தொழில்நுட்பம்

மூன்று ஆண்டுகளில் ஃபேஸ்புக் மூலம் தொண்டு நிறுவனங்களுக்காக ரூ.7,224 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது

Published On 2018-11-16 04:20 GMT   |   Update On 2018-11-16 04:20 GMT
ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேரிட்டி டூல்ஸ் அம்சம் மூலம் மூன்று ஆண்டுகளில் தொண்டு நிறுவனங்களுக்காக ரூ.7,224 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. #Facebook



ஃபேஸ்புக்கில் உள்ள சேரிட்டி டூல்ஸ் (தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சேவை) மூலம் மக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிதி திரட்டல் மூலம் இரண்டு கோடி மக்கள் நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து நிதி திரட்டும் சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

“எங்களின் தனிப்பட்ட நிதி திரட்டும் டூல்கள் 20 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது,” என ஃபேஸ்புக்கின் சமூக நலன் அமைப்பின் துணை தலைவர் நவோமி கிளெயிட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மக்கள் ஃபேஸ்புக்கின் லாப நோக்கமற்ற மற்றும் தனிப்பட்ட தேவைக்காக நிதி திரட்டும் டூல்களை பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் இந்த சேவை 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் இந்த சேவை இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.



“எங்களின் லாப நோக்கமற்ற சமூகம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது, தற்சமயம் 19 நாடுகளில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமாக அவை அதிகரித்துள்ளது. இவை ஃபேஸ்புக் மூலம் நேரடியாக நிதியுதவிகளை பெற முடியும்,” என கிளெயிட் தெரிவித்தார்

சிறு மற்றும் பெருந்தொகை என நிதி திரட்டும் சேவையை கொண்டு மக்கள் அவர்கள் வாழும் சமூகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

உதாரணத்திற்கு குழந்தைகளை காப்பாற்றுவதற்கு மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.54.2 கோடி ரூபாய் ஃபேஸ்புக் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உலகம் முழுக்க சுமார் 60 நாடுகளில் கிட்டத்தடட் 65 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று நோ கிட் ஹங்ரி (No Kid Hungry) திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.36.1 கோடி சேகரிக்கப்பட்டு அமெரிக்கா முழுக்க குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News