என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பைரவர் வழிபாடு"
- பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷம்.
- பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்கலாம்.
தீபம்
சிறு வெள்ளைத் துணியில் மிளகை வைத்து அதை சிறிய முடிச்சாக கட்டி, அதை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் இட்டு பைரவர் முன்பாக தீபம் ஏற்றினால், எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபாடு செய்யலாம்.
சந்தன காப்பு
பைரவருக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் போன்றவற்றை சந்தனத்துடன் சேர்த்து தயார் செய்வார்கள். இந்த சந்தன காப்பை பைரவருக்கு சாத்தி வழிபட்டு வந்தால், தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு, பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.
நைவேத்தியம்
பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
மாலைகள்
பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
- ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.
- பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.
வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற வானுலக பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலமாகும். எனவே தான் இத்தலம் 'ஆவூர்' என்றானது. ('ஆ' என்பது 'பசு'வை குறிக்கும்)
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், 'பஞ்ச பைரவ மூர்த்திகள்.' இந்த ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும்.
பஞ்ச பைரவ வழிபாடு என்பது, 'பிதுர்தோஷ நிவர்த்தி'க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையோ, வாய்ப்புகளோ அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள்.
பலபேர் அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர், ஆனால் வாழ்வில் அமைதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு, பிதுர் தோஷம்தான் காரணம். அவர்கள் அனைவரும், இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு, பிதுர் தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.
- பைரவரை வணங்க உகந்த தினம் தேய்பிறை அஷ்டமி.
- காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு.
சிவாலயங்கள் அனைத்திலும் கால பைரவருக்கு இடம் உண்டு. சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதாகவும், அதன் முதன்மையான வடிவம் இந்த பைரவர் என்றும் சொல்வார்கள்.
சிவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்பவர்கள், அனைத்து தெய்வங்களை வழிபட்ட பின்னர், இறுதியாக கால பைரவரை வணங்காமல், அந்த ஆலய தரிசனம் முழுமை பெறாது. இவரை வழிபடுவதற்கு உகந்த தினமாக தேய்பிறை அஷ்டமி தினம் சொல்லப்படுகிறது.
இந்த நாளில் இவரை வழிபாடு செய்தால், எதிரிகள் மீதான பயம் விலகுவதோடு, மன தைரியம் உண்டாகும் என்கிறார்கள்.
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு நடைபெறும்.
காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழு பலனும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமானைப் போலவே, பைரவ மூர்த்திக்கும் 64 திருவடிவங்கள் உண்டு.
கால பைரவர், எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது.
பைரவரின் எட்டு வடிவங்கள்:
அசிதாங்க பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் இவர். அன்னப் பறவையை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக, அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் இந்த பைரவர் அருள்செய்கிறார்.
ருரு பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றம் இவருடையது. சிவபெருமானைப் போலவே, ரிஷபத்தை தனது வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் சுக்ரனின் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள். இந்த பைரவர், காசி மாநகரில் உள்ள அனுமன் காட்டில் வீற்றிருக்கிறார்.
சண்ட பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தியின் மூன்றாவது வடிவம் இது. இவர் முருகப்பெருமானைப் போல மயிலை வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் செவ்வாய் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை மக்கள் வணங்குகின்றனர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கவுமாரி தேவி விளங்குகிறாள். இந்த பைரவருக்கான சன்னிதி, காசி மாநகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் இருக்கிறது.
குரோதன பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவதாக வைத்து போற்றப்படுபவர் இவர். மகாவிஷ்ணுவைப் போல கருடனை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் சனிக் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை வழிபடுகின்றனா். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள். இந்த பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.
உன்மத்த பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தியின் ஐந்தாவது தோற்றம் இவர். குதிரையை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் புதன் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள பீம சண்டி கோவிலில் இந்த பைரவர் வீற்றிருக்கிறார்.
கபால பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது இடம் இவருக்கு. அன்னத்தை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் சந்திர கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள லாட் பசார் கோவிலில் இந்த பைரவரை தரிசனம் செய்யலாம்.
