என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்ததால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், பர்வத கிரி அடுத்த மோட்யா தாண்டாவில் பிரசித்தி பெற்ற துர்கை அம்மன் கோவில் உள்ளது.

    துர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கோவில் வளாகம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்தது. அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன், ரவி, அனில் உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்கள் திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தேவேந்திரன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கிருந்தவர்கள் மற்ற 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாரங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ரவி மற்றும் அனில் ஆகியோர் இறந்தனர். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்ததால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • இன்று காலை வியாக்ராபாத வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா.

    திருமலை:

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அதிகார நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேற்கண்ட வாகன வீதிஉலா முன்னால் நாட்டிய, நடன, இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (புதன் கிழமை) காலை வியாக்ராபாத வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகன வீதிஉலாவில் கோவில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா, இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா வருகின்றனர்.

    • ஆந்திர மாநிலத்தில் கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.
    • வேட்பாளர்கள் பட்டியலை மாநில தலைமை முடிவு செய்து வைத்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க வலியுறுத்தியது. அதற்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவிக்கவில்லை.

    தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு 94 வேட்பாளர்களையும், ஜனசேனா கட்சிக்கு 24 இடங்களையும் ஒதுக்கி வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்தது.

    ஆந்திர மாநிலத்தில் கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். தெலுங்கு தேசம் கட்சியுடன் தொகுதி பங்கீடு நிறைவடையாத நிலையில் ஆந்திர மாநிலத்தில் தனித்துப் போட்டியிட பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை மாநில தலைமை முடிவு செய்து வைத்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சாத்தியமான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யபட்டுள்ளது.

    ஒவ்வொரு தொகுதியிலும் 5 பேர் வரை தேர்வு செய்யபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2,000 பேர் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர்.

    வேட்பாளர் இறுதிப்பட்டியல் கட்சி மேலிடத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மதனபள்ளி அடுத்த குண்டவாரி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா ரெட்டி. இவரது மனைவி லஷ்மியம்மா. இவர்களுக்கு மனோகர் ரெட்டி, ஸ்ரீனிவாசலு ரெட்டி என 2 மகன்கள் உள்ளனர்.

    விவசாய நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசலு ரெட்டி அவரது தாயின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளி காலால் சரமாரியாக உதைத்து தாக்கினார். இதனை தடுக்க வந்த தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார்.

    இந்த சம்பவங்களை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்தது. இதனைக் கண்ட போலீசார் வெங்கட்ராமண ரெட்டி மற்றும் அவரது மனைவியிடம் புகாரை பெற்று சீனிவாசலு ரெட்டியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்கவில்லை.
    • ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியை சந்திப்பார். அது சாதாரண தோல்வி அல்ல. மிகப்பெரிய தோல்வியை அவரால் தவிர்க்க முடியாது.

    ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்க வில்லை. வேலை வாய்ப்புக்காக வேலை தேடி அலைகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வளங்களையும் ஒரு சில பிரச்சினைகளுக்காக செலவழித்து ஆந்திராவின் வளர்ச்சியை புறக்கணித்தது ஜெகன்மோகன் ரெட்டி பெரிய தவறு செய்துவிட்டார்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுபோல் இல்லாமல் அரண்மனைகளில் தங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நினைக்கிறார்கள்.

    இதுபோன்ற அணுகு முறையால் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் சிறந்த பாத்திரமாக விளங்க வேண்டும். ஆனால் பல தலைவர்கள் தங்களை பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குபவர்களாகவே பார்க்கின்றனர்.

    அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற முடியாது.

    பொதுமக்கள் மாறி மாறி வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
    • ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

    திருப்பதி:

    ஆந்திரப் மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா-சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரெயில், விசாகப்பட்டினம் பலாசா ரெயிலில் பின்னால் இருந்து மோதியது.

    இதில் 14 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த கோரமான ரெயில் விபத்து தென்னிந்தியாவையே உலுக்கியது.

    இந்த நிலையில் இந்திய ரெயில்வே செய்து வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் விபத்து ஏற்படுத்திய ஒரு ரெயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்து கொண்டிருந்தனர். இதனால் கவனச் சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.

    இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

    "நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்போம், அது மீண்டும் நடக்காமல் இருக்க நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம். ஆந்திர ரெயில் விபத்துக்கு காரணமான 2 ஊழியர்களும் அதில் பலியாகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை காங்கிரஸ் கட்சி அயராது போராடும்.
    • சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு பச்சோந்தி போல் நிறம் மாறியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    திருப்பதியில் நடந்த பிரசாரத்தில் ஷர்மிளா பேசியதாவது:-

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை காங்கிரஸ் கட்சி அயராது போராடும். இந்திரம்மா அபயஹஸ்தம்' என்ற பெயரில், ஒவ்வொரு ஏழை வீட்டுக்கும், பெண்களின் கணக்கில் மாதம் ரூ .5 ஆயிரம் வழங்கப்படும். வறுமையை ஒழிக்கவும், ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் கரம் கொடுக்கப் போகிறோம்.

    ஜெகன்மோகன் ரெட்டி 3 தலைநகரங்கள் நாடகம் ஆடினார். ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலை நகரையாவது வளர்த்திருக்கிறாரா? நமக்கு வெட்கமாக இல்லையா?


    சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு பச்சோந்தி போல் நிறம் மாறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெகனண்ணா அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

    அந்தஸ்துக்காக ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வேன் என்று கூறிய அவர், முதல்-மந்திரி ஆன பிறகு கொடுத்த வார்த்தையை காப்பாற்றவில்லை. ஏன் இதுவரை ஒரு எம்.பி கூட ராஜினாமா செய்யவில்லை.

    ஜெகன்மோகன் ரெட்டி பா.ஜ.க.வை ஏன் எதிர்க்கவில்லை? இப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் புலி, டெல்லி போனால் பூனையாக மாறிவிடுகிறார்.

    ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., சீட் இல்லாவிட்டாலும், நம் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வைச் சுற்றியே வருகின்றன. ஆந்திர அரசியலில் முக்கோண காதல் கதை நடக்கிறது".

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது.
    • ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கலந்து கொண்டு பேசியதாவது :-

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநில நலன்களை பணயம் வைத்து தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.
    • ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா விசாகப்பட்டினத்தில் பேட்டி அளித்தார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என்பதை உணர்ந்து விரக்தியில் இருக்கிறார். சத்தம் போட்டு கத்தி கூச்சிலிடுவதால் ஓட்டு கிடைக்காது.

    இதனை அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும். பவன் கல்யாணின் விரக்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூச்சல் போடும் அளவிற்கு சென்று விட்டது.

    அவரது தோல்விகளுக்கு தொண்டர்களை குறை கூறுவது வெட்கக்கேடானது.

    தற்போது பூத்துக் கமிட்டி இல்லாதது குறித்து அவர் பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்காக பவன் கல்யாண் வேலை செய்து வருகிறார். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்கள் கட்சிகளை தோற்றுவித்தனர்.

    ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார். ஆனால் பவன் கல்யாண் 2 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை.

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்தியது.
    • சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்தியது. அதற்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவிக்கவில்லை.

    தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு 94 வேட்பாளர்களையும், ஜனசேனா கட்சிக்கு 24 இடங்களையும் ஒதுக்கி வேட்பாளர்களை அறிவித்தனர். மீதமுள்ள 57 இடங்களை நிலுவையில் வைத்துள்ளது.

    தெலுங்கு தேசம் கூட்டணியில் கட்டாயம் 7 இடங்களுக்கு மேல் ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. அடம்பிடித்து வருகிறது. ஆனால் 4 முதல் 5 தொகுதிகளை ஒதுக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

    சில நாட்களில் பா.ஜ.க. தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

    இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    தேர்தல் நெருங்கி வருவதால் விரைவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்படும் என நம்புகிறோம் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • கருட வாகன வீதிஉலா மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், கொலு, பஞ்சாங்க சிரவணம், மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாஹவச்சனம், மிருதங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்ததும், சிறப்புப்பூஜைகள் செய்து புற்று மண் எடுத்து வந்து முளைப்பாரிக்காக விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி பிரம்மோற்சவ விழா `கருட' கொடியேற்றம் நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக கருடவாகன வீதிஉலா (கருட சேவை) மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

     விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்காக கோவில் புஷ்கரணி சுத்தம் செய்து தூய புனிதநீர் நிரப்பப்பட்டுள்ளது.

    ×