search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலை சாமி தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை: தேவஸ்தானம்
    X

    சபரிமலை சாமி தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை: தேவஸ்தானம்

    • நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும்.
    • 18-ம் படிக்கு மேல்பகுதியில் நகரும் கூரை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.

    திருவனந்தபுரம் :

    சபரிமலையில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அதன் தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதியை கேரள அரசால் தொடங்கப்பட்டது. அதனை கேரள போலீசார் நிர்வகித்து வந்தனர். இதையடுத்து தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆணை பிறப்பிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மனு மீதான விசாரணையின் போது, தேவஸ்தானத்திற்கு ஆதரவான தீர்ப்பை கேரள ஐகோர்ட்டு வழங்கியது. அதைதொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் இனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

    மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும். ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம்.

    இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை. சபரிமலை சன்னிதானத்தில் 18-ம் படிக்கு மேல்பகுதியில் நகரும் கூரை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். ரூ.1.5 கோடி செலவில் பம்பையில் அலங்கார வளைவு அமைக்க கேரள ஐகோர்ட்டில் அனுமதி கோரப்படும். பாதுகாப்பு ஊழியர்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் புதிய அறைகள் கட்டப்படும், தகவல் மையமும் தொடங்கப்படும். பம்பை மலை முகடு முதல் கணபதி கோவில் வரை பம்பை ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடி செலவில் 165 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×