search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்த காட்சி.
    X
    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்த காட்சி.

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் அரைத்த பெண்கள்

    ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காரைக்குடி முத்து மாரியம்மன் கோவிலில் பெண்கள் மஞ்சளை அம்மியில் வைத்து அரைத்தனர். அந்த மஞ்சளைக் கொண்டு இன்று அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது.
    காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு அபிஷேகம், பால்குடம், திருவிளக்கு பூஜை நடைபெறும். அதேபோல் இந்தாண்டு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் பெண்கள் அம்மியில் வைத்து மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக 250 கிலோ மஞ்சள் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தது. அங்கு மஞ்சள் அரைக்க 37 அம்மிகள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்ததும், பெண்கள் அம்மியில் வைத்து மஞ்சளை அரைக்க தொடங்கினர்.

    இந்த மஞ்சளை கொண்டு இன்று அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன், நகர செயலாளர் சரவணன், கோவில் கணக்கர் அழகு பாண்டி மற்றும் லலிதா சேவை குழுவினர் கலந்துகொண்டனர். இதையடுத்து 2-வது வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜையும், 3-வது வெள்ளிக்கிழமை 1008 சங்காபிஷேகமும், 4-வது வெள்ளிக்கிழமை கோமாதா பூஜையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் செயல் அலுவலர் பிரதிபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×