என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
- முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும்.
அமாவாசை விரதங்களில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசை ஆகிய மூன்றும் விசேஷமானவை.
அமாவாசையன்று, காலையில் எழுந்து குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள்.
அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.
அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள்.
அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற்றிருக்கும்.
விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
தரையிலோ, எட்டும் இடங்களிலோ வைத்தால் நாய்கள், பன்றிகள் தின்றுவிடும்.
முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும்.
காக்கைகள் உண்டபிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவுமுறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் பயன்படுத்த வேண்டுமேயழிய, பிறருக்கு தானமாகத் தரக்கூடாது.
அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக் கூடாது.
பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- இந்த சன்னதியில் அபூர்வமான மகாலட்சுமி சாலக்கிராமம் உள்ளது.
- இந்த சுவாமி எளிமையாக இதனை மட்டும் ஏற்று பித்ருக்களைத் திருப்தி செய்து வைப்பதாக ஐதீகம்.
வணங்க வேண்டிய தலம்:
நென்மேலி (நெம்மேலி)
இருப்பிடம்:
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் பேருந்து சாலையில் உள்ளது.
மூலவர்: ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள்
உற்சவர்: ஸ்ரார்த்த சம்ரக்ஷண நாராயணர்
தீர்த்தம்: அர்கிய புஷ்கரணி
சேஷத்ரம்: சம்ரக்ஷண சேஷத்ரம்
விருக்ஷம்: அக்ஷய வடம்
ஆராதனம்: வைகானச ஆகமம்.
தல வரலாறு:
இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த யாக்ஞ வல்கியரை குருவாகக் கொண்டு வாழ்ந்து வந்த யக்ஞ நாராயண சர்மா சரசவாணி என்ற தம்பதிகள் விஷ்ணுவின் மீது பெரும் பக்தி கொண்டு இருந்தனர்.
இவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தையும், தெய்வத் திருப்பணிகளுக்குச் செலவு செய்தனர்.
எனவே அரச தண்டனைக்கு ஆளானார்கள். அரச தண்டனையை ஏற்க மனமில்லாததால் திருவிடந்தை என்ற திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அவர்கள் உயிர் துறப்பதற்கு முன்பாக தாங்கள் இறந்த பின்பு தங்களுக்கு ஈமக்கரியைகளைச் செய்ய வாரிசு இல்லையே என மனம் வருந்தினர்.
அவர்களுடைய கடைசி கால ஆசையை நிறைவேற்ற எம்பெருமானே முன்னின்று கிரியைகள் செய்து வைத்ததாக பெருமானே சாட்சியம் கூறினார்.
அதன் வழியே இன்றும் தன் சன்னதியில் அந்த வழி வந்தவர்களே தீர்த்தம், பிரசாதத்தை முதலில் ஸ்வீகரிக்கிறார்கள்.
மேலும் இந்த சன்னதியில் அந்த திவானின் வேண்டுகோளுக்கிணங்க வாரிசுகள் இல்லாதவர்களுக்கும், சிரார்த்தம் செய்ய இயலாதவர்களுக்கும், தானே முன்னின்று சிரார்த்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் (பகல் 12 மணி முதல் 1 மணி வரை) ஒரு காலம் ஆராதனம் மட்டும் ஏற்று விரதமிருக்கிறார்.
இந்த சன்னதியில் அபூர்வமான மகாலட்சுமி சாலக்கிராமம் உள்ளது.
தரிசிப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் தொழில் மேன்மையும், வியாபார அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும், குடும்ப அமைதியும் கிடைக்கும்.
இங்கு சிரார்த்தம் செய்ய விரும்புபவர்கள் அர்ச்சகரிடம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த பூஜை பகல் 12 மணிக்கு நடைபெறும். கலந்து கொள்பவர்கள் காலை 11.30 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும்.
இங்கு சிரார்த்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடைபெறும், பூஜையில் தங்கள் பித்ருக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரக்ஷணமாகும்.
இந்த சுவாமிக்கு நிவேதிக்கப்படும் வெண் பொங்கல் அல்லது தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் வைத்த துவையலும் சிரார்த்த தளிகையாகும்.
இந்த சுவாமி எளிமையாக இதனை மட்டும் ஏற்று பித்ருக்களைத் திருப்தி செய்து வைப்பதாக ஐதீகம்.
தினமும் நடைபெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியன்று கலந்து கொள்வதோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளில் செய்து வைப்பதோ 'கயா' சென்று சிரார்த்தம் செய்த பலனைக் கொடுக்கும்.
- சிலர் உடன்பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் காக்கின்றனர்.
- புற்றுக்குப் பால் வார்த்து, புற்று மண்ணையே கவசக்காப்பாக அனைவரும் நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.
ஆடி மாதம் வளர்பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாகத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதம்.
இதனால் நாக தோஷங்கள் அகலும், மகப்பேறு கிடைக்கும்.
நாக சதுர்த்தியன்று நாகக்கல்லைப் பிரதிஷ்டை செய்தால் மகப்பேறு கிடைப்பது உறுதி.
விரதப்பயனால் பிறந்த குழந்தைகளுக்கு நாகசாமி, நாகப்பன், நாகராஜன், நாகலட்சுமி, நாகம்மை என்று நாகத்தின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.
சிலர் உடன்பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் காக்கின்றனர்.
புற்றுக்குப் பால் வார்த்து, புற்று மண்ணையே கவசக்காப்பாக அனைவரும் நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.
