என் மலர்
ஆசிரியர் தேர்வு
- வித் லவ் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது, 'வித் லவ்' படத்துக்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா என்னை கட்டிப் பிடித்து, என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தார். அப்போது நான் கேட்டேன். 'அப்பா இது தான் வெற்றியா?" என்று...
அப்பாவின் அந்த சிரிப்பை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. 18 ஆண்டு திரைப்பயணத்தில் நான் அடைந்த முதல் வெற்றி இது. 'வித் லவ்' படக்குழுவால் தான் அது அமைந்தது. அனஸ்வரா ராஜனை பார்த்து, 'இத்தனை நாள் எங்கங்க இருந்தீங்க...' என்று அப்பா ஆச்சரியத்துடன் கேட்டார். அபிஷனையும் பாராட்டி தீர்த்துவிட்டார். இந்த குழு மீண்டும் இணைந்தாலும் நான் ரெடி. ஓகே சொல்லட்டும். பட்டறையை போட்டுடலாம், என்றார்.
- தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை.
- தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1 கோடியே 31 லட்சம் குடும்ப தலைவிகள் பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த 1000 ரூபாய் வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது. எந்தெந்த கட்சி எவ்வளவு பணம் உயர்த்தி தருவார்கள் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அத்துடன் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் என அறிவித்து இருந்தார்
இதற்கு அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் செய்திருந்தார். தி.மு.க.வின் திட்டங்களையே காப்பி அடித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளார் என்று கூறி இருந்தார்.
அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பண மாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கி றது.
வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் தி.மு.க.வும் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து விட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் பல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அவர் மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்தது.
- இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை .
கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை மாதம் வெளியான ஆரம்பகட்ட அறிக்கையில் எரிபொருள் ஸ்விட்சை திடீரென அணைந்ததால் 2 என்ஜின்களும் செயலிழந்தது விபத்து காரணம் என்று தெரிய வந்தது.
விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை வேண்டுமென்றே அணைத்தார் என அமெரிக்க ஊடகங்கள் கூறி வந்தன.
இதற்கிடையே, அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' அண்மையில் வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த அறிக்கையில், "விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்.
வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவந்துள்ளது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்தது.
போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஊகங்களே என்றும் மத்திய விமான போக்குவரத்துக்கு துறையின் கீழ் இயங்கும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) விளக்கமளித்துள்ளது.
புலனாய்வு இன்னும் நடைபெற்று வருகிறது. இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்று AAIB தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை.
- அண்மையில் மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை.
பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்ரான் கான் உடல்நிலை குறித்து அறிந்து வர, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளர், சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த பிறகு இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீதப் பார்வை மட்டுமே இருப்பதாகவும், வலது கண் நரம்பில் அடைப்பு காரணமாக இது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும்
2025 அக்டோபர் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாகப் பார்வை மங்கத் தொடங்கியும் சிறை அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததே இந்தப் பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்மபிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து இம்ரான் கானுக்கு முழுமையான பரிசோதனைகளை நடத்த வேண்டும். அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அண்மையில் மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் நீரஜ் குமார் வெள்ளியும், அகில் ஷியரோன் வெண்கலப் பதக்கங்களும் பெற்றனர்.
இந்த 3 இந்திய வீரர்களும் குழு போட்டியில் 1769 புள்ளிகளுடன் தங்கம் வென்றனர்.
- இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது.
- தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக என தெரிவித்தார்.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
பட்ஜெட்டில் "ஜீரோ" கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?
தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு "ஜீரோ"-வைத் திருப்பியளிப்போம்.
தமிழ்நாடு vs தேசிய ஜனநாயகக் கூட்டணி எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக! என பதிவிட்டுள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.
நமீபியாவின் ஜெர்ஹார்டு எராமஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஸ்டீன் கேம்ப் 29 ரன்னும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
- அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்,
"மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என்னை நேசிக்கிறார்... அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" எனப் பேசியிருந்தார். அதாவது காதல் என்ற வார்த்தையை அரசியல் ரீதியாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக நகைச்சுவையாக, "அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" என்று விளக்கம் அளித்தார்.
