search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எம்.ஐ.டி.யில் மாணவர்களின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம்
    X

    எம்.ஐ.டி.யில் மாணவர்களின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம்

    எம்.ஐ.டி. மாணவர்களின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித், ஆள் இல்லா விமானம் அமைப்பதற்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப ஆலோசனை ஆகியவற்றை வழங்குகிறார். #AjithKumar #MIT
    நடிகர் அஜித் ஹெலிகாப்டர் ஓட்டுவது, ஆள் இல்லா குட்டி விமானங்களை இயக்குவது ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தவர்.

    வருகிற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஆள் இல்லாத விமானத்தை பயன்படுத்தி மருத்துவ சேவை செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை எம்.ஐ.டி. தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் குழு ‘தக்ஷா’ என்ற பெயரில் பங்கேற்கிறது.

    55 நாடுகள் பங்கேற்கும் இந்த தொழில்நுட்ப போட்டியில் எம்.ஐ.டி. மாணவர் குழு 2-வது இடம் பிடித்துள்ளது. ஆள் இல்லா குட்டி விமானம் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒருவரின் ரத்த மாதிரியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்வதே இந்த போட்டி.

    இதுபற்றி கேள்விப்பட்ட நடிகர் அஜித், இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகவும், தொழில்நுட்ப உதவிகளை செய்வதாகவும் கூறினார். எம்.ஐ.டி. நிர்வாகத்திடம் இதுபற்றி தெரிவித்தார்.

    வெளியே உள்ளவர்கள் அதில் பங்கேற்க முடியாது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முறைப்படி விண்ணப்பம் செய்தார். அதைத் தொடர்ந்து ஆள் இல்லா விமான போட்டியில் பங்கேற்கும் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.



    இதன்படி ஹெலிகாப்டர் பைலட் மற்றும் ஆள் இல்லா விமானத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜித்துக்கு மாத சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த சம்பளம் தனக்கு வேண்டாம். இதை ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக வழங்கி விடுங்கள் என்று அஜித் தெரிவித்துள்ளார்.

    தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜித், ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தயாரிக்கும் ஆள் இல்லா விமானம் அமைப்பதற்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப ஆலோசனை ஆகியவற்றை வழங்குகிறார். பயிற்சியும் அளிக்க இருக்கிறார்.

    எம்.ஐ.டி. மாணவர்கள் தயாரித்த ஆள் இல்லா விமானம் குரங்கனி தீ விபத்து, திருவண்ணாமலை கிரிவல பாதை தீ விபத்து ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது. வட மாநிலங்களிலும் வெள்ள சேதம், விபத்துகள் நேரத்தில் உதவி இருக்கிறது.

    அடுத்து மருத்துவ சேவைக்காக எம்.ஐ.டி. மாணவர்களின் ஆள் இல்லா விமானம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை குறைந்த நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.

    சாலை வழியாக இதை கொண்டு செல்ல சில மணி நேரங்கள் ஆகும். ஆனால் ஆள் இல்லா விமானம் மூலம் 10 முதல் 20 நிமிடங்களில் கொண்டு சென்று நோயாளிகள் உயிரை காப்பாற்ற முடியும். இந்த சேவையை செய்ய இருக்கும் எம்.ஐ.டி. தொழில்நுட்ப மாணவர்களுக்கு அஜித்தின் ஆலோசனை மிகவும் உதவியாக இருக்கும் என்று இங்குள்ள மாணவர்கள் தெரிவித்தனர். #AjithKumar #MIT #DroneMission
    Next Story
    ×