என் மலர்
இந்தியா

வீட்டுப்பாடம் முடிக்காத 4 வயது சிறுவனை மரத்தில் கட்டி தொங்கவிட்ட ஆசிரியைகள்!
- பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது
- குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கரில், வீட்டுப்பாடம் முடிக்காததால் 4 வயது மாணவன் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் நகரில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் பள்ளி திங்கள்கிழமை காலை வழக்கம்போல திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வந்தநிலையில், நர்சரி வகுப்பில் ஆசிரியர் காஜல் சாஹு வீட்டுப்பாடங்களை சரிப்பார்த்துள்ளார்.
அப்போது அதில் ஒரு மாணவன் மட்டும் வீட்டுப்பாடத்தை முடிக்காநிலையில், அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் மற்றொரு ஆசிரியரின் உதவியோடு மாணவனின் சட்டையில் கயிற்றால் கட்டி, பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் அவனை தொங்கவிட்டுள்ளார். நான்கு வயது சிறுவன் மணிக்கணக்கில் மரத்தில் தொங்கிய நிலையில், அழுது, கூச்சலிட்டுள்ளான். குழந்தையின் அழுகுரலை அலட்சியப்படுத்திய ஆசிரியர் அங்கேயே நின்றுள்ளார். இதனை அருகில் இருந்த வீடியோ எடுத்துள்ளார். அதனை தடுக்க முயன்றுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற தனியார் பள்ளி
இருப்பினும் அவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து வட்டார கல்வி அதிகாரி (BEO) டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் தனது கவனத்திற்கு வந்துள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) அஜய் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளி நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உள்ளூர்வாசிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






