என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடந்தது.
    • தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல் முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று முன்தினம் அங்கு பொதுத் தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13-வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும்.

    இதில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி, அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

    300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆவலுடன் காத்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பிஎன்பி கட்சிக்கும், அக்கட்சி தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா அரையிறுதியில் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி உடன் மோதினார்.

    சிறப்பாக ஆடிய முசோவா 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முசோவா, கனடாவின் எம்போகாவை சந்திக்கிறார்.

    • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 196 ரன்கள் குவித்தது.
    • நெதர்லாந்து 103 ரன்னில் சுருண்டது.

    டி20 உலகக் கோப்பையில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள அமெரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய அமெரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சைதேஜா முக்காமல்லா 51 பந்தில் 79 ரன்கள் விளாசினார். சுபம் ரஞ்சனே அதிரடியாக விளையாடி 24 பந்தில் 48 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது. அமெரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நெதர்லாந்து 103 ரன்னில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீட் அதிகபட்சமாக 23 ரன்கள் சேர்தார். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 20 ரன்கள் அடித்தார். அமெரிக்க அணி சார்பில் சர்மீத் சிங் 4 விக்கெட்டும், வான் ஸ்கால்வைக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை.
    • மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

    பிப்ரவரி 23-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

    • விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு சிறந்த நடிகர் விருதை பெற்றனர்.
    • விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு சிறந்த நடிகர் விருதை பெற்றனர்.

    2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகளும், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகளும், 2015-16 முதல் 2021-22 வரையிலான மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை சமீபத்தில் வெளியானது. இந்த விருதுகள், சமூக சிந்தனைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சின்னத்திரை தொடர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

    இந்த நிலையில் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

    விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றனர்.

    கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிக்கைக்கான விருதை பெற்றனர்.

    மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களுக்கான விருதை பெற்றன.

    சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு ரூ.1.25 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    • இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி.
    • அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன் முதற்கட்ட அமர்வு நிறைவு பெற்றது.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் எம்.பி. பகவன்தாஸ் ரத்தோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கோஷமிட்டனர். அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் கோப்புகளில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதாக கூறி அவர் ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சிகளின் அமளியால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    மதியம் 12 மணிக்கு சபை கூடியபோது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவடைந்தது. 3 வார விடுமுறைக்குப் பிறகு மக்களவை வருகிற மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மத்திய பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடுகளை நிலைக்குழுக்கள் ஆராயும்.

    இதற்கிடையே அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் எப்ஸ்டீனின் படங்களுடன் கூடிய பெரிய பதாகையையும் வைத்திருந்தனர். மத்திய மந்திரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    அதேபோல் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் முதல்கட்ட அமர்வு நிறைவடைந்தது. 3 வார விடுமுறைக்குப் பிறகு மாநிலங்களவை வருகிற மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
    • அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது.

    இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

    இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

    சுமார் 20 ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாரிக் ரஹ்மான்:    

    வங்கதேசத்தின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் வாரிசான தாரிக் ரஹ்மான் ஒரு காலத்தில் அந்நாட்டு அரசியலில் 'டார்க் பிரின்ஸ்' என்று அழைக்கப்பட்டார்.

    தாரிக் ரஹ்மான் தந்தை ஜியாவுர் ரஹ்மான் ராணுவ அதிகாரியாக இருந்து, பின்னர் பிடிபி கட்சியை தொடங்கி 1977 இல் வங்கதேச அதிபராக பொறுப்பேற்றார். 1981 இல் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அந்த பதவியில் இருந்தார்.

    1981 இல் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கலீதா ஜியா வங்கதேச பிரதமராகவும் பிடிபி கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

    1991 முதல் 1996 வரையும் மற்றும் 2001 முதல் 2006 வரையும் கலீதா ஜியா பிரதமராக இருந்த காலகட்டத்தில் மகன் தாரிக் ரஹ்மான் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

    முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பதால்தான் நிழல் பிரதமர் என்று பொருள்படும் வகையில் அவரை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் டார்க் பிரின்ஸ் என்று அழைத்தன.

    2007 இல் ராணுவ புரட்சி ஏற்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றபோது ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

    17 மாதங்கள் சிறையில் இருந்த தாரிக் ரஹ்மான் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, சிகிச்சைக்காக பிரிட்டன் சென்றார்.

