search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வறட்சியிலும் கவலை வேண்டாம், மழைநீரை சேமிக்கும் பண்ணை குட்டை
    X

    வறட்சியிலும் கவலை வேண்டாம், மழைநீரை சேமிக்கும் பண்ணை குட்டை

    • வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.
    • மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும்.

    இறங்கி வரும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், மண் அரிப்பை தடுக்கவும், பயிர் விளைச்சலில் மகசூல் கிடைத்திடவும், கால்நடைகள் நீர் பருகுவதற்கு வாய்ப்பாக அமைவதும், பழமரக்கன்றுகள், மரக்கன்றுகள் அமைத்து கூடுதல் வருமானத்தை பெருக்கவும் பண்ணை குட்டைகள் உதவுகின்றன.

    மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும். பருவ மழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி விவசாயிக்கு இயற்கை தரும் கொடையான மழைநீரை தனது சொந்த நிலத்தில் சேகரிப்பது பண்ணை குட்டைகள்தான்.

    இறுதிப்பாசனத்திற்கும், அதன் இடையே தேவைப்படும் உயிர் பாசனத்திற்கும், வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.

    புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழிவையே கொண்டது. தமிழகத்துக்கு 32 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலும், 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையாலும், 5 சதவீதம் குளிர்காலத்திலும், 15 சதவீதம் கோடைகாலத்திலும் மழை பொழிவு கிடைக்கிறது.

    இந்த மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும். பண்ணை குட்டைகளை விவசாய நிலங்களில் அமைக்கலாம். இதற்காக தேர்வு செய்யப்படும் இடம், வயல்களில் மொத்த வடிகால்களையும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்புக்கு 8-க்கு 5 மீட்டர் அல்லது 10-க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். மானாவாரியில் 40-க்கு 40 மீட்டர் நீள அகலம் உள்ளதாக அமைப்பது நல்லது. ஆழம் 2 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து குழிவெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும்பகுதியை வயலில் வரப்பினை பலப்படுத்தவும், குழிப்பகுதியை சுற்றி அணைக்கவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் குழியின் கொள்ளளவு 40 கனமீட்டர் அதாவது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். மழை பெய்யும் போது ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக பண்ணைக்குட்டை குழிக்குள் வந்து சேரும்.

    பண்ணைக்குட்டையில் இருக்கும் நீரை மோட்டார் அல்லது மனித சக்தி மூலம் இறைத்து பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் கம்பு, சோளம், பருத்தி, பயறு வகை, சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு இந்த பண்ணை குட்டை நீரால் பாசனம் செய்து பலன் பெற முடியும். பண்ணை குட்டைகளை ஆண்டுதோறும் தூர்வாருதல் அவசியம். அதில் வளர்ந்து காணப்படும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும். குட்டைகளை சுற்றி மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பேண வேண்டும்.

    பண்ணைக் குட்டைகளில் நீர் தேக்குவதால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. இது போல், மழைநீரை ஒரு இடத்தில் தேக்கும் போது சுற்றி உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சுற்றுப்புறத்தில் குளிர்ந்த காற்று வீசும்.

    உபரிநீரின் அளவை பொறுத்து பண்ணை குட்டையில் மீன் வளர்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கவும், பண்ணைக்காடுகள் வளர்க்கவும், நாற்றுகள் பராமரிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் இந்த நீரை பயன்படுத்தலாம்.

    Next Story
    ×