என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஷ்டமி வழிபாடு"

    • நாளைய தினத்தில் இயன்றவரை பானகம், வெல்லம், வெல்லப்பாகு மட்டுமே உண்டு உபவாசம் இருப்பது சிறப்பு.
    • சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்தத் திருநாள் புதாஷ்டமி தினமாகும்.

    அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது திதியானது 'அஷ்டமி' எனப்படும். இந்த அஷ்டமி திதி புதன்கிழமையன்று அமையப் பெற்றால் அத்தினத்திற்கு 'புதாஷ்டமி' என்று பெயர். நாளை (18-ந்தேதி) புதாஷ்டமி தினமாகும்.

    அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் வழிபாட்டிற்குரிய விரத தினமாக புதாஷ்டமி தினம் கருதப்படுகிறது. பொதுவாக அஷ்டமி தினமானது காளி, துர்க்கை, பைரவர், சப்தகன்னியர் போன்ற தெய்வங்களுக்குரிய வழிபாட்டு தினமாக கருதப்படும்.

    குறிப்பாக அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு சிறப்பானது. நாளை புதாஷ்டமி விரதம் இருந்தால் தொலைந்து போனது கிடைக்கும். கிடைப்பது நல்லதாக அமையும்.

    அவ்வகையில் இந்த புதாஷ்டமியும் அஷ்டமாதர்களை வழிபடுவதற்குரிய சிறப்பான விரத தினமாக நமது பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.

    முன்னொரு காலத்தில் கவுசிகன் என்பவன் அவருடைய சகோதரி விஜயை ஆகியோர் கங்கைக்கரையில் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மேய்ச்சலில் இருந்த அவர்களுடைய அரியவகை எருது ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் பதறித் தவித்து அலைந்தனர்.

    அப்பொழுது, பசியால் வாடிய கவுசிகன், கங்கைக்கரையில் புதாஷ்டமி விரதபூஜையில் ஈடுபட்டிருந்த தேவமகளிரைக் கண்டு, பசி அதிகமாக இருப்பதாகவும் ஏதாவது உணவு இருந்தால் தாருங்கள் என்று கேட்டான். அதற்கு அந்த பெண் பூஜையில் சிரத்தையாக ஈடுபடுவோருக்கு மட்டுமே தர இயலும் என்று கூறினாள். இதையடுத்து கவுசிகனும், விஜயையும் அப்பூஜையில் பங்கேற்று, அவர்கள் அளித்த பிரசாதத்தினை உண்டு விரத பூஜையில் பங்கேற்றனர்.

    அதன் பலனாக, தொலைந்த எருது கிடைத்தது. அதோடு அவனது வாழ்வும் வளம்பெறத் தொடங்கியது. விஜயை நற்கணவனைப் பெற்றாள். கவுசிகனும் அயோத்தியின் அரசன் ஆனான்" எனப் புராணங்கள் சொல்கின்றன.



    "இந்த புதாஷ்டமி விரதம் மேற்கொள்வது எப்படி?" என்று பார்க்கலாம்.

    நாளைய தினத்தில் இயன்றவரை பானகம், வெல்லம், வெல்லப்பாகு மட்டுமே உண்டு உபவாசம் இருப்பது சிறப்பு. மாவிலைகளால் தைக்கப்பட்ட இலையில் கற்கண்டு சேர்த்த அன்னத்தினை இட்டு நிவேதித்து அஷ்டமாதர்களான பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சண்டி, மற்றும் சாமுண்டி ஆகியோரை வழிபட வேண்டும். அந்த அன்னத்தை தானம் செய்வதாலும் அறிவாற்றல் சிறக்கும். மூளைபலம் உண்டாகும். முன்னோர்கள் ஆசிகள் கிட்டிடும். இந்த நாளில் எழுதுபொருள்களை தானம் செய்வதால் வித்யா கடாட்சம் உண்டாகும்.

    புதன் கிரகமானது புத்திக்கு உரிய காரகத்துவம் உடைய கிரகம். கற்றலில் மந்தமானவர்கள், மூளைத்திறன் குறைந்தவர்கள், மந்தபுத்தி உடையவர்கள், படிப்பினைக் கண்டு அஞ்சுபவர்கள், குழப்பமான நிலையில் இருப்பவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் ஆகியோர் புதாஷ்டமி அன்று விரதம் இருந்து இறைவழிபாடு செய்திட, அப்பிரச்சனைகளில் இருந்து நிரந்தர நிவாரணம் பெற முடியும்.

