என் மலர்tooltip icon

    இந்தியா

    • செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இதேபோல் சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக போலீசார் 21 பேருக்கு சிறந்த சேவைக்கான விருதும், 3 போலீசாருக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது.
    • தமிழகத்தில் கூலி படத்தின் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. திரையரங்கை ரசிகர்கள் அதிரவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழகத்தில் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு வருகின்றனர்.

    அவ்வகையில், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் தனுஷ் கூலி படத்தை கண்டு ரசித்து வருகிறார். 

    • போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும்.
    • திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 12 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.

    தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப்பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடிவதுடன், அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்கமுடியும். ஆனால், அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை.

    தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 12-ஆம் நாளாக நீடித்த நிலையில், போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும். அவ்வாறு பேசியிருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதலமைச்சருக்கோ திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை. ஒருவேளை சமூகநீதியில் சிறந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரோ என்னவோ?

    ஒன்று மட்டும் உறுதி. ஏழை எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல... கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என கூறினார்.

    • அழகு சாதனம் பொருட்கள் விற்பனை செய்யும் இணைய தளம் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார்.
    • சரியான விவரங்கள் அளிக்கப்படவில்லை. மோசடி வழக்கில் உள்ள மற்றொருவருடன் தொடர்புகள் இருந்தது கண்டுபிடிப்பு.

    பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை, சந்தீபா விர்க் என்ற இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்துள்ளனர். 12 லட்சம் பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டின்படி மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மொகாலியில் உள்ள காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டள்ளது. சந்தீபா விர்க் மோசடி வழியில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அமலாக்கத்துறை டெல்லி மற்றும் மும்பையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பணமோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது, அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    FDA அங்கீகாரம் பெற்ற அழக சாதன பொருட்களை விற்பனை செய்வதாக கூறும் hyboocare.com இணைய தளம் தனக்கு சொந்தமானது எனக் கூறிக்கொண்டு வந்துள்ளார். எனினும், அதில் தெரிவிக்கப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், இணைய தளம் பயனாளர்களுக்கு குறைபாடு உள்ளதாகவும், பணம் செலுத்தும் கேட்-வே அடிக்கடி பிரச்சினையை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பு எண் செயல்பாட்டில் இல்லை. நிறுவனம் குறித்து வெளிப்படைத்தன்மையான விவரங்கள் இல்லாமல் இருந்துள்ளது. நிதி மோசடி செய்வதற்காக உண்மையில்லாத வணிக செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இதுபோக, தற்போது செயல்படாத ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவுனத்தின் முன்னாள் டைரக்டர் அங்காரை நடராஜன் சேதுராமனுடன் தொடர்புகள் இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சேதராமனின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, தனிப்பட்ட ஆதாயத்திற்கான நிதியை மாற்றியது, சட்டவிரோத வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்காரை நடராஜன் சேதுராமன் 40 கோடி ரூபாயை தனிநபர் ஆதாயத்திற்காக நிதியை பயன்படுத்தியதாக நிறுவனம் குற்றம்சட்டியிருந்தது.

    • ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை இன்று அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது.

    அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை. மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது. வார தொடக்க நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.75,000-க்கும், செவ்வாய் கிழமை ரூ.640 குறைந்து 74,360-க்கும், நேற்று ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கும் விற்பனையானது.

    தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை இன்று அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    12-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000

    10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-08-2025- ஒரு கிராம் ரூ.126

    12-08-2025- ஒரு கிராம் ரூ.126

    11-08-2025- ஒரு கிராம் ரூ.127

    10-08-2025- ஒரு கிராம் ரூ.127

    09-08-2025- ஒரு கிராம் ரூ.127

    • கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
    • அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

    தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!

    குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தபோது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும்போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?

    அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?

    அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும்.
    • இந்த பாஸ், எந்த வாகன எண்ணுக்கு பெறப்படுகிறதோ, அந்த வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 'பாஸ்டேக்' முறை நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் சலுகையில் பாஸ் வழங்கும் முறையை மத்திய அரசு அறிவித்தது. இந்த ஓராண்டு பாஸ் சுதந்திர தினமான நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும். பின்னர் ரூ.3 ஆயிரம் கட்டணத்தை 'ராஜ்மார்க்யாத்ரா' செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 2 மணி நேரத்திற்குள் 'பாஸ்' செயல்படுத்தப்படும். இது தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலையில் மட்டுமே செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலை, மாநில-உள்ளாட்சி நிர்வாக கட்டண மையங்கள், 'பார்க்கிங்' போன்ற இடங்களில் வழக்கமான முறையில் செயல்படும். அதற்கு கட்டணங்கள் வழக்கம்போல் வசூலிக்கபபடும்.

    இந்த 'பாஸ்' ஓராண்டு அல்லது 200 பயணங்கள் என்று எது முதலில் வந்தாலும் அதுவரை மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு இந்த பாஸ் தானாகவே வழக்கமான 'பாஸ்டேக்' ஆக மாறி விடும். அதனை நீட்டிக்க விரும்பினால் மீண்டும் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த பாஸ், தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களில் பயன்படுத்தினால், முன் அறிவிப்பு இல்லாமல் உடனடியாக பாஸ் செயலிழக்கப்படும்.

