என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சுங்கசாவடியில் வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ஓராண்டுக்கான பாஸ்- நாளை முதல் அமல்
- இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும்.
- இந்த பாஸ், எந்த வாகன எண்ணுக்கு பெறப்படுகிறதோ, அந்த வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சென்னை:
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 'பாஸ்டேக்' முறை நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் சலுகையில் பாஸ் வழங்கும் முறையை மத்திய அரசு அறிவித்தது. இந்த ஓராண்டு பாஸ் சுதந்திர தினமான நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும். பின்னர் ரூ.3 ஆயிரம் கட்டணத்தை 'ராஜ்மார்க்யாத்ரா' செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 2 மணி நேரத்திற்குள் 'பாஸ்' செயல்படுத்தப்படும். இது தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலையில் மட்டுமே செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலை, மாநில-உள்ளாட்சி நிர்வாக கட்டண மையங்கள், 'பார்க்கிங்' போன்ற இடங்களில் வழக்கமான முறையில் செயல்படும். அதற்கு கட்டணங்கள் வழக்கம்போல் வசூலிக்கபபடும்.
இந்த 'பாஸ்' ஓராண்டு அல்லது 200 பயணங்கள் என்று எது முதலில் வந்தாலும் அதுவரை மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு இந்த பாஸ் தானாகவே வழக்கமான 'பாஸ்டேக்' ஆக மாறி விடும். அதனை நீட்டிக்க விரும்பினால் மீண்டும் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த பாஸ், தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களில் பயன்படுத்தினால், முன் அறிவிப்பு இல்லாமல் உடனடியாக பாஸ் செயலிழக்கப்படும்.
இந்த பாஸ், எந்த வாகன எண்ணுக்கு பெறப்படுகிறதோ, அந்த வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு வாகனத்திற்கு பயன்படுத்தினால், அது செயலிழக்கப்படும். மேலும் இந்த ஆண்டு 'பாஸ்' ஒட்டிய வாகனங்கள், ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்து விடும். இந்த ஆண்டு பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்பது அல்ல. வழக்கம்போல் பாஸ்டேக் கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கடந்து செல்லாம். தற்போது பாஸ்டேக்கில் உள்ள தொகையை, ரூ.3 ஆயிரம் பாஸ் பெறுவதற்கு பயன்படுத்த முடியாது.






