என் மலர்tooltip icon

    இந்தியா

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (31.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    வேளச்சேரி: வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டூ தெரு, ஓரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகன்நாதபுரம், ராம்ஸ் மற்றும் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்புகள்.

    அடையாறு: பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, கடற்கரை ரோடு, அருண்டேல் கடற்கரை சாலை, 7வது அவென்யூ, 30வது குறுக்கு சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, காந்தி நகர், கிரசென்ட் அவென்யூ சாலை, கிரசென்ட் பார்க் 1வது மற்றும் 2வது சாலை, காந்தி நகர் 3வது குறுக்குத் தெரு மற்றும் 4வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தெரு, எம்ஜி ரோடு, மருதீஸ்வரர் நகர், எல்பி ரோடு, கேனல் பேங்க் ரோடு, கேபி நகர் 1 முதல் 3-வது மெயின் சாலைகள், கேபி நகர் 2 மற்றும் 3-வது குறுக்கு தெரு, பிவி நகர் 1 மற்றும் 2-வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார்பட்டேஸ் ரோடு, பக்தவத்சலம் 1-வது தெரு.

    பல்லாவரம்: திருசூலம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர் மற்றும் பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் திருசூலம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் நகர்.

    வியாசர்பாடி: எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், புதுநகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்கெட், சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏபிசி கல்யாணபுரம், சத்யம்மூர்-25வது தெரு கார்டன், பள்ளத் தெரு 1-3வது தெரு, உதய சூர்யன் நகர், எஸ்.ஏ காலனி மற்றும் சர்மா நகர்.

    ஆவடி : பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தந்துறை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், விஜிவி நகர் மற்றும் விஜிஎன் நகரம்

    தாம்பரம்: ஏஎல்எஸ் நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், சாரங்காசி நகர், திருவண்ணாமலை நகர், திரு. காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்ரா அவென்யூ.

    • ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’ அவர் கையெழுத்து போடவில்லை.
    • திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள் !

    சென்னை :

    தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒரு சில நாட்களுக்கு முன்பு "முதலமைச்சர் அவர்கள் பூரண நலம் பெற வேண்டும்" என "சுந்தரா டிராவல்ஸ்" யாத்திரையில் சொன்ன அதே எதிர்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது 'ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங்' என நர்த்தனம் ஆடுகிறது. அது சரி பொதுவாக எல்லோரும் டேபிள் முன்பு அமர்ந்துதான் மீட்டிங் போடுவார்கள் என்பது தெரியாமல்தானே பழனிசாமி பாவம் டேபிளுக்கு அடியில் மீட்டிங் போட்டார் !

    அரசு அலுவல்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறுகிறதா என அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது, "உங்களுடன் ஸ்டாலின்" எனும் மகத்தான திட்டத்திற்கான முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்பது, காணொளிக் காட்சி வாயிலாக கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவது. பொதுமக்களுடன் வீடியோ காலில் பேசி முகாமின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி மக்களுக்கு சென்றடைகின்றனவா என்று நேரடியாக பயனாளிகளிடம் கேட்டறிதல், மாண்புமிகு பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணத்தின் போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாம் பெற வேண்டிய திட்டங்களுக்காக கடிதம் தயார் செய்து அனுப்பி வைத்தது என மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோதும் தொடர்ந்து தடையின்றி தனது மக்கள் பணியை செய்தார் திராவிட நாயகன் நமது முதலமைச்சர் அவர்கள் !

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துள்ளத் துடிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் பலி வாங்கிவிட்டு, "டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்" எனச் சொன்னவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர்.

    எந்த காலத்திலும் உருப்படியாக முதலமைச்சர் பணிகளையே செய்யாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இவையெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். "அம்மா இட்லி சாப்பிட்டார்; செவிலியர்களுடன் பந்து விளையாடினார்; விரைவில் வீடு திரும்புவார்; டிவி பார்த்தார்; கிச்சடி சாப்பிட்டார்; நர்ஸ்களுக்குப் பரிசு கொடுத்தார்; டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார்" என்றெல்லாம் திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள் !

    அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் 'உதய் மின் திட்டத்தில்' அவர் கையெழுத்து போடவில்லை. அவர் மறைந்த பிறகு ஓடோடிப்போய் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை வஞ்சித்தது சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் ஷாக்க்ஷாத் பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்தபோதும் இன்று அவரே "மின்கட்டணம் உயர்ந்துவிட்டது" என நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்.

    இப்படி, தானே ஏற்றிய மின்கட்டண உயர்வைக் குறித்து தானே பேசிவரும் பழனிசாமி, ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? 2014ம் ஆண்டு ரூ.414-ஆக இருந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.868.50-ஆக உயர்ந்து வளர்ந்து நிற்பது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாதா? அல்லது எப்போதும் போல நடிக்கிறாரா ?

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வாழ்த்தியோர் அனைவருமே, பா.ம.க. நிறுவனர் - தலைவர் என்றே குறிப்பிட்டு வாழ்த்தியிருந்ததை காணும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தோம்.
    • ராமதாஸ்தான் இயக்கத்தின் நிறுவனர் - தலைவர் என்பதை விலகி நிற்கும் ஓரிருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க.வில், டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியும், டாக்டர் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பா.ம.க. நிறுவனர் - தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் - சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி. நட்டா, நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்தியோர் அனைவருமே, பா.ம.க. நிறுவனர் - தலைவர் என்றே 'டாக்டர் ராமதாசை' குறிப்பிட்டு வாழ்த்தியிருந்ததை காணும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தோம்.

    டாக்டர் ராமதாஸ்தான் இயக்கத்தின் நிறுவனர் - தலைவர் என்பதை விலகி நிற்கும் ஓரிருவரும் புரிந்து கொள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்தளிப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 10 மணி வரை 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதனால் இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 10 மணி வரை 3 நாட்கள் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர்.
    • 530 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது.

    மதுரை:

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது.

    2-வது மாநாட்டை மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் மாநாட்டுக்கான பூமி பூஜை கடந்த 16-ந்தேதி நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் சேர்ந்து முகூர்த்தகால் நட்டனர்.

    இதனை தொடர்ந்து, மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர்.

    இந்தநிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று மதுரை வந்தார். அவர், பாரபத்திக்கு சென்று பணிகளை பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்தார். மாநாட்டுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வலியுறுத்தினார்.

    அப்போது, 530 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதில் 300 ஏக்கரில் மாநாடு நடைபெறும். மீதமுள்ள இடம் கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. 1½ லட்சத்திற்கும்மேல் தொண்டர்கள் வருவார்கள் என தெரிவித்ததாக தெரிகிறது.

    அப்போது போலீஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் தேதி ஆகஸ்டு 25 என முடிவு செய்து இருக்கிறீர்கள். ஆனால், 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி வர இருக்கிறது. அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டி இருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

    அதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், நிர்ணயித்த தேதியில் மாநாடு நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனக்கூறியுள்ளனர்.

    இதனால் குறிப்பிட்ட தேதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    • அரசு சார்பில் இழப்பீடாக அதிகாரிகள் கொடுத்த ரூ.6 லட்சத்தையும் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இந்த கொலையில் சுர்ஜித்தின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி நேற்று 2-வது நாளாக உறவினர்கள், குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் கவினின் குடும்பத்தினரிடம் நேற்று அரசு சார்பில் இழப்பீடாக அதிகாரிகள் கொடுத்த ரூ.6 லட்சத்தையும் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். போலீஸ் தம்பதியை கைது செய்ய வேண்டும். அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதற்கிடையே கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, இன்று 3-வது நாளாக கவின்குமாரின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். 

    • சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார்.
    • சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்தபோது ஸ்கூட்டர் மீது அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு நிதின்சாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அபிஷேக் படுகாயம் அடைந்தார்.