வடநாட்டில் கொண்டாடப்படுகிற ராக்கி அல்லது ரட்சாபந்தனுக்கு நிகரானது நாக சதுர்த்தி விரதம்.
- இத்தலத்து நாகராஜரை குலதெய்வவமாக வழிபடுவோரும் உண்டு.
- இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
நாகராஜா மற்றும் நாகரம்மன் என்னும் நாக தெய்வத்தின் பெயரையே தனதாக்கின் கொண்ட திருத்தலம் "நாகர்கோவில்" ஆகும்.
இத்தலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராக விளங்குகிறது.
இந்த நாக தெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செய்வதன் மூலம் (உப்பு, மிளகு சமர்ப்பித்தல்) தோல் வியாதிகள் நீங்குவதோடு, உடல் உறுப்புகளும் நலம் பெறும் என்று நம்பிக்கை காலங்காலமாக இப்பகுதி மக்களிடையே பரவிக் கிடக்கிறது.
நாகர்கோவிலின் மத்தியில் அமைந்துள்ள இந்த நாகராஜர் ஆலயத்தில் ஐந்து தலை நாகராஜர் மூலவராகக் காட்சி தருகிறார்.
மூலவரைச் சுற்றி எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படுகிறது.
அர்ச்சகர் அந்த நீரில் நின்று கொண்டுதான் வழிபாடுகள் செய்கிறார்.
இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
இதிலிருந்து எடுக்கப்படும் மண்ணே பக்தர்களுக்குப் பிரசாதமாகத்தரப்படுகிறது.
இத்தலத்து நாகராஜரை குலதெய்வவமாக வழிபடுவோரும் உண்டு.
குடும்ப குலதெய்வம் தெரியாதவர்களும் இவரை வணங்குகின்றனர்.
இத்தலத்தில் ஆயில்ய நட்சத்திர நாட்கள் மற்றும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு கேரளா மற்றும் தமிழ்நாடு மக்கள் வந்து வழிபாடுகள் செய்கின்றனர்.
ஒன்பது ஆயில்ய நட்சத்திர நாட்களில் விரதமிருந்து நாகரை வழிபட பிள்ளைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.
கோவில் முகப்பில் காணப்படும் நாகர் சிலைகளால் சூழப்பட்ட இரு அரச மரங்களை மகப்பேறு வேண்டுவோர் சுற்றி வலம் வந்து வழிபடுகின்றனர்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவில் நகரம் திருவிழாக் கோலத்துடன் காட்சியளிக்கும்.
இந்த ஆலயத்தை நாகங்கள் காவல் புரிவதாக ஒரு ஐதீகம் உள்ளது.
இத்தலத்தில் உள்ள ஐந்து தலை நாகம் போன்று காட்சியளிக்கும் நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவ அடையாளமாகவே எண்ணுகின்றனர்.
ஆலயத்தில் நிறைய நாகலிங்க மரங்கள் உள்ளன. இந்தப் பூவைக் கொண்டே நாகராஜருக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.
தற்போது மூலவர் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் புல்லும் புதரும் மண்டிக்கிடந்ததாம்.
அங்கே புல்லறுத்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் அரிவாள்பட்டு, புதருக்குள்ளிருந்த ஐந்து தலை நாகத்தின் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டதாம்! அதைக்கண்டு அஞ்சிய அந்தப் பெண் ஊராரிடம் சொல்ல, ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த இடத்தில் சிறு கோவில் கட்டி வணங்க ஆரம்பித்தனர்.
அவ்வாறு உருவானதே இந்தக் கோவில் என்கிறார்கள்.
- சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை திதி என்கிறோம்.
- ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விஷேசத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
வானில் தோன்றும் நட்சத்திரங்கள் அத்தனையையும் 27 பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் நவகிரகங்களின் நிலையைக் கொண்டே, பூமியில் வாழும் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய ஜீவராசிகளும், மரம்செடிகொடிகளும், மலைகளும் ஏற்றத்தாழ்வு பெறுகின்றன.
நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் ஆகிய ஐந்தும் தான் ஆதாரமாக உள்ளன.
இதைத்தான் பஞ்சாங்கம் (பஞ்ச+அங்கம்) என்று சொல்கிறார்கள். இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும்.
விரோதிகள் வலுவிழப்பார்கள். கெட்ட கனவு மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்கா ஸ்நான பலன் கிடைக்கும். கோ தானத்தினால் உண்டாகும் பலன்களுக்கு இணையான சுப பலன்கள் உண்டாகும். நீண்ட ஆயுளும், எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.
தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும்.
பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு அதன் பின்னர் குளித்து விட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பது நல்லது.
பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்த திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்த திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.
திதி என்ற வடமொழி சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை திதி என்கிறோம். மொத்தம் திதிகள் 15 ஆக அமைகின்றன. அமாவாசைக்குப் பிறகும் பவுர்ணமிக்கு பிறகும் இந்த திதிகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக வருகின்றன.
பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி மீண்டும் பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி அமாவாசை ஆகியவை திதிகளாகும்.
திதிகள் மாறி மாறி வருகின்றன. ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விஷேசத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
விநாயகர் சதுர்த்தி, ரிஷி பஞ்சமி, கந்த சஷ்டி, ரத சப்தமி, கோகுலாஷ்டமி, ராம நவமி, விஜய தசமி, வைகுண்ட ஏகாதசி, சிரவண துவாதசி, நரக சதுர்த்தசி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவைகள் திதிகளுடன் இணைந்த விசேஷ நாட்களாகும்.
வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு.
பிரதமை:
வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.
துவிதியை:
அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டிட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.
திருதியை:
குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கவுரி (பராசக்தி).
சதுர்த்தி:
முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.
பஞ்சமி:
எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். இது விசேஷமான திதி ஆகும். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம்.
விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.
சஷ்டி:
சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.
இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.
சப்தமி:
பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்க லாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.
இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.
அஷ்டமி:
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.
நவமி:
சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.
தசமி:
எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிக பணிகளுக்கு உகந்த நாள். பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.
ஏகாதசி:
விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.
துவாதசி:
மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.
திரயோதசி:
சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புகள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
சதுர்த்தசி:
ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.
பவுர்ணமி:
ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.
அமாவாசை:
பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். எந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.
ஆன்மிகம், இறை வழிபாடு, ஐதீகப்படியான பரிகாரங்கள், பிரார்த்தனைகள் பற்றி நீங்கள் எத்தனையோ புத்தகங்களைப் படித்து இருப்பீர்கள். இவற்றுக்கு அடிப்படையாக, அச்சாரமாக இருப்பது பஞ்சாங்க குறிப்புகள் தான். இந்த குறிப்புகளைக் கொண்டே உற்சவங்கள், விழாக்கள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
அதிலும் பஞ்சாங்கத்தின் ஒரு அங்கமான திதிகள், ஆன்மிக வழிபாட்டுக்கு நமக்கு கலங்கரை விளக்காகத் திகழ்கின்றன. இதை வழிபாடுகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். திதிகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வழிபாடுகள் செய்தால், துல்லியமான, முழுமையான பலன்களை சிந்தாமல், சிதறாமல் 100 சதவீதம் அப்படியேப் பெறலாம்.
ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் பொதுவான இறைவழிபாடுகள், பரிகார பூஜைகளில் ஈடுபடுகிறோமேத் தவிர திதிகளை அறிந்து கொண்டு தினமும் அதற்கு ஏற்ப வழிபாடுகளையோ, பரிகாரங்களையோ செய்வதில்லை.
தமிழ்நாட்டு மக்களிடையே இனியும் அந்த குறை இருக்கக் கூடாது என்பதற்காகவே, உங்களுக்கு உதவும் வகையில் திதிகள் மற்றும் அது தொடர்பான வழிபாடுகள் பற்றிய தகவல்கள் கொண்ட இந்த தொகுப்பை மாலைமலர் உங்களுக்குத் தருகிறது.
பொதுவாக நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பதற்கு நாம் பஞ்சாங்கத்தைப் பார்க்கிறோம். பஞ்ச அங்கங்களைத் தன்னிடம் கொண்டதால் அது பஞ்சாங்கம் எனப்படுகிறது. அந்தப் பஞ்ச அங்கங்கள் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவையாகும்.
ஒவ்வொரு நாளும் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற இந்த ஐந்து அங்கங்களை யார் தெரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்குப் பாவம் கிடையாது. மேலும் அவர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
திதியைத் தெரிந்து கொள்வதால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். இதனால் செல்வம் பெருகும்.
வாரத்தைத் தெரிந்து கொள்வதால் தீர்க்கமான ஆயுள் கிடைக்கும். ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைத் தெரிந்து கொள்வதால் முற்பிறவியில் செய்த பாவம் போகும்.
யோகத்தைத் தெரிந்து கொள்வதால் ஆரோக்கியம் உண்டாகும். வியாதிகள் போகும்.
கரணத்தைத் தெரிந்து கொள்வதால் அன்றைய காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தினமும் காலையில் காலண்டர், பஞ்சாங்கம் அல்லது தினசரி நாளிதழ்களில் இருந்து இவற்றைத் தெரிந்து கொள்வது நன்மை பயக்கும். இதற்கு அதிக நேரமும் ஆகாது. எனவே தினமும் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக பஞ்சாங்கத்தில் மறக்காமல் இன்றைக்கு என்ன திதி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த திதியை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப அன்றைய தினத்தில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை செய்தல் வேண்டும். இதனால் தினமும் வாழ்வில் வெற்றி பெறலாம்.
இத்தகைய சிறப்புடைய திதிகளும், வழிபாடுகளும் பற்றி விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
- ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை "ஸ்ரீவித்யை" எனப் போற்றப்படுகிறது.
- பதினைந்து திதி நித்யாக்களும் பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.
பராசக்தியின் அற்புத லீலைகளை ஆயிரம் பெயர்கள் கொண்டு அற்புதமாக விளக்கி இருக்கிறார்கள். அவற்றில், பிரதமை முதல் பவுர்ணமி வரையிலான திதி தேவதைகளால் பூஜிக்கப்படுபவள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை "ஸ்ரீவித்யை" எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.
இந்த ஸ்ரீவித்யாவின் தேவதையான நித்யா, ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.
ஒரு மாதம் என்பது வளர்பிறை, தேய்பிறை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அவை பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது.
மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.
தெய்வங்களை திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம்.
ஆனால், அதே நாளில் இந்த திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை.
அன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெற முடியும்.
கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும். பிரதமை முதல் பவுர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகள் விபரம் வருமாறு:-
(1) பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி
(2) துவதியை –பகமாலினி
(3) திரிதியை – நித்யக்லின்னை
(4) சதுர்த்தி – பேருண்டா
(5) பஞ்சமி – வந்நிவாசினி
(6) ஷஷ்டி – மகாவஜ்ரேஸ்வரி
(7) ஸப்தமி – சிவதூதி
(8) அஷ்டமி – த்வரிதா
(9) நவமி – குலசுந்தரி
(10) தசமி – நித்ய
(11) ஏகாதசி – நீலபதாகா
(12) துவாதசி – விஜயா
(13) திரயோதசி – சர்வமங்களா
(14) சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி
(15) பௌர்ணமி – சித்ராதேவி
இந்த திதி அன்னையர்களின் தோற்றம், வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன? என்பதை அறிவோம்.
(1) காமேஸ்வரி
"காம" எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள்.
மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள்.
பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.
வழிபாடு பலன்கள்:-
குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.
(2) பகமாலினி
இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் "பக" எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள்.
பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு.
சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள்.
வழிபடு பலன்கள்:-
வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.
(3) நித்யக்லின்னா
நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், "நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள்.
சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திரு முடியில் பிறைச்சந்திரனுடனும் அருட்பாலிக்கும் இந்த தேவிக்கு "மதாலஸா" என்ற பெயரும் உண்டு.
தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.
வழிபடு பலன்கள்:-
குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.
(4) பேருண்டா நித்யா
அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு "அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ" என்றும் ஓர் திருநாமம் உண்டு.
உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள். புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார்.
தன் கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.
வழிபடு பலன்கள்:-
விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.
(5) வந்நிவாசினி
அக்னி மண்டலத்தில் உறைவதால் வந்நி வாசினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும்.
தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும்.
அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள்.
தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள்.
வழிபாடு பலன்கள்:-
நோய்கள் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.
(6) மகா வஜ்ரேஸ்வரி
இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிறப் பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள்.
வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.
வழிபடு பலன்:-
அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.
(7) சிவதூதி
இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு "சிவதூதி" என்று பெயர்.
எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன.
தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.
வழிபடு பலன்கள்:
நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.
(8) த்வரிதா
இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருட்பாலிப்பதால் "த்வரிதா" என்று வணங்கப்படுகிறாள்.
தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள்.
சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி சித்திகளும் ஞானமும் கைகூடும்.
வழிபடு பலன்கள்:-
எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.
(9) குலசுந்தரி
குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள்.
பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள்.
தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும் கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர்.
வழிபடு பலன்கள்:-
இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.
(10) நித்யா
அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள்.
பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன.
சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி.
வழிபடு பலன்கள்:-
அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.
(11) நீலபதாகா
நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள்.
இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள்.
இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.
வழிபடு பலன்கள்:-
எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.
(12) விஜயா
இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன.
திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலது காலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள்.
சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள்.
வழிபடு பலன்கள்:
எந்தவகை வழக்குகளிலும் வெற்றி, கலைகளில் தேர்ச்சி.
(13) சர்வமங்களா
இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது.
தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டு உடுத்தி சர்வசுலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள்.
இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாக புராணங்கள் பகர்கின்றன.
வழிபடு பலன்கள்:-
பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.
(14) ஜூவாலா மாலினி
இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது.
வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜூவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள்.
பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.
வழிபடு பலன்கள்:
எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.
(15) சித்ரா
திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரகணங்களை வீசிடும் திருமேனியவள்.
பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள்.
பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள்.
சர்வானந்தமயி என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.
வழிபடு பலன்கள்:
திடர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-6 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி காலை 7.21 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: திருவாதிரை காலை 11.48 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மன் அபிஷேகம். நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் காலையில் அன்ன வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில்களில் உலா. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் ஸ்ரீ வில்வநாதர் அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-பரிவு
மிதுனம்-பொறுமை
கடகம்-நன்மை
சிம்மம்-வரவு
கன்னி-ஆக்கம்
துலாம்- செலவு
விருச்சிகம்-நட்பு
தனுசு- சிறப்பு
மகரம்-மாற்றம்
கும்பம்-அன்பு
மீனம்-நலம்
- சஷ்டி: பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி.
- தசமி: சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான்.
* பிரதமை:- சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவன். செல்வந்தன்.
* துதியை:- கீர்த்தி உடையவன், சத்திவாசகன், பொய் சொல்லாதவன், பொருள் சேர்ப்பவன், தன் இனத்தாரை ரட்சிப்பவன்.
* திருதியை:- எண்ணியதை முடிப்பவன், தனவான், பயம் உள்ளவன், பராக்கிரமம் உடையவன், சுத்தமுடையோன், திருக்கோவில் கைங்கரியம் செய்பவன்.
* சதுர்த்தி:- அளவற்ற காரியங்களை சிந்திப்பவன். தேச சஞ்சாரம் செய்பவன், எல்லோருக்கும் நண்பன், அருள் மந்திரவாதி.
* பஞ்சமி:- வேத ஆராய்ச்சி உடையோன், பெண் மேல் அதிக பிரியமுள்ளவன், கருமி, துக்கம் உடையோன்.
* சஷ்டி:- பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி.
* சப்தமி:- செல்வம், தயாள சிந்தனை உடையோன், பராக்கிரமசாலி, எதிலும் கண்டிப்பு உடையவன்.
* அஷ்டமி:- புத்ர செல்வம் உடையோன், காமூகன், பிறவி செல்வம் உடையவன், லட்சுமி வாசம் உடையோன்.