    புதாஷ்டமி விரதம் எளிமையானது. நாளை அதிகாலை 4.30 மணி, 6 மணி, 8 மணி, 10 மணி, மதியம் 12 மணி, மாலை 3, 6.30 மணி, இரவு 8.30 மணிக்கு என 8 முறை விளக்கேற்ற வேண்டும். குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் இனிப்பு வகைகளை பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

    சிவாலயங்களில் உள்ள பைரவர் சன்னதியில் செவ்வரளி மாலை அணிவித்து வணங்க வேண்டும். கடன் தொல்லை ஏற்படாமல் இருக்க, குழந்தைகளுக்கு நோய் நொடி தாக்காமல் இருக்க இந்த வழிபாடு உதவும். மேலும் பெண்களுக்கு தடையின்றி திருமணம் நடக்க இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்தத் திருநாள் புதாஷ்டமி தினமாகும். எனவே புதனும் அஷ்டமியும் கூடும் நாட்களில் ஆலயங்களில் உள்ள அசோக மர தரிசனம் மற்றும் மரத்தை வலம் வருதல் விசேஷமானது.

    மருத்துவ குணம் கொண்டது அசோக மரம். இந்த மரத்தின் பட்டை, பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. தமிழகத்தில் ஓசூர், திருவண்ணாமலை, ரமணர் ஆசிரமம் ஆகிய இடங்களில் அசோக மரங்கள் உள்ளன.

    சகல புண்ணிய பலன்களையும் அள்ளித் தந்திடும் இந்த புதாஷ்டமி விரத தினத்தன்று, இயன்றளவு சிவாலய வழிபாடு செய்து அளப்பறிய நற்பலன்களை பெறலாம்.

    பெண்கள் நாளை புதாஷ்டமியில் ஸ்ரீகால பைரவரை வணங்கி புனிதமான நல்வரங்களைப் பெற வேண்டிய பைரவ பூஜை செய்யலாம்.

    நாளை பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நன்று. ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும். ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு, ஒரு அகலில் நல்லெண்ணெய், இன்னொரு அகலில் இலுப்பை எண்ணெய், மற்றொன்றில் விளக்கெண்ணெய், பசு நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.

    ஒரு எண்ணெய் மற்றொரு எண்ணெயுடன் சேரக்கூடாது. இவ்வாறு ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குறிப்பாக கால பைரவர் சிவபெருமானின் ருத்ரஅம்சமாக கருதப்படுபவர். சிவனின் நெற்றி கண்ணில் இருந்து தோன்றியவர். இதனால் உக்கிரமான ஆற்றல் அவரிடம் நிரம்பி உள்ளது.

    சிவாலயங்களில் வடகிழக்கு திசை நோக்கி இருக்கும் பைரவரை வழிபட்டால் உடனடியாக அவரது அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். பைரவரை ஒருவர் எந்த அளவுக்கு வழிபடுகிறாரோ அந்த அளவுக்கு அவரிடம் வாழ்வில் உள்ள அனைத்து பயங்களும் நீங்கி விடும். பயம் நீங்கினால் தானாகவே வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    அதுமட்டுமல்ல பைரவர் வழிபாடு அஷ்டசித்திகளையும் தரும் ஆற்றல் கொண்டது. நாளை புதாஷ்டமி தினத்தில் வழிபட்டால் பைரவரிடம் இரட்டிப்பு பலன் பெற முடியும்.

    • பங்குனி மாத அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.
    • பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள்.

    ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உள்ளது. சித்திரை மாதம் சனாதன அஷ்டமி, வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி, ஆனி மாதம் பகவதாஷ்டமி, ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதம் சிவா அஷ்டமி, புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி, ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி,காலபைரவாஷ்டமி, மார்கழி மாதம் சங்கராஷ்டமி, தை மாதம் தேவ தேவாஷ்டமி, மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி, பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.

    அஷ்டமி என்பது எட்டாவது திதி. அது வைணவத்தில் கண்ணனுக்கு உரியது. சைவத்தில் சிவபெருமானுக்கு உரியது. குறிப்பாக கால பைரவருக்கு உரியது. சக்தி வழிபாட்டில் துர்க்கைக்கு உரியது. எனவே எல்லோரும் அனுசரிக்கக்கூடிய விரத நாள் அஷ்டமி. இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை பங்குனி மாதம் வருகின்ற அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. இன்று காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் அஷ்டமி விரத நன்மைகள் ஏற்படும் திருமணத் தடைவிலகும். எம பயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

    பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது. வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.

    ×