search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
    X

    பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

    • புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
    • ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பின் அளவை கண்டறியலாம்.

    குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்..

    புற்றுநோய்

    உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பல பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் வயது பெண்கள் கூட இந்த புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் 20 வயதை கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    மார்பக புற்றுநோயும் வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்குரிய பரிசோதனையையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.

    கொழுப்பு பரிசோதனை

    ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால், பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிய வேண்டியது அவசியமானது. சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே கொழுப்பின் அளவை கண்டறிந்துவிடலாம். அதனால் 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாவது கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

    தைராய்டு பரிசோதனை

    கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உண்டாகும். ஆரம்ப நிலையிலேயே தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.

    கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துவிட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம்.

    கண்பார்வை பரிசோதனை

    பெண்கள் பலரும் கண் பார்வை பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அவசியத்தை புரிந்து கொள்வதுமில்லை. கண் பார்வையில் சிறு குறைபாடு தென்படும்போதே கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

    நாளடைவில் கண் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்ணாடி அணியுமாறு மருத்துவர் பரிந்துரைத்த நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    எலும்பு அடர்த்தி சோதனை

    எலும்புகள் பலவீனம் அடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எலும்புகளின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். எலும்பின் அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்து கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

    பெண்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் சமயத்தில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

    Next Story
    ×