கடந்தாண்டு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான வர்த்தகப் பதற்றங்கள் நிலவியபோது ட்ரம்ப் இந்தக் கருத்தை முன்வைத்திருந்தார். தற்போது இந்தியா-அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை... இருப்பினும், அத்தகைய வீடியோ இருந்தால், அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, நாங்கள் அதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
- மொத்தமுள்ள 88 ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் அடங்கும்.
- 96 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில், 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மெகா ஒப்பந்தத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கி உள்ளது. மொத்தம் 114 விமானங்களில், 88 ஒற்றை இருக்கை கொண்டவை, 26 இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் ஆகும்.
18 விமானங்கள் பிரான்ஸிலிருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த விமானங்களில் 30% முதல் 60% வரை இந்தியத் தயாரிப்பு பாகங்கள் மற்றும் ஆயுதங்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரபேல் விமானங்கள் காட்டிய அபார செயல்திறன் மற்றும் சீனாவின் ஏவுகணைகளை முறியடித்த விதம் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கான இறுதி அங்கீகாரத்தை வழங்கும்.
மேலும், பிப்ரவரி 19-20 தேதிகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வரும்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.
- படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
- படக்குழு சார்பில் மற்றொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது திரைப்படமாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". இந்தப் படத்தின் டைட்டில், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படக்குழு சார்பில் மற்றொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதயம் முரளி திரைப்படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் நடித்துள்ளதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
- கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள்.
- கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் தேடு பொறி என்ஜின் மட்டுமின்றி யூடியூப், பிளேஸ்டோர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தவிர்த்து ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்து கிட்டத்தட்ட ஏகபோக உரிமையை அனுபவித்து வருகிறது.
உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களான அமேசான், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால் இதற்கு கொஞ்சம் வித்தியாசமாக கூகுள் யோசித்து தங்களுடைய ஊழியர்களை நீக்கம் செய்கிறது. அந்த திட்டத்தின் பெயர்தான் 'விருப்ப ஓய்வு' (பை அவுட்). சட்ட பாதுகாப்பு, நிறுவனத்தின் பெயரை பாதுகாக்கவும் மற்றும் ஊழியர்கள் மாற்று வேலை தேடுவதற்கு நேரம் அமைக்கும் வகையில் அவர்களுக்கு குறிப்பிட்ட மாத சம்பளம் மற்றும் பிற பண பலன்களை அளித்து வெளியேற்றுவதே விருப்ப ஓய்வுத்திட்டம் ஆகும்.
கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள். இதில் என்ஜினீயர்கள், தரவு ஆய்வாளர்கள், விளம்பர பிரிவு, வர்த்தக பரிவு உள்ளிட்டோர் அடங்குவர். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருப்ப ஓய்வு பெற்று குறிப்பிட்ட ஊழியர்கள் வெளியேறவில்லை என்றால் பணிக்கு லாயக்கில்லை என அந்த நிறுவனமே பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மறைமுகமாக அறிவித்திருந்தது. தற்போது கூகுள் நிறுவனம் மீண்டும் விருப்ப ஓய்வு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் 5 சதவீத ஊழியர்களுக்கு கூகுள் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர் எழுதியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் இந்த நடவடிக்கை குறித்து அவர் அறிவித்துள்ளார்.
அதில் அவர் "2025-ம் ஆண்டில் நீங்கள் சாதித்த அனைத்தினாலும் நாம் இந்த ஆண்டை வலுவான நிலைப்பாட்டில் தொடங்குகிறோம். ஆனால் போட்டி நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; முன்னேற்றத்தின் வேகம் மின்சார வேகத்தைப் போன்றது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவை தாராளமாக ஏற்க வேண்டும்" என்று வலியுறுத்திய அவர் "நிறுவனம் செயல்பட வேண்டிய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், அல்லது நிறுவனத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்கள் வெளியேறலாம்" என்று அறிவித்துள்ளார். தீர்வு அணிகள், விற்பனை, நிறுவன வளர்ச்சி உள்ளிட்டவற்றில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார்.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில், நடிகை Vs இயக்குநர் என்ற தலைப்பில் சரஸ்வதி படம் தொடர்பான சுவாரஸ்யமான விடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.






