என் மலர்tooltip icon

    இந்தியா

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.

    தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    26-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    2-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு- மத்தியமேற்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • மலையாள மொழியில் 'கேரளம்' என்று அழைக்கப்படுவதை, அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
    • 'கேரளம்' என்பதற்கு "தென்னை மரங்கள் நிறைந்த நிலம்" என்று அர்த்தம்.

    'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்க வேண்டும் என அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பெயர் நடைமுறைக்கு வரும்.  

    • நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101). வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே, நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அறிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

    இந்த நிலையில், நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் நேற்று மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நல்லகண்ணுவுக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசக்கருவி சிகிச்சை, மருந்துகள், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

    • உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.
    • விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

    ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் நேற்று இரவு, ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் லாதேஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் (41). இவர் ஒரு சிறிய உணவகம் நடத்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

    கடந்த வாரம் இவரது உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.

    உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், அவரை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு மாற்றக் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    பணக்கஷ்டத்தில் இருந்தபோதிலும், எப்படியாவது அவரைப் பிழைக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி, இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை சஞ்சய்யின் மனைவி ஏற்பாடு செய்துள்ளார்.

    திங்கள்கிழமை மாலை ராஞ்சியில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் சஞ்சய்யுடன் அவரது மனைவி அர்ச்சனா தேவி மற்றும் உறவினர் துரு குமார் ஆகியோரும் இருந்தனர்.

    விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக சத்ரா மாவட்டத்தின் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் நோயாளி சஞ்சய், அவரது மனைவி, உறவினர், மருத்துவர், செவிலியர், 2 விமானிகள் என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சஞ்சய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அவரது மனைவியும் பிறரும் அவருடன் சேர்த்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

    • அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
    • தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான புறநகர் ரெயில் சேவை மேலும் குறைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    இந்த நிலையில், சென்னையில் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.

    ஏற்கனவே 40 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

    • வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
    • இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).

    இவர்களுக்கு பழனி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பழனி இறந்து விட்டார். மேலும் அருணாச்சலமும் இறந்துவிட்டார். இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    தகவல் அறிந்து நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ராஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    முதல் கட்ட விசாரணையில் வெள்ளையம்மாளை அவரது மருமகள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
    • திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    இந்து மத திருமண சடங்குகளால் ஈர்க்கப்பட்ட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தமிழக எல்லையான குமுளியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஆஸ்கார் (வயது47). இவர் கடந்த 2010 முதல் ஆண்டுக்கு 2 முறை கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். அவ்வாறு வந்த போது கேரளாவில் வர்க்கலா மற்றும் தேக்கடி ஆகிய இடங்கள் மிகவும் பிடித்துப்போனது.

    மேலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்குத் தொடர்ந்து சென்று வந்தார். இந்து மத சடங்குகள் மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். இதனையடுத்து ஆஸ்கார் மூலமாக இந்து மதச் சடங்குகளைப் பற்றி அறிந்து கொண்ட செலியாவும் (37), கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்தை இந்தியாவில் இந்து முறைப்படி நடத்தவும் திட்டமிட்டனர். இதை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள துர்கா கணபதி பத்ரகாளி கோவிலில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவில் நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், ஆஸ்கார் மணமகள் செலியாவின் கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணச் சடங்குகளை பூசாரி கண்ணன் முன்னின்று நடத்தினார்.

    கோவில் தலைவர் ரவீந்திரன் நாயர் திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். தங்களின் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்த வெளிநாட்டு தம்பதியினருக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
    • கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவருக்கு கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை 'ரோடு ஷோ'வாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    தொடர்ந்து பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ரூ.1கோடியே 45 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

    • வீட்டில் இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.
    • இறுதியில் கிரில் கதவுகளை அறுத்து எடுத்தே அவர்கள் மீட்கப்பட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

    மீரட்டில் உள்ள இக்பால் என்பவரது வீட்டில் தரைத்தளம் துணிகளை சேமித்து வைக்கும் கிடங்காகவும், மேல்தளம் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    நேற்று மாலை இக்பாலும் அவரது சகோதரரும் தொழுகைக்காக வெளியே சென்றிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.

    மேல்தளத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென தீ பரவியது. வெளியேறும் பாதையில் தீயும் புகையும் சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

    தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 

    வீடு அமைந்திருந்த பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அருகில் செல்ல முடியவில்லை. நீண்ட தூரத்தில் வாகனங்களை நிறுத்தி, குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர்.

    பாதுகாப்புக்காக ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் கதவுகளால், உள்ளே இருந்தவர்களால் வெளியே குதிக்கவோ அல்லது பொதுமக்கள் உள்ளே சென்று காப்பாற்றவோ முடியவில்லை. இறுதியில் கிரில் கதவுகளை அறுத்து எடுத்தே அவர்கள் மீட்கப்பட்டனர்.

    தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின் கசிவு காரணமா அல்லது கிடங்கில் இருந்த துணிகளில் தீ பிடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி கிடங்கு நடத்தியதற்காகவும், அங்கு தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் வீட்டின் உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காயமடைந்த மற்றொரு நபர் மீரட் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    • மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இப்போதே பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து உள்ளது. மேலும் இப்போது வெயிலின் தாக்கம் கோடைகாலத்துக்கு முன்னதாகவே அதிகரித்து வருகிறது.

    காலையிலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சாலையோரம் உள்ள கடைகளில் இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை, கிர்ணி உள்ளிட்ட பழ ஜூஸ் ஆகியவற்றை வாங்கி குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.

    இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் பழ ஜூஸ் கடைகள் அதிகளவில் முளைத்து இருப்பதையும் காணமுடிகிறது. மேலும் நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, கிர்ணி பழ சீசன் தொடங்கி உள்ளதால் பல இடங்களில் தர்பூசணி பழங்களை அதிகளவில் வியாபாரிகள் குவித்து வைத்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது தினசரி 250 டன் தர்பூசணி பழங்களும், 200டன் கரும் பச்சை நிறம் கொண்ட (கிரண் வகை) தர்பூசணி பழங்களும், 120டன் கிர்ணி பழங்களும் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிரண் வகை தர்பூசணி கிலோ ரூ.30 வரையிலும், கிர்ணி பழம் கிலோ ரூ.30 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தர்பூசணி வியாபாரி வடிவழகன் கூறும்போது, "கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் முதல் கோயம்பேடு சந்தைக்கு வரும் தர்பூசணி பழங்களின் வரத்து 2 மடங்காக அதிகரிக்கும். சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கிர்ணி பழங்கள் பூச்சிக் கொல்லிகளால் வீணாகி போனது. இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு கிர்ணி பழங்களின் விலை அதிகரித்து உள்ளது" என்றார்.

    • தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர்.
    • அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்குவோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    கேள்வி:- ஏற்கனவே தமிழக அரசின் நிதி சுமை அதிகமாகி உள்ள நிலையில் ரூ.10 ஆயிரம் கருணை தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்களே? நிதி சுமையை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

    பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் அமைந்ததும் வருவாயை பெருக்கி நாங்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்வோம். கொரோனா காலத்திலேயே பல்வேறு சிரமங்களுக்கு இடையில் திட்டங்களை செயல்படுத்தி வரி, வருவாயை பெருக்கினோம்.

    எனவே நாங்கள் அளித்த வாக்குறுதிபடி நிச்சயம் தி.மு.க. ஆட்சி போன்று இல்லாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

    கேள்வி:- இலவச அறிவிப்புகளை கண்டிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளதே?

    பதில்:- தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை கை தூக்கி விடும் நிலையில்தான் இந்த கருணை தொகையை அறிவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் ஒருமுறை ரூ.10 ஆயிரம் கருணை தொகையை வழங்குவோம்.

    மக்கள் மீதான கருணையின் அடிப்படையில்தான் இதனை அறிவித்து இருக்கிறோம்.

    கேள்வி:- வருவாயை பெருக்குவதற்காக வரிகள் உயர்த்தப்படுமா?

    பதில்:- அதையெல்லாம் இப்போதே எப்படி சொல்ல முடியும். வருமானத்தை பெருக்கி மக்களுக்கு தேவையானதை செய்வோம்.

    கேள்வி:- வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவி தொகையை கொடுப்பதை விட வேலைவாய்ப்பை அதிகரிக்கலாமே?

    பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா ஆட்சியின்போது தொழில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்.

    அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்குவோம். அப்போது மக்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு தான் கருணை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வேகமாக நடந்து வருகிறது. நீங்கள் எப்போது அதனை தொடங்கப் போகிறீர்கள்?

    பதில்:- அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது யார்-யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றிய விவரங்களையும் வெளியிடுவோம்.

    கேள்வி:- தமிழகத்தில் கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை தாங்கும் நிலையில் டி.டி.வி.தினகரன் பா.ஜ.க. கட்சியுடன்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறி இருக்கிறாரே?

    பதில்:- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை தாங்குகிறது என்பது அனைவருக்குமே தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
    • கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கூட்டுறவுத் துறை சார்பில், கடந்த அக்டோபர் மாதம் SRB மற்றும் DRB பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இதுவரை முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது மாடல் விடியா திமுக அரசு.

    பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இதுவரை வெளியிடாத விடியா திமுக அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    டி.என்.பி.எஸ்.சி குரூப்2 தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது.

    தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத்துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    ×