பீஷன பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றம் இவர். அம்பாளைப் போல சிங்கத்தை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் கேது கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பலரும் தரிசனம் செய்கிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள பூத பைரவ கோவிலில் இந்த பைரவர் வீற்றிருந்து அருள்செய்கிறார்.
சம்ஹார பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தியில் எட்டாவது வடிவம் இவருடையது. நாயை வாகனமாக கொண்ட இவரைத்தான், நாம் ஆலயங்கள் பலவற்றிலும் பார்க்கிறோம். நவக்கிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை மக்கள் வணங்குகின்றனா்.
இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள். இப்பைரவரை காசி மாநகரில் திரிலோசன சங்கம் கோவிலுக்குச் சென்றால் நாம் வழிபடலாம்.
- இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர்.
- ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
திருவான்மியூர்:
சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.
இலுப்பைக்குடி:
இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர்.
இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.
அந்தியூர்:
ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோவிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார்.
சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
திருவியலூர் (திருவிசநல்லூர்):
கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது.
இத்திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.
- ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார்.
- அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.
காளஹஸ்தி:
இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.
பழநி:
அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.
சீர்காழி:
சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும்.
சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோவிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.
சேலம்:
இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது.
ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார்.
மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.
- கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது.
- இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.
திருவாஞ்சியம்:
தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.
திருச்சேறை:
கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.
திருப்பாச்சேத்தி:
மதுரை - ராமேஸ்வரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார்.
ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம்.
சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
நாகை:
இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம்:
வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.
- எந்தக் கோவிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார்.
- ஆனால் முறப்ப நாடு கோவிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.
பொன்னமராவதி புதுப்பட்டி:
இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
சேந்தமங்கலம்:
இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார்.
எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.
முறப்ப நாடு:
எந்தக் கோவிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார்.
ஆனால் முறப்ப நாடு கோவிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.
ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார்.
மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர்.
இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.
- மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது.
- திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர்.
திருநாகை:
நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.
மதுரை:
இங்கு இம்மையில் நன்மை தருவார் கோவிலிலும், கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர்.
மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது.
இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.
திருவண்ணாமலை:
இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.
திருமயம்:
இக்கோவில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது.
இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது.
கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார்.
இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார்.
திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.
- இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார்.
- இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருக்கோஷ்டியூர்:
இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி.
இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.
பைரவபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோவில் இங்கே உள்ளது.
சிவபுரம்:
இது கால பைரவ சத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோவிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
எமனேஸ்வரம்:
எமனேஸ்வரமுடையார் கோவிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
காளையார் கோவில்:
இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார்.
இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
- பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது.
- இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் ளக்ஷத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார்.
சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோவிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.
பஞ்சமுக பைரவர்:
முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள்பாலிக்கிறார்.
முக்கிய பைரவர் ஸ்தலங்கள்:
வைரவன்பட்டி:
பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது.
இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது.
- மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.
காரைக்குடி:
இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி என்னும் தலம்.
இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
படப்பை:
தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் ஸ்தலமுள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது.
மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது.
ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
- பங்குனி மாத அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.
- பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உள்ளது. சித்திரை மாதம் சனாதன அஷ்டமி, வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி, ஆனி மாதம் பகவதாஷ்டமி, ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதம் சிவா அஷ்டமி, புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி, ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி,காலபைரவாஷ்டமி, மார்கழி மாதம் சங்கராஷ்டமி, தை மாதம் தேவ தேவாஷ்டமி, மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி, பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.
அஷ்டமி என்பது எட்டாவது திதி. அது வைணவத்தில் கண்ணனுக்கு உரியது. சைவத்தில் சிவபெருமானுக்கு உரியது. குறிப்பாக கால பைரவருக்கு உரியது. சக்தி வழிபாட்டில் துர்க்கைக்கு உரியது. எனவே எல்லோரும் அனுசரிக்கக்கூடிய விரத நாள் அஷ்டமி. இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை பங்குனி மாதம் வருகின்ற அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. இன்று காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் அஷ்டமி விரத நன்மைகள் ஏற்படும் திருமணத் தடைவிலகும். எம பயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது. வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்