
விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல வகையான வண்ண, வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 38 அடி உயரம், 38 டன் எடையுள்ள பிரமாண்ட தேரில் அய்யா வைகுண்டர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது, தேரை வரவேற்கும் விதமாக பக்தர்கள் செவ்வாழை, தேங்காய், பூ, பழங்களுடன் தேரின் முன் அணிவகுத்தனர். செண்டை மேளம் முழங்க தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இந்த தேரோட்ட விழாவில், அமைச்சர் க.பாண்டிய ராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், முன்னாள் எம்.பி.ஜெயதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த விழாவைக் காண தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர் வீதியின் வழியாக வலம் வந்து மாலையில் தேர்நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வந்தார். அதன்பின்னர், பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெற்றது. இரவில் அகண்ட நாமம், அய்யா பூப்பல்லக்கில் பதிவலம் வருதல், திருநாமக் கொடி அமர்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் திருவிழா நிறைவடைந்தது.