    கார் மோதியதில் ஸ்கூட்டர் உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பலியான நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    நிதின்சாய் மற்றும் அபிஷேக்கின் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்த கொலைக்கான பயங்கர பின்னணி வருமாறு:-

    கொலையான நிதின் சாயின் நெருங்கிய நண்பரான வெங்கடேஷ் என்பவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அவரது காதலை ஏற்காமல் கண்டித்து வந்துள்ளார். எனினும் வெங்கடேஷ் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த மாணவி தனது நண்பரான பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர், வெங்கடேசனை நேரில் சென்று மிரட்டி உள்ளார். எனினும் அவரது மிரட்டலை வெங்கடேசன் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து பிரணவ் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் வந்துள்ளார். ஓட்டலை விட்டு வெளியே வந்தவுடன் வெங்கடேசனை பிரணவ் தரப்பினர் தாக்க முயன்றனர். அப்போது நிதின்சாயும், அபிஷேக்கும் அவர்களை தடுத்து நிறுத்தி வெங்கடேசனுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.

    இந்த சந்தர்ப்பத்தில் வெங்கடேசனின் கால் மீது பிரணவ் தரப்பினர் காரை ஏற்றி உள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த நிதின் சாய், அபிஷேக் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சொகுசு காரை சேதப்படுத்தி, நம்பர் பிளேட்டையும் உடைத்து எறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரணவ் தரப்பினர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    அதன்பின்னர், நிதின்சாயும், அபிஷேக்கும் ஸ்கூட்டரில் ஒன்றாக சென்ற போதுதான் பிரணவ் தரப்பினர் காரில் பின்தொடர்ந்து வந்து வேகமாக மோதி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு போலீசார் வசம் வந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரில் வந்தவர்கள், விபத்தில் நிதின்சாய் இறந்தது தெரியாமல் சிரித்தபடி எச்சரிக்கை விடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டி வந்து நிதின்சாய் மீது மோதி கொலை செய்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துரு என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நிதின்சாயின் உறவினர்கள், நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் தீபக் ஆகியோர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன்படி பிரணவ் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்துரு தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துருவை கைது செய்த திருமங்கலம் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மறறும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை தென்காசி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது.
    • ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.

    அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது. பின்னர் மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தனர்.

    பின்னர் கல்லீரலின் வலது பக்கத்தில் கரு கண்டுபிடிக்கப்பட்டது. 12 வார வயதுடைய கருவுக்கு வழக்கமான இதயத் துடிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில் இருந்து வரும் இரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்தியாவில் இதுபோன்ற முதல் வழக்கு இதுவாகும்.

    இதுவரை, உலகில் இதுபோன்ற எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அரிதான நிலை இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற கர்ப்பம் தாய்க்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கல்லீரல் சிதைவு அல்லது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

    அந்தப் பெண் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையைத் திட்டமிட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.19,239 கோடி உள்ளது.
    • எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1,609 கோடி மற்றும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன.

    இந்திய வங்கிகளில் ரூ.67,000 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள்(deposit) உரிமை கோரப்படாமல் கிடப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ஜூன் 30, 2025 நிலவரப்படி இந்த புள்ளிவிவரங்களை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

     பொதுத்துறை வங்கிகள் 87 சதவீத உரிமைகோரப்படாத வைப்புத்தொகையை வைத்திருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இதுபோன்ற வைப்புத்தொகைகளில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

    எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.19,239 கோடி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.6,910.67 கோடி), கனரா வங்கி (ரூ.6,278.14 கோடி), பாங்க் ஆஃப் பரோடா (ரூ.5,277.36 கோடி) மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.5,104.50 கோடி) ஆகியவை அதிக அளவு உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளைக் கொண்ட பிற பொதுத்துறை வங்கிகளாகும்.

