search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கே.எல்.ராகுல், குல்தீப் அசத்தல்... இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

    • முதலில் ஆடிய இலங்கை அணி, 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • 44வது ஓவரின் 2வது பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ அரை சதம் அடித்தார். குஷால் மெண்டிஸ் 34 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களும், ஷூப்மான் கில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் (28), ஹர்திக் பாண்ட்யா (36), அக்சர் பட்டேல் (21) ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்க, கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன் ரேட்டை உயர்த்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    93 பந்துகளில் 3 பவுண்டரியுடன் அரை சதம் கடந்த ராகுல், தொடர்ந்து முன்னேறினார். மறுமுனையில் ராகுலுடன் இணைந்த குல்தீப் யாதவின் ஹெல்மெட்டில் அடிபட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. கே.எல்.ராகுலுக்கு தொடர்ந்து கம்பெனி கொடுத்த அவர், 44வது ஓவரின் 2வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    இந்திய அணி 40 பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 64 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றி உள்ளது. 3வது போட்டி 15ம் தேதி திருவனந்தபுரத்தில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

    Next Story
    ×