என் மலர்tooltip icon

    இந்தியா

    • பீகார் மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
    • இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சியை கைப்பற்றியது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி 202 தொகுதிகளில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

    இதையடுத்து, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார்.

    இந்நிலையில், பீகார் சட்டசபை டிசம்பர் 1-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியது.

    இந்தக் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சபாநாயகராக ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவருமான நாராயணன் செயல்பட்டு வருகிறார்.

    இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அபாய வரம்பை தொட்டுள்ளது.
    • மருத்துவமனைகள், தீயணைப்பு சேவைகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு கிடையாது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது.

    காற்று மாசுபாடு அபாய வரம்பை தொட்டுள்ளதால் பொது சுகாதாரத்தை பாதுகாக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களின் மொத்த பணியாளர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் கட்டாயம் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

    அவசர பணிகள் அல்லது பொது பயன்பாடு சேவைகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் மட்டுமே கூடுதல் பணியாளர்களை நேரடியாக அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிநேரங்களை கட்டம் கட்டமாக மாற்றி அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், தீயணைப்பு சேவைகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பொது போக்குவரத்து , தூய்மை பணிகள், பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாடு தொடர்பான அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு அமலுக்கு வராது.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கருத்தில் கொண்டு மக்கள் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும், முக கவசம் பயன்படுத்தவும், வீட்டுக்குள் காற்று சுத்திகரிப்பு சாதனங்களைப் பயன்படுத்தவும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

    • எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.
    • எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது என மம்தா பானர்ஜி சாடினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை நிறுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அடிப்படை தயார் நிலை, போதுமான திட்டமிடல், தெளிவான தகவல் தொடர்பு இல்லாமல், அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மீதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது எனவு அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

    அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், அவர்கள் என்னை காயப்படுத்தினால், என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பேன்.

    நீ உண்மையான வாக்காளர் என்றால் பயப்படாதே. இப்போது நீ வங்காளதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், நீ இந்தியனாக இருக்க விரும்புகிறாய் என்றும் எழுத வைப்பார்கள்.

    பிறகு என்ன நடக்கும்? பயப்படாதே. நான் இங்கே இருக்கும்போது, உன்னை ஒதுக்கி வைக்க அனுமதிக்க மாட்டேன்.

    இந்த நிலம் இந்த பா.ஜ.க.வுக்கு பயப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் இங்கே இருக்கும் வரை, அவர்கள் உன்னைத் தொட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    தேர்தல் ஆணையத்தின் வேலை பாரபட்சமற்றதாக இருப்பதுதான், பாஜகவின் ஆணையமாக இருப்பது அல்ல.

    டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கு வங்கத்துக்கு துணிச்சல் உண்டு. 2029ல் மத்தியில் இருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய யாத்திரை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.
    • இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

    ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

    அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

    சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஷாங்காய் விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமைமிக்க இந்தியக் குடிமகனான பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கை சீன குடியேற்ற அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் நடத்திய விதம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவரை அவமானப்படுத்துவதும், இன ரீதியாக கேலி செய்வதும் மிகவும் கொடூரமானது.

    அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். இது தொடர்பாக எந்தவொரு குற்றச்சாட்டும் அடிப்படையற்றது மற்றும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது. இத்தகைய செயல் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் ஏற்படுத்துவதாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை அவசரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம்
    • சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    பீகாரில் உள்ள பெண்களின் தாய்பாலில், அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் இருப்பதாக மருத்துவர்கள் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    போஜ்பூர், சமஸ்திபூர், ககாரியா, நாலந்தா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தாய்மார்களின் தாய்பாலில் யுரேனியம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம் என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்தகைய தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால், சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாதிக்கப்பட்ட சாந்து சன்யாசி, செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலம் இருந்துள்ளது
    • இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது முழு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கில், திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரணை

    மேற்குவங்கத்தின் மிட்னாபூர் மாவட்டம் கட்டாலில், தண்ணீர் என நினைத்து ஆசிட்டை ஊற்றி சமைத்த உணவை சாப்பிட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, கடுமையான வயிற்று வலி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் தீவிரமாக உடனே ஆறுபேரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிலம் கலந்த உணவை உட்கொண்டதே பாதிப்புக்கான காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை அளித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினரின் உடல்நிலை மோசமடையை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.