    தனியார் வங்கிகளில் மட்டும் ரூ.8,673.72 கோடி மதிப்புள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் உள்ளன. ஐசிஐசிஐ வங்கியில் அதிகபட்சமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் உள்ளன.

    ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2,063.45 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன. எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1,609 கோடி மற்றும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன.

    ஒரு சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் 10 ஆண்டுகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அந்தக் கணக்கில் உள்ள தொகை 'செயல்படாத வைப்புத்தொகை' என்று கருதப்படுகிறது. இது பொதுவாக கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் போது நடக்கும்.

    இந்த நிதிகள் 10 ஆண்டு வரம்பிற்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) பராமரிக்கப்படும் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும்.

    பழைய கணக்குகளில் பணம் இருக்கிறதா என்பதை சரிபார்க்க, இந்திய ரிசர்வ் வங்கி UDGM (Unclaimed Deposits-Gateway to Access Information) என்ற மையப்படுத்தப்பட்ட இணையதள போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.

    இந்த போர்டல் மூலம், பல்வேறு வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை எளிதாகத் தேடலாம்.

    இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், பழைய மற்றும் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • கனமழை மற்றும் வெள்ளத்தால் எதுவும் நடக்கலாம்.
    • நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்

    மேகாலயாவில் சுரங்கங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு கிடங்குகளில் சேமிக்கப்பட்ட 4,000 டன் நிலக்கரி மழையால் அடித்துச் செல்லப்பட்டதாக அமைச்சரின் கருத்து இப்போது மேகாலயாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    சமீபத்தில் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள இரண்டு நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனது. அது சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இது குறித்து விசாரணை நடத்திய மாநில உயர் நீதிமன்றம், அரசாங்கத்தை கண்டித்தது. நிலக்கரி காணாமல் போனதற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    இதுகுறித்து விளக்கம் அளித்த அம்மாநில ஆளும் பாஜக- என்பிபி கூட்டணி அமைச்சர் கீர்மென் ஷில்லா, நாட்டில் அதிக மழைப்பொழிவைப் பதிவு செய்யும் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. கனமழை மற்றும் வெள்ளத்தால் எதுவும் நடக்கலாம். கிழக்கு ஜெயின்டியா மலைகளிலிருந்து வெள்ள நீர் வங்கதேசத்திற்குள் பாய்கிறது. இந்தச் செயல்பாட்டில், நிலக்கரி சேமிக்கப்பட்ட கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம். நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.

    நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். 

    • அதிகளவில் மக்கள் நீக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள் என வாதிட்டனர்.
    • சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்

    பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    நேற்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் இதுகுறித்த விசாரணை நடைபெற்றது.  

    மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவுப் பட்டியலில் இருந்து அதிகளவில் மக்கள் நீக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள் என வாதிட்டனர்.

    தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையின் போது 65 லட்சம் பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், அவர்கள் இறந்துவிட்டவர்கள் அல்லது நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாறிவிட்டவர்கள் என்றும் பூஷன் தெரிவித்தார்.

    நீதிபதி சூர்ய காந்த், "இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு அமைப்பு என்பதால், அது சட்டத்திற்கு இணங்க செயல்படும் என்று கருதப்படுகிறது. ஏதேனும் தவறு நடந்தால், அதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நாங்கள் விசாரிப்போம்," என்று கூறினார்.

    நீதிபதி பக்ஷி பூஷனிடம், "சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள் என்று உங்கள் அச்சம் உள்ளது. இப்போது இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை நாடுகிறது.

    நாங்கள் ஒரு நீதித்துறை அதிகாரமாக இந்த செயல்முறையை மேற்பார்வையிடுகிறோம். பெருமளவில் மக்கள் விலக்கு இருந்தால், நாங்கள் உடனடியாக தலையிடுவோம். இறந்துவிட்டதாக அவர்கள் கூறும் 15 பேர் உயிருடன் இருப்பதற்கு நீங்கள் ஆதாரம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.

    ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் இது குறித்த இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×