* நவமி:- கீர்த்தி உடையவன், மனைவி மக்களை விரும்பாதவன், அதிக பெண் சிநேகம் உடையவன், கமனம் செய்பவன்.
* தசமி:- சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான்.
* ஏகாதசி:- செல்வந்தன், நீதியுடன் இருப்பவன், அழகற்றவன், உதிதமானதை செய்பவன்.
* துவாதசி:- செல்வந்தன், தர்மவான், நூதன தொழில் செய்பவன், சீலம் உள்ளம் உள்ளவன்.
* திரயோதசி:- உறவினர் இல்லாதவன், மாந்தீரிகன், யோபி, கஞ்சன், கீர்த்திசாலி.
* சதுர்தசி:- குரோதம் உடையோன், பிறர் பொருளை அபகரிப்பதில் பிரியன், கோபி, பிறரை துஷ்டிப்பவன்.
* பவுர்ணமி:- புத்தி, விந்தை, பொறுமை, சத்யவான், தயாள சிந்தனை உடையோன், கலங்க முடையோன், உக்ரமுள்ள தேவதையை பூஜிப்பவன்.
- தேதி என்பதன் மருவுதான் திதி என்று சொல்லப்படுகிறது.
- தேதி என்பது மேல்நாட்டு முறை. திதி என்பதுதான் நம் நாட்டு முறை.
தேதி என்பதன் மருவுதான் திதி என்று சொல்லப்படுகிறது. தேதி என்பது மேல்நாட்டு முறை. திதி என்பதுதான் நம் நாட்டு முறை.
சூரியன் என்ற கிரகத்தின் மின்சக்தி உடைய நாளே பிரதமை எனப்படும். எனவே, சூரியனே முதல் கிரகமாக இருப்பதால் பிரதமை என்ற சொல் முதன்மையை குறிக்கிறது.
சந்திரன் கிரகத்தின் மின்சக்தி உடைய நாள் துவிதியை திதி எனப்படும். சந்திரன், சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கிரகமாகும். இரண்டாவது என்பதற்கு சமஸ்கிருதத்தில் துவிதியை என்று பெயர்.
குரு கிரகத்தின் மின்சக்தி உடைய நாள் திருதியை திதி எனப்படும். திருதியை என்றால் சமஸ்கிருதத்தில் மூன்று என்று பொருள். மூன்று என்பது குரு என்ற கிரகத்தைக் குறிப்பதாகும்.
ராகு கிரகத்தின் மின்சக்தி உடைய நாள் சதுர்த்தி திதி எனப்படும். சதுர்த்தி என்றால் சமஸ்கிருதத்தில் நான்கு என்று பொருள். நான்கு என்பது ராகு கிரகத்தைக் குறிப்பதாகும்.
புதன் கிரகத்தின் மின்சக்தி உடைய நாள் பஞ்சமி திதி எனப்படும். பஞ்சமி என்பது சமஸ்கிருதத்தில் ஐந்தாவது ஆகும். ஐந்து என்பது புதனைக் குறிக்கும்.
சுக்கிரன் கிரகத்தின் மின்சக்தி அதிகம் உள்ள நாள் சஷ்டி திதி எனப்படும். சஷ்டி என்பது சமஸ்கிருதத்தில் ஆறு எனப் பொருள்படும். ஆறு என்பது சுக்கிரனை குறிப்பதாகும்.
கேது கிரகத்தின் மின்சக்தி அதிகம் உள்ள நாள் சப்தமி திதி எனப்படும். சப்தமி என்பது சமஸ்கிருதத்தில் ஏழு எனப்படும். ஏழு என்பது கேதுவைக் குறிக்கும்.
சனி கிரகத்தில் மின் சக்தி அதிகம் உள்ள நாள் அஷ்டமி திதி எனப்படும். அஷ்டமி என்பது சமஸ்கிருதத்தில் எட்டு எனப் பொருள்படும். எட்டு என்பது சனி கிரகத்தைக் குறிப்பதாகும்.
செவ்வாய் கிரகத்தின் மின்சக்தி அதிகம் உள்ள நாள் நவமி திதி எனப்படும். நவமி என்பது சமஸ்கிருதத்தில் ஒன்பது எனப் பொருள்படும். ஒன்பது என்பது செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும்.
சூரிய கிரகத்தின் மின் சக்தி பூமியில் பத்து மடங்கு அதிகம் உடைய நாள் தசமி திதியாகும். தசமி என்பது சமஸ்கிருதத்தில் பத்து எனப் பொருள்படும்.
சந்திர கிரகத்தின் மின்சக்தி பூமியில் பத்து மடங்கு அதிகம் உடைய நாள் ஏகாதசி திதியாகும். ஏகாதசி என்பது சமஸ்கிருதத்தில் பதினொன்று எனப் பொருள்படும்.
குரு கிரகத்தின் மின் சக்தி பத்து மடங்கு அதிகம் உடைய நாள் துவாதசி திதி எனப்படும். துவாதசி என்பது சமஸ்கிருதத்தில் பன்னிரண்டு எனப் பொருள்படும்.
ராகு கிரகத்தின் மின்சக்தி பத்து மடங்கு பூமியில் உடைய நாள் திரயோதசி திதி எனப்படும். திரயோதசி என்பது சமஸ்கிருதத்தில் பதிமூன்று என்று பொருள்படும்.
- தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள்.
- தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் கால பைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் தனி சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு.