    பிரிட்டனிலேயே தஞ்சம் அடைந்து லண்டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்மான் சுமார் 20 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது தாய் கலீதா ஜியா உயிரிழந்தபோது வங்கதேசம் திரும்பினார்.

    தாயின் மறைவின்பின் பிஎன்பி கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ரஹ்மான் மூன்று மாதங்களில் அக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளார்.

    ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஷேக் ஹசீனாவுக்கு பின் அமைந்த முகமது யூனுஸ் ஆட்சியின் நிச்சயமின்மைக்கு மத்தியில் தாரிக் ரஹ்மான் வங்கதேச மக்களுக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்குகின்றன.

    ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் ஆக்குவேன், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான வங்கதேசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின்போது அவர் வழங்கியிருந்தார்.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தாரிக் வன்மையாகக் கண்டித்தார்.

    இதற்கிடையே 2004 அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில் தாரிக் ரஹ்மானுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • வித் லவ் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

    இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது, 'வித் லவ்' படத்துக்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    அந்த சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா என்னை கட்டிப் பிடித்து, என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தார். அப்போது நான் கேட்டேன். 'அப்பா இது தான் வெற்றியா?" என்று...

    அப்பாவின் அந்த சிரிப்பை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. 18 ஆண்டு திரைப்பயணத்தில் நான் அடைந்த முதல் வெற்றி இது. 'வித் லவ்' படக்குழுவால் தான் அது அமைந்தது. அனஸ்வரா ராஜனை பார்த்து, 'இத்தனை நாள் எங்கங்க இருந்தீங்க...' என்று அப்பா ஆச்சரியத்துடன் கேட்டார். அபிஷனையும் பாராட்டி தீர்த்துவிட்டார். இந்த குழு மீண்டும் இணைந்தாலும் நான் ரெடி. ஓகே சொல்லட்டும். பட்டறையை போட்டுடலாம், என்றார்.

    • தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை.
    • தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1 கோடியே 31 லட்சம் குடும்ப தலைவிகள் பெற்று வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த 1000 ரூபாய் வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது. எந்தெந்த கட்சி எவ்வளவு பணம் உயர்த்தி தருவார்கள் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

    அத்துடன் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் என அறிவித்து இருந்தார்

    இதற்கு அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் செய்திருந்தார். தி.மு.க.வின் திட்டங்களையே காப்பி அடித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளார் என்று கூறி இருந்தார்.

    அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

    தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!

    பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பண மாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!

    1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கி றது.

    வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!

    திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    இதன் மூலம் தி.மு.க.வும் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து விட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் பல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அவர் மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்தது.
    • இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை .

    கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

    ஜூலை மாதம் வெளியான ஆரம்பகட்ட அறிக்கையில் எரிபொருள் ஸ்விட்சை திடீரென அணைந்ததால் 2 என்ஜின்களும் செயலிழந்தது விபத்து காரணம் என்று தெரிய வந்தது.

    விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை வேண்டுமென்றே அணைத்தார் என அமெரிக்க ஊடகங்கள் கூறி வந்தன.

    இதற்கிடையே, அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' அண்மையில் வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த அறிக்கையில், "விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்.

    வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவந்துள்ளது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்தது.

    போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஊகங்களே என்றும் மத்திய விமான போக்குவரத்துக்கு துறையின் கீழ் இயங்கும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) விளக்கமளித்துள்ளது.

    புலனாய்வு இன்னும் நடைபெற்று வருகிறது. இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்று AAIB தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.   

    • சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை.
    • அண்மையில் மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை.

    பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. 

    இந்நிலையில் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்ரான் கான் உடல்நிலை குறித்து அறிந்து வர, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளர், சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த பிறகு இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    அதில், இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீதப் பார்வை மட்டுமே இருப்பதாகவும், வலது கண் நரம்பில் அடைப்பு காரணமாக இது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும்

    2025 அக்டோபர் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாகப் பார்வை மங்கத் தொடங்கியும் சிறை அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததே இந்தப் பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சர்மபிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து இம்ரான் கானுக்கு முழுமையான பரிசோதனைகளை நடத்த வேண்டும். அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    அண்மையில் மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.

    ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் நீரஜ் குமார் வெள்ளியும், அகில் ஷியரோன் வெண்கலப் பதக்கங்களும் பெற்றனர்.

    இந்த 3 இந்திய வீரர்களும் குழு போட்டியில் 1769 புள்ளிகளுடன் தங்கம் வென்றனர்.

    ×