என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சுதந்திர தின விழா- தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு
- சென்னை கோட்டை பகுதி 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இன்று இரவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
- தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை:
நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியில் சில புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு விருதுகளை வழங்குவார்.
முன்னதாக கோட்டை முன்பு நடக்கும் பிரமாண்ட அணிவகுப்பையும் அவர் பார்வையிடுகிறார். இதற்காக கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும், பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டி.ஜி.பி.சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் டாக்டர் கண்ணன், பர்வேஷ் குமார், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவில் இருந்தே சென்னை முழுவதும் ரோந்துபணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திரதின விழா நடைபெறும் சென்னை கோட்டை பகுதி 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இன்று இரவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
சென்னை முழுவதும் மக்கள் அதிகமாக கூடும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதி, வணிக நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் போன்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சோதனை நடத்தப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் ரெயில், பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விடுதிகள், ஓட்டல்களில் தங்கி உள்ள நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் சரியாக உள்ளதா என்றும், அறைகளில் பழைய குற்றவாளிகள் மற்றும் நாசவேலையில் ஈடுபடும் நோக்கத்தில் மர்மநபர்கள் தங்கி உள்ளனரா என்று சோதனையிட்டனர். மேலும் அவர்கள் தங்கியிருப்பதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்தனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பணியில் காட்பாடி ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாநில மற்றும் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தரப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் நிறுத்தி போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.
அதேபோன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர், விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர், ஸ்ரீபுரம் பொற்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார் நிலையில் இருக்கவும், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