சிவபெருமான் வீரச்செயல்களை செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளுமே அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழுந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
கால பைரவர் பாம்பை பூணுலாக கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம் தண்டம் ஏந்தி காட்சி தருவார்.
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் கால பைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது.
காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழு பலனும் கிட்டும்.
கால பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாந்நி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலத்த சாதமும் இனிப்பு பண்டங்களும் சமர்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் செய்வது நல்லது.
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.
மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும், வழக்கில் வெற்றி கிட்டும்.
திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லி மலர் சூட்டி, புனுகு சாத்தி, பாகற்காய் கலந்து சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியை கற்று முதலிடம் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால், பாயம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரை பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால், பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
- காசி யாத்திரை என்பது மிகவும் பிரபலமான ஒன்று.
- ராமேஸ்வரத்தில் தொடங்கி பின் ராமேஸ்வரத்திலேயே காசி யாத்திரை முடியும்.
காசி யாத்திரை என்பது மிகவும் பிரபலமான ஒன்று. சந்திர வம்சத்தில் புண்ணிய நிதி என்ற அரசன் பிறந்து, மதுரையை ஆண்டு வந்தார். இந்த மன்னருக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீது அதீதமான பக்தி இருந்தது.
தன் முன்னோர்களுக்காவும், தனக்கு மகள் பிறக்க வேண்டும் என்பதற்காகவும், அவர் ராமேஸ்வர யாத்திரை செல்ல எண்ணினார். தன் மகனிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்து விட்டு, தன் மனைவி மற்றும் படை பரிவாரங்களுடன் ராமேஸ்வரம் வந்தார்.
தனுஷ்கோடியில் தங்கி எல்லாவித புண்ணிய தீர்த்தங்களிலும் முறைப்படி குளித்து, ராமநாதரை வழிபட்டு அங்கேயே தங்கியிருந்தார்.
அந்த நேரத்தில் படித்த வேத விற்பனர்களைக் கொண்டு பகவான் விஷ்ணுவை வேண்டி ஒரு யாகமும் செய்தார். அந்த யாகம் முடிந்தபின் தன் மனைவியுடன் புனித நீராட தனுஷ்கோடி சென்றார்.
நீராடிய பின் தான - தர்மங்கள் செய்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் அழகிய சிறுமியைக் கண்டார். ஐந்து வயதுடைய அந்த பெண் பிள்ளை, அரசனை நோக்கி "மன்னா.. நான் தாய் - தந்தை இல்லாதவள். என்னை உன் மகளாக ஏற்று வளர்த்து வருகிறாயா?" என கேட்டது.
அரசனும் "மகள் வேண்டிதான் இத்தனை தூரம் வந்தேன். நீ பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் இருக்கிறாய். நீ அவசியம் என்னுடன் வா" என அழைத்தார்.
அப்பொழுது அந்த பெண் குழந்தை "அரசே.. ஒரு நிபந்தனை உண்டு. என்னை யாரும் தீண்டக்கூடாது. என்னை யாராவது தீண்டினால், அவர்களுக்கு நீ தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியது.
அரசனும் ஒப்புக்கொண்டு, மகா ராணியுடன் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தார்.
ஒரு சமயம் அரசவை தோட்டத்தில், அந்தச் சிறுமி பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அப்போது மிகுந்த ஒளி பொருந்திய தோற்றம் கொண்ட ஒரு அந்தணர் கங்கை நீர் நிரம்பிய குடத்தை தோளில் ஏந்தியபடி அங்கு வந்து, அந்தச் சிறுமியை நோக்கி "பெண்ணே.. நீ யார்?" என்று கேட்டு தொட்டார்.
உடனே அந்தச் சிறுமி அலறினாள். அவளது சத்தம் கேட்டு அங்கு வந்த அரசனிடம், "இந்த ஆள் என்னை தீண்டி விட்டார். இவருக்கு தண்டனை வழங்குங்கள்" என்றாள்.
அரசனும் அந்த அந்தணரை, ராமநாத சுவாமி கோவிலுக்கு இழுத்துச் சென்று, அங்குள்ள சங்கிலியால் பிணைத்து வைத்தார். பின்னர் தன் மகளிடம், "பெண்ணே.. கவலைப்படாதே.. நாளை விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்குகிறேன்" என்று கூறினார்.
அன்றைய தினம் மன்னனிடம் கனவில் சங்கு- சக்கரதாரியாக தோன்றிய மகாவிஷ்ணு, "மன்னா.. அந்தணராக வந்தது நான்தான். இப்பொழுது உன்னிடம் வளர்ந்து வரும் பெண், மகாலட்சுமியே ஆவாள்" என்று கூறி மறைந்தார்.
திடுக்கிட்டு விழித்த மன்னன், சங்கிலியால் தான் பிணைத்த அந்தணரைக் காணாதது அறிந்து தவித்தார். 'இறைவனையே சங்கிலியால் பிணைத்து விட்டேனே' என்று வருந்தினார். தன்னுடைய இந்த பாவத்தைப் போக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினார்.
அப்போது மகாவிஷ்ணு, "நீ என்னை சங்கிலியால் பிணைத்த கோலத்திலேயே, மகாலட்சுமியுடன் 'சேது மாதவன்' என்ற பெயரில் நான் இங்கேயே தங்கிவிடப் போகிறேன். உனக்கு வைகுண்ட பதவியும் அருள்வேன்" என்று கூறி மறைந்தார்.
