search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மிகவும் உக்கிரமாகும் கோடை வெப்பம்
    X

    மிகவும் உக்கிரமாகும் கோடை வெப்பம்

    • உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்.
    • வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

    உச்சி வெயிலில் சாலையில் நடந்து செல்லும் சிலர் திடீரென மயக்கம் அடைந்து விழுவதை காணலாம்.

    வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து மயக்கம் அடைவது மற்றும் உடல் உறுப்புகள் செயல்படாமல் போவது 'ஹீட் ஸ்ட்ரோக்' அல்லது 'வெப்ப பக்கவாதம்' என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது.

    சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பநிலை உயர்ந்து மற்றும் உடலில் ஏற்படும் நீர் வறட்சி காரணமாக இது ஏற்படுகிறது.

    இதன் காரணமாக, உடலின் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுகிறது.

    ஒருவருக்கு வெப்பத்தால் பாதிப்பு ஏற்படும்போது தலைச்சுற்றல், தலைவலி, வறண்ட தோல், வியர்வை இல்லாமை, குமட்டல் மற்றும் வாந்தி, விரைவான அல்லது பலவீனமான இதய துடிப்பு, மூச்சு வாங்குதல், குழப்பம், தடுமாற்றம், வலிப்பு, மயக்கம் ஆகியவை ஏற்படலாம்.

    ஒருவருக்கு வெயில் காலங்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் அவரை குளிர்விக்க முதலுதவி செய்ய வேண்டும்.

    பாதிக்கப்பட்ட நபரை நிழலான பகுதியில் அமர்த்தி, ஆடைகளை தளர்த்தி ஓய்வு கொள்ள செய்ய வேண்டும். உடலில் காற்று படும்படி விட வேண்டும்.

    நோயாளியின் அக்குள், இடுப்பு, கழுத்து மற்றும் முதுகில் ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுத்து உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டும். இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவரின் உதவியை நாடி தகுந்த மருந்துகளின் துணையோடு அவரை பாதிப்பில் இருந்து மீளச்செய்ய வேண்டும்.

    வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்களாகவோ, சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வது ஆபத்தாக முடியும். இவர்களுக்கு சற்று காற்றுபடும்படி ஓய்வு கொடுத்து தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதே தீர்வாகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

    உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும், முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்,

    இளநீர் போன்ற திரவங்களை கொடுங்கள், தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்கவேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    Next Story
    ×