    இந்த பாஸ், எந்த வாகன எண்ணுக்கு பெறப்படுகிறதோ, அந்த வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு வாகனத்திற்கு பயன்படுத்தினால், அது செயலிழக்கப்படும். மேலும் இந்த ஆண்டு 'பாஸ்' ஒட்டிய வாகனங்கள், ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்து விடும். இந்த ஆண்டு பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்பது அல்ல. வழக்கம்போல் பாஸ்டேக் கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கடந்து செல்லாம். தற்போது பாஸ்டேக்கில் உள்ள தொகையை, ரூ.3 ஆயிரம் பாஸ் பெறுவதற்கு பயன்படுத்த முடியாது.

    • செங்கோட்டையைச் சுற்றிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
    • போக்குவரத்து பணிகளுக்காக 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    புதுடெல்லி:

    நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டம் மிக முக்கியமானது ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் கொடியேற்றி வைக்கிறார்.

    அதன்படி இந்த ஆண்டும் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். தொடர்ச்சியாக 12-வது முறையாக அவர் கொடியேற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இவர் கொடியேற்றியபோது, தொடர்ந்து 10 முறை கொடியேற்றி இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் சாதனையை முறியடித்து இருந்தார். தற்போது 12-வது முறையாக கொடியேற்றி இந்திராகாந்தி மற்றும் நேருவின் சாதனையை நெருங்க இருக்கிறார். அவர்கள் முறையே 16 மற்றும் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கொடியேற்றி இருந்தனர்.

    சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி காலையில் அங்கு வரும்போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இணை மந்திரி சஞ்சய் சேட் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

    இதனைத் தொடர்ந்து பிரதமர் காவல் பணியாளர்கள் குழுமியுள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது வழக்கமான சம்பிரதாயப்படி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கும். அதனைத்தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    இந்த விழாவை முன்னிட்டு செங்கோட்டையின் முழு கட்டுப்பாடும் நேற்று காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. நேற்று இங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இங்கு மட்டுமல்ல, இந்தியா கேட் போன்ற சில இடங்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

    செங்கோட்டையைச் சுற்றிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க முடியாது. சிறுவர்கள் காற்றாடிகள் (பட்டம்) விட முடியாது. இதைப்போல ராட்சத பலூன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து ரத்து மற்றும் மாற்றுப்பாதை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. செங்கோட்டையை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் நவீன கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை கண்காணிப்பதற்கென்றே காவல்துறையில் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    டெல்லிக்குள் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டு விடக்கூடாது எனக்கருதி வணிக நோக்கத்துக்காக இயங்கும் வாகனங்களின் நுழைவுக்கு நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக டெல்லி மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் நியமிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து பணிகளுக்காக 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இது தவிர மத்திய ஆயுதப்படையினர் உள்ளிட்ட துணை ராணுவப்படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் செங்கோட்டை மற்றும் பிற இடங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். மொத்தம் 15 ஆயிரம் காவல் பணியாளர்கள் பல பிரிவுகளாக பாதுகாப்பை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    பாதுகாப்பின் ஒரு அம்சமாக டெல்லி விமான நிலையத்தில், பட்டியலிடப்படாத விமானங்களுக்கு காலையிலும், மாலையிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • சென்னை கோட்டை பகுதி 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இன்று இரவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
    • தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை:

    நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    நிகழ்ச்சியில் சில புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு விருதுகளை வழங்குவார்.

    முன்னதாக கோட்டை முன்பு நடக்கும் பிரமாண்ட அணிவகுப்பையும் அவர் பார்வையிடுகிறார். இதற்காக கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும், பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டி.ஜி.பி.சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் டாக்டர் கண்ணன், பர்வேஷ் குமார், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவில் இருந்தே சென்னை முழுவதும் ரோந்துபணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திரதின விழா நடைபெறும் சென்னை கோட்டை பகுதி 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இன்று இரவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.

    சென்னை முழுவதும் மக்கள் அதிகமாக கூடும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதி, வணிக நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் போன்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சோதனை நடத்தப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் ரெயில், பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

    தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விடுதிகள், ஓட்டல்களில் தங்கி உள்ள நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் சரியாக உள்ளதா என்றும், அறைகளில் பழைய குற்றவாளிகள் மற்றும் நாசவேலையில் ஈடுபடும் நோக்கத்தில் மர்மநபர்கள் தங்கி உள்ளனரா என்று சோதனையிட்டனர். மேலும் அவர்கள் தங்கியிருப்பதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்தனர்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பணியில் காட்பாடி ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாநில மற்றும் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தரப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் நிறுத்தி போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

    அதேபோன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர், விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர், ஸ்ரீபுரம் பொற்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார் நிலையில் இருக்கவும், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போலீஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய வாலிபர், இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்.
    • அப்போது வந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கியது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த நபரை, ஒரு கும்பல் அடித்தே கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பீட்டாவாட் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கான் (வயது 20), இவர் போலீஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக ஜாம்னர் நகருக்கு சென்றுள்ளார். விண்ணப்பித்து முடித்த உடன், அருகில் உள்ள கடையில் காபி குடித்தவாறு இளம்பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கான் உடன் தகராறு செய்து கொடூரமாக அடித்துள்ளனர்.

    அதோடு மட்டுமல்லாமல் அவர் வசித்து வந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டை, இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். கானின் குடும்பத்தினர் தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது. இறுதியாக கான் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக புகார் அளித்து, அடித்து கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்நிலையத்தை கானின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

    ஏற்கனவே உள்ள பழைய பகையால் கான் அடித்துக் கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சென்னையில் இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னையில் இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் இடையே நடைபெறும் பொறியியல் பணி காரணமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • சென்னை உள்பட 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று வானம் மேக மூட்டமாகவும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இன்று காலை மேகமூட்டமாக காணப்படுகிறது.

    வானிலை ஆய்வு மையம் நேற்று "மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தது.

    ×