    மருத்துவமனையில் சேர்க்கும்போதே ஒரு குழந்தையின் உடல்நலம் மோசமாக இருந்துள்ளது

    தற்போது அங்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் கொள்கலன்களைப் போன்ற மற்றொரு கொள்கலனில் அமிலம் வைக்கப்பட்டிருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சாந்து சன்யாசி, செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலத்தை வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, சன்யாசியின் வீட்டிற்கு வந்த உறவினர் தண்ணீர் என நினைத்து அமிலத்தை ஊற்றி சமைத்துள்ளார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆபத்தான பொருட்களை எச்சரிக்கையாக வைத்திருக்குமாறு அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  மேலும் இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது முழு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கில், திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
    • பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

    சென்னை:

    கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திராவிடம் என்பது கற்பனை எனக்கூறிய ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாஜகவின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

    திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ளது என்பது ஆளுநருக்கு தெரியாதா?

    எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.

    தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

    தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது என்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
    • தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மாவட்ட செயலாளர்கள் விளக்கி கூறினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.

    தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் அ.தி.மு.க.வினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் அந்த பணிகளில் எப்படி கவனமாக செயல்பட வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகளை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினர் அனைவரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் முறைகேடாக பதிவாகி உள்ள ஓட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் மாவட்டச் செயலாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த படியே மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றியும் அவர்கள் விளக்கி கூறினார்கள்.

    • பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது
    • குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    சத்தீஸ்கரில், வீட்டுப்பாடம் முடிக்காததால் 4 வயது மாணவன் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    சத்தீஸ்கரின் சூரஜ்பூர் நகரில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் பள்ளி திங்கள்கிழமை காலை வழக்கம்போல திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வந்தநிலையில், நர்சரி வகுப்பில் ஆசிரியர் காஜல் சாஹு வீட்டுப்பாடங்களை சரிப்பார்த்துள்ளார்.

    அப்போது அதில் ஒரு மாணவன் மட்டும் வீட்டுப்பாடத்தை முடிக்காநிலையில், அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் மற்றொரு ஆசிரியரின் உதவியோடு மாணவனின் சட்டையில் கயிற்றால் கட்டி, பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் அவனை தொங்கவிட்டுள்ளார். நான்கு வயது சிறுவன் மணிக்கணக்கில் மரத்தில் தொங்கிய நிலையில், அழுது, கூச்சலிட்டுள்ளான். குழந்தையின் அழுகுரலை அலட்சியப்படுத்திய ஆசிரியர் அங்கேயே நின்றுள்ளார். இதனை அருகில் இருந்த வீடியோ எடுத்துள்ளார். அதனை தடுக்க முயன்றுள்ளனர்.


    சம்பவம் நடைபெற்ற தனியார் பள்ளி

    இருப்பினும் அவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து வட்டார கல்வி அதிகாரி (BEO) டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் தனது கவனத்திற்கு வந்துள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) அஜய் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.

    தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளி நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உள்ளூர்வாசிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    • வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
    • வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.

    அவினாசி:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி அவினாசியில் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவினாசி வாணியர் வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தின் பிற தாலுகாக்களில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார். அவருடன் கலெக்டர் மணிஷ் நாரணவரே , அவினாசி தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜபிரபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
    • பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 51.16 அடியாக உள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் எந்த நேரத்திலும் திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.

    எனவே பாலாற்றின் கரையோரத்தில் உள்ள தேவனூர் புதூர், பொன்னாலம்மன் சோலை, தீபாலப்பட்டி, அர்த்தநாரி பாளையம், ஆண்டியூர் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருமூர்த்தி அணை நீர்வளத்துறை உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முறைகேடுகள் நடைபெறுவதை கண்டித்தும் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம். எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார் , முன்னாள் எம்.பி., சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் கவுன்சிலர் தங்கராஜ் மருத்துவமனையில் சுவாச பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 

    ×