ஸ்ரீ ராமநாத சுவாமி ஆலயத்தில் மேற்புறம் இரண்டாம் பிரகாரத்திற்கும் மூன்றாம் பிரகாரத்திற்கும் இடையே `சேது மாதவ தீர்த்தம்' என்ற குளம் இருக்கிறது. இதற்கு வடக்கு புறம் 'சேது மாதவன்' சன்னிதியும் இருக்கிறது.
இங்கு குளித்து சேது மாதவனை தரிசிப்பவர்களுக்கு சேதுஸ்னான பலன் கிடைக்கும் என்றும், தனுஷ்கோடியில் இருந்து கொண்டு வரும் மணலை இவருடைய சன்னிதியில் வைத்து பூஜை செய்தால் காசி யாத்திரை பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.
ராமேஸ்வரம், பிரயாகை, காசி ஆகிய மூன்று இடங்களும் சிவபெருமானுக்கு உரிய இடங்களாக பொதுவாக அறியப்பட்டாலும், இந்த மூன்று இடங்களிலுமே மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரத்தில் சேது மாதவன் இருப்பதைப் போல, பிரயாகையில் வேணி மாதவன், காசியில் பிந்து மாதவன் என்ற பெயரில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார்.
ராவண வதம் முடிந்து ராமேஸ்வரம் வந்த ராமபிரான், சீதாதேவியுடன் சேர்ந்து சிவபெருமானை பூஜிக்க எண்ணினார். அதற்காக ஆஞ்சநேயரை நோக்கி "நீ காசிக்குச் சென்று ஒரு சிறந்த லிங்கத்தை எடுத்து வா" என்று அனுப்பினார்.
காசிக்குச் சென்ற அனுமன், சிறந்த சிவலிங்கத்தைத் தேட, ஆகாயத்தில் பறந்த கருடன், அப்படியொரு சிவலிங்கத்தை அனுமனுக்கு காண்பித்து உதவியது. அந்த சிவலிங்கத்தை அனுமன் எடுக்க, அதை பைரவர் தடுத்தார்.
இருப்பினும் ராமனின் அருளால் சிவலிங்கத்தை அனுமன் எடுத்துச் சென்றுவிட்டார். அப்போது ஏற்பட்ட சாபம் காரணமாகத்தான், இன்றளவும் காசியின் மீது கருடன் பறப்பதில்லை என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் சிவலிங்கத்துடன் ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. எனவே சீதாப்பிராட்டி மணலில் சிவலிங்கம் ஒன்றை பிடித்துவைக்க, அதற்கு ராமபிரான் பூஜை செய்தார்.
அப்போது சிவலிங்கத்துடன் வந்த அனுமன், "பிரபு.. நான் எடுத்து வந்த சிவலிங்கத்தை தாங்கள் பூஜிக்க வேண்டும்" என்றார். அதற்கு ராமபிரான் "மணலில் செய்த இந்த சிவலிங்கத்தை அகற்றி விடு" என்று கூற, தன் வாலால் அனுமன் சிவலிங்கத்தை அகற்ற முயன்றார்.
ஆனால் அது முடியாமல் பல அடி தூரம் போய் விழுந்தார். ஆஞ்சநேயரின் வால் பட்ட அடையாளம், அந்த மணல் லிங்கத்தின் மீது இன்றளவும் காணப்படுவதாக சொல்கின்றனர்.
ஆஞ்சநேயர் கொண்டு வந்த சிவலிங்கமானது, ராமநாதர் சன்னிதிக்கு வடக்கு புறம் உள்ளது. இந்த சன்னிதியில் இருந்துதான் முதல் பூஜையை தொடங்குவார்கள்.
ராமேஸ்வர யாத்திரையில் மணலில் மூன்று சிவலிங்கம் பிடித்து, அதை வேணி மாதவர், பிந்து மாதவர், சேது மாதவர் என பூஜிப்பார்கள். சேது மாதவரை கடலில் கரைத்து விட்டு, பிந்து மாதவரை தானம் செய்துவிட்டு, வேணி மாதவரை எடுத்துச்சென்று பிரயாகையில் உள்ள திரிவேணியில் கரைப்பார்கள்.
சிலர் பிந்து மாதவரை காசியில் கங்கையில் கரைக்கலாம் என்பார்கள். அது அவரவர் விருப்பம். ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை காசியில் இருந்து எடுத்து வந்ததால், பிந்து மாதவரை காசியில் கரைக்கும் பழக்கமில்லை என்பது பெரியோர்கள் கருத்து.
காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டதும், மீண்டும் ராமேஸ்வரம் பிரயாகையில் எடுத்த புனித நீரைக் கொண்டு ராமநாதரை அபிஷேகம் செய்து யாத்திரையை பூர்த்தி செய்வார்கள்.
கூடுமானவரை பிரயாகையில் இருந்து எடுத்து வரும் நீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து வராமல், பித்தளை சொம்பில் எடுத்து வருவது உத்தமம். ராமேஸ்வரத்தில் தொடங்கி பின் ராமேஸ்வரத்தில் இந்த காசி யாத்திரை முடியும்.
- 108 திவ்ய தேசங்களில் ஒன்று அல்ல.
- இத்தல பெருமாளை தரிசித்தாலே அனைத்து திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களை தரிசிக்க வேண்டியது மிக அவசியம் என்று சொல்வார்கள். அப்படி திவ்ய தேசங்களை நாம் தரிசிக்க தொடங்குவதற்கு முன்பாக முதலில் வழிபட வேண்டிய ஆலயமாக, காட்டுமன்னார்குடியில் உள்ள வீர நாராயணப் பெருமாள் கோவில் திகழ்கிறது.
இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் ஒன்று அல்ல. ஆனால் அதனினும் சிறப்புமிக்கது. 108 திவ்ய தேசங்களையும் ஸ்ரீமந் நாதமுனிகள் மூலம், பெருமாள் வெளிக்காட்டிய கோவில் இதுவாகும்.
சில கோவில்கள் அதன் தல சிறப்பால் பேசப்படுவது போல, சில கோவில்கள் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளால் பேசப்படுவதுண்டு.
ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே 'நாலாயிர திவ்யப்பிரபந்தம்'. வைணவத்தின் வேதமாகக் கருதப்படும் இந்நூல், இவ்வாலயத்தில் அரங்கேற்றப்பட்டதால் பாடல்பெற்ற திவ்ய தேசங்களைவிட முதன்மை தலமாக போற்றப்படுகிறது.
எனவே 108 திவ்ய தேசங்களையும் தரிசிக்க முடியாதவர்கள், காட்டுமன்னார் கோவிலில் உள்ள மரகதவல்லி தாயார் உடனாய வீரநாராயணப் பெருமாள் கோவிலை தரிசித்தாலே, அனைத்து திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒரு முறை மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் இருந்து இவ்வாலயத்திற்கு வந்த சிலர், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளைப் பற்றி குருகூர் சடகோபன் (நம்மாழ்வார்) பாடிய பத்து பாசுரங்களை இசையுடன் கலந்து (அரையர் சேவை) பாடினர்.
அதைக் கேட்டு மயங்கிய நாதமுனிகள், 'பத்து பாசுரங்களே இப்படி மனதை வயப்படுத்துகிறதே.. மீதமுள்ளதையும் பாடக்கூடாதா?' எனக் கேட்டார்.
அதற்கு அவர்கள், 'மீதி பாசுரங்கள் எங்களுக்குத் தெரியாது. தாமிரபரணி கரையில் திருக்குருகூரில் வசிக்கும் நம்மாழ்வாரின் சீடர் பராங்குசதாசனுக்குத் தெரியும்' என்றனர்.
இதையடுத்து பராங்குசதாசனைத் தேடி திருக்குருகூருக்கு சென்றார், நாதமுனிகள். ஆனால் பராங்குச தாசனோ, 'எல்லாம் நம்மாழ்வாருக்குத்தான் தெரியும்' என்று கைவிரித்தார்.
எனவே ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் பிறந்த புளியமரத்தின் அடி பகுதிக்கு வந்த நாதமுனிகள், நம்மாழ்வாருக்காக மதுரகவி ஆழ்வார் பாடிய 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற பாசுரத்தை பன்னிரண்டாயிரம் முறை பாடினாா்.
இதையடுத்து அவருக்கு காட்சி தந்த நம்மாழ்வார், மற்ற ஆழ்வார்கள் பாடிய 4 ஆயிரம் பாடல்களையும், ஆறுவிதமான அஷ்டாங்க சித்தி முறைகளையும் எடுத்துரைத்தார். அவற்றை ஆயிரம் ஆயிரமாகப் பிரித்து இசையுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும், இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் வகைபடுத்தினார்.
அந்த பாடல்கள் அனைத்தையும், கனவில் இத்தல பெருமாளுக்கு பாடிக் காட்டி இயற்றினார். அப்படி நாலாயிர திவ்யபிரபந்தமும் இங்கே அரங்கேற்றப்பட்டது.
இவ்வாலயத்தின் மூலவர் வீர நாராயணப் பெருமாள். தாயார் மரகதவல்லி. உற்சவ மூர்த்திகள் ராஜகோபாலன் மற்றும் ருக்மணி- சத்யபாமா. உற்சவ தாயார் செங்கமலவல்லி. நித்ய உற்சவராக உபய நாச்சியார்களுடன் அழகியமன்னார் எனப்படும் காட்டுமன்னார் (சுந்தர கோபாலன்), பிரார்த்தனை பெருமாளாக உபய நாச்சியார்களுடன் செண்பக மன்னார் ஆகியோரும் அருள்கின்றனர்.
கோவிலில் எதிரே உள்ள வேதபுஷ்கரணி, ஆலய தீர்த்தமாக உள்ளது. ஆலயத்தின் தல விருட்சம், நந்தியாவட்டை ஆகும்.
ஆலய அமைப்பு
ஊரின் நடுவில் ஐந்துநிலை கோபுரத்துடன் கிழக்கு திசை நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. ஏழு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவிலுக்குள் 5 கிணறுகளும், விரிந்த தோட்டமும் உள்ளன. முன் மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம் மற்றும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது.
அதனைத் தொடர்ந்த கல்ஹாரத்துடன் கூடிய வாசலைத் தாண்டினால் மண்டபத்தில் சேனை முதல்வர், மணவாளமாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார், கிடாம்பி ஆச்சாரி ஆகியோரது சன்னிதிகள் தென்முகம் நோக்கியும், கருடாழ்வார் சன்னிதி மேற்கு நோக்கியும் இருக்கிறது.
மகாமண்டபத்தில் ஜெயன், விஜயன் காவல்புரிய, கருவறையில் ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வீரநாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் தென்புறத்தில் தனி சன்னிதியில் நரசிம்மரும், வராகரும், வடபுறத்தில் நாதமுனிகளும், அவரின் இருபக்கத்திலும் திருமங்கைஆழ்வார், நம்மாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் ஆகியோரும் உள்ளனர்.
அமைவிடம்
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த ஆலயம், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்