ஜெயில் கதவை தட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- தாயைக் காண ஜெயில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கர்னூல் புறநகர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார்.
இளம் பெண்ணை திருட்டு வழக்கில் கைது செய்த போலீசார் கர்னூல் ஊரக தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள் சப்-ஜெயிலில் அடைத்தனர்.
தாயை போலீசார் எதற்காக கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் என சிறுமிக்கு தெரியவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் உன்னுடைய தாய் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள் சப்-ஜெயிலுக்கு சிறுமி சென்றார். அப்போது ஜெயிலின் கதவு மூடப்பட்டு இருந்தது.
தனது தாயை காண வேண்டும் என கூறி ஜெயில் கதவை பலமுறை தட்டிப் பார்த்தார். ஜெயில் கதவு திறக்காததால் கதறி அழுதபடி மீண்டும் மீண்டும் கதவை தட்டிக் கொண்டே இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி ஜெயில் கதவை தட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஜெயில் அதிகாரிகள் கதவைத் திறந்து சிறுமியை ஜெயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு தனது தாயை கண்ட சிறுமி அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
அப்போது சிறுமி தனது தாயிடம் போலீசார் உன்னை ஏன் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள் என கேட்ட சம்பவம் அங்குள்ளவர்களின் நெஞ்சை உருக செய்தது.
சிறிது நேர சந்திப்பிற்கு பிறகு சிறுமியின் உறவினர்கள் ஜெயிலுக்கு வந்தனர்.
ஜெயில் அதிகாரிகள் சிறுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். தாயைக் காண ஜெயில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 11 மாதங்கள் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறும்.
- 3 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் பாடப்பட்டு சேவை நடந்து வருகிறது. தை மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை 11 மாதங்கள் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறுகிறது.
இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுப்ரபாத சேவைக்கு பதிலாக அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 14-ந்தேதி 30 நாட்கள் திருப்பாவை சேவை நடைபெறுகிறது. ஜனவரி 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிப்பொழிவு நிலவு வருகிறது.
இதனால் மலைப்பாதையில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே மலைப் பாதையில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் நேற்று 59,734 பேர் தரிசனம் செய்தனர். 30,654 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
- ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், எம்மிகானூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எர்ரகொட்டா சென்ன கேசவலு ரெட்டி. இவர் நேற்று தனது வீட்டில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆந்திராவில் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர் பெருநகரங்களில் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள லேப்டாப், டேப் செல்போன் வழங்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. ஒரு சில மாணவர்கள் செய்யும் செயல்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தை குறை கூறுவது நியாயமானது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
- மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
திருப்பதி:
காங்கிரஸ் கட்சி தென் மாநிலங்களில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இப்போது இருந்தே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை கட்சிகள் நடத்தி வருகின்றன.
ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணியை அறிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி இந்த முறையும் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுமா? அல்லது தெலுங்கு தேசம் கட்சியுடன் இணையுமா என்பது புதிராக உள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ஜனவரி மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக பார்முலாவான பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தது. அதேபோல ஆந்திராவிலும் வாக்குறுதிகளை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஆனாலும் மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க ஆளுங்கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இது முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க வரும் வெளிநாட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 100 நேரடி (ஆப்லைன்) தரிசன ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
ஆனால், ஸ்ரீவாணி டிக்கெட்டுகளுக்கு விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்படாததால், இன்று முதல் விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
ஸ்ரீவாணி தரிசனம் நேரடி(ஆப்லைன்)தரிசன டிக்கெட்டுகளுக்கு வழக்கம் போல் அனுமதி சீட்டு சமர்ப்பித்த பக்தர்களுக்கு தினமும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
இதையொட்டி வருகிற 19-ந் தேதி கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே அன்று தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.
வருகிற 18-ந் தேதி முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிஞ்சா வகை ஆமைகள் சென்னையின் ஏரிகளை ஆக்கிரமித்துள்ளன.
- அதிக பராமரிப்பு தேவையில்லை மற்றும் பாசி வளர்ச்சியை சாப்பிட்டு தொட்டியை சுத்தமாக வைத்திருக்கும்.
திருப்பதி:
வீடுகளில் செல்ல பிராணியாக கண்ணாடி தொட்டிகளில் சிறிய வகையான வண்ண வண்ண மீன்கள் ஆசை ஆசையாக வளர்க்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வகையான மீன்களை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர்.
வீடுகளில் வளர்க்கப்படும் மீன்கள் குறித்து ஐதராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் ஆராய்ச்சியாளர் கோபி கிருஷ்ணா ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
தங்க மீன்கள் மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கேட் பிஸ் என்று அழைக்கப்படும் டேங்க் கிளீனர் இந்தியாவில் உள்ள மீன் வளர்ப்பு ஆர்வலர்களிடையே பிரபலமாக உள்ளது ஏனெனில் அதிக பராமரிப்பு தேவையில்லை மற்றும் பாசி வளர்ச்சியை சாப்பிட்டு தொட்டியை சுத்தமாக வைத்திருக்கும்.
ஒருவேளை மீன் வளர்ப்பவர்கள் மீன் வளர்க்க தேவையில்லை என்ற முடிவு செய்தால் அவர்கள் வளர்த்துள்ள தங்க மீன்களை அருகில் உள்ள ஏரி குளங்களில் விட்டு விடுகின்றனர்.
2 அடி அங்குலத்தில் ஏரி குளங்களில் விடப்படும் வளர்ப்பு மீன்கள் அடுத்த 2 மாதங்களில் விரைவாக அசுர வளர்ச்சி பெற்று 2 அடி நீளம் வரை வளர்ந்து விடுகிறது. மேலும் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து விடுகின்றன.
இதனால் ஏரி குளங்களில் உள்ள உள்ளூர் மீன்களை அழித்து விடுகிறது. நிஞ்சா வகை ஆமைகள் சென்னையின் ஏரிகளை ஆக்கிரமித்துள்ளன,
இப்போது மற்ற தென் மாநிலங்களில் உள்ளூர் நீர் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சத்திற்காக மாறி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- தேவஸ்தான பட்ஜெட்டில் ஒரு சதவீதம் என்பது ரூ.100 கோடிக்கும் மேலாகும்.
- காண்டிராக்டர்களுக்கு தேவஸ்தான நிதியை வழங்ககூடாது.
திருப்பதி:
ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி என்பவர் ஆந்திர ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், ஏழுமலையான் கோவில் நிதியில் ஒரு சதவீதம் திருப்பதி மாநகர வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேவஸ்தான பட்ஜெட்டில் ஒரு சதவீதம் என்பது ரூ.100 கோடிக்கும் மேலாகும். அதன்படி சாலைகள் அமைப்பது, மருத்துவ மனைகள் கட்டுவது, சுத்தம் செய்யும் பணிகளை நிர்வகிப்பது போன்றவற்றுக்கு இதுவரை ரூ.100 கோடி வரை திருப்பதி மாநகராட்சிக்கு, திருப்பதி கோவில் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இது இந்து சமய அறங்காவல் சட்டம் 111-ன் படி குற்றமாகும். இதனை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கு விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இனி தூய்மை பணிகளுக்கு தேவஸ்தான நிதியை உபயோகிக்க கூடாது. அது மாநகராட்சியின் பணியாகும்.
இதே போன்று, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கும் தேவஸ்தானத்தின் நிதியை உபயோகிக்க கூடாது.
காண்டிராக்டர்களுக்கு தேவஸ்தான நிதியை வழங்ககூடாது.
ஆனால், காண்டிராக்ட் பணி தொடரலாம். இது குறித்து 2 வாரங்களுக்குள் தேவஸ்தானம் விளக்க நோட்டீஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
- நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.
- வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் தொடங்கும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடக்கின்றன. அதில் 25 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் மிக நீண்ட விழாவான ஆத்யாயன உற்சவம் நேற்று மாலை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தொடங்கியது. இந்த காலத்தில் திருமலை ஜீயங்கார்களால் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.
இந்த பாராயணம் வழக்கமாக தனுர் மாசத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் தொடங்கும். அதில் முதல் 11 நாட்கள் `பகல்பத்து' என்றும் மீதமுள்ள 10 நாட்கள் `இரவு பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 22-ந்தேதி கண்ணிநுண் சிறுதாம்பு, 23-ந்தேதி ராமானுஜ நூற்றந்தாதி, 24-ந்தேதி வராகசாமி சாத்துமுறை, 25-ந்தேதி ஆத்யாயன உற்சவத்துடன் நிறைவடைகிறது.
- தபால் நிலைய உதவி அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
- பிளாஸ்டிக் கவர்களில் மூட்டையாக தபால்கள் கிடந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜமாபாத் மாவட்டம், சுபாஷ் நகர் தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை செய்து வந்தவர் கார்த்திக்.
இவரது கட்டுப்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக வந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை. பான் கார்டு, டிரைவிங் லைசன்சு, வங்கி காசோலைகள் உள்ளிட்ட தபால்களை வழங்கவில்லை.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கார்த்திக்கிடம் கேட்டபோது உங்களுக்கு எதுவும் வரவில்லை. வந்தால் கண்டிப்பாக தருகிறேன் என அலட்சியமாக பதில் அளித்து வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கார்த்திக் மீது சந்தேகம் அடைந்து இது குறித்து தபால் நிலைய உதவி அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
நேற்று காலை தபால் நிலையத்திற்கு வந்த கார்த்திக்கிடம் உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் தபால் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்ற தபால்களை ஏன் முறையாக குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கவில்லை என விசாரணை நடத்தினார்.
அதற்கு கார்த்திக் தனக்கு ஒன்றும் தெரியாது என பதிலளித்தார். இதையடுத்து உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் கார்த்திக் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது பிளாஸ்டிக் கவர்களில் மூட்டையாக தபால்கள் கிடந்தது.
மூட்டைகளில் சுமார் 6 ஆயிரம் தபால்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் மூட்டை கட்டி வைத்து இருந்தது தெரிய வந்தது. கார்த்திகை சஸ்பெண்டு செய்தனர்.






