search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைதளம்"

    • சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் ராமுலம்மா தரிசனத்திற்காக வந்தார்.
    • சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).

    இவர் நேற்று சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் தரிசனத்திற்காக வந்தார். தரிசனம் முடிந்து வீட்டிற்கு செல்ல மலைப்பாதையில் நடந்து வந்தார். சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

    அந்த வழியாக வந்த சாலேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் வேலை செய்யும் ராமதாஸ் என்ற போலீஸ்காரர் மூதாட்டியின் பரிதாப நிலையை கண்டார்.

    இதையடுத்து மூதாட்டியை தனது தோளில் சுமந்து சென்று அவரது வீட்டில் விட்டார். போலீஸ்காரர் மூதாட்டியை தோளில் சுமந்து செல்வதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    போலீஸ்காரரின் மனிதாபிமானத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • வீடியோவில் கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது.
    • கார் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.

    வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவது உலகம் முழுவதும் உள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உணவு தேடி நெடுஞ்சாலைக்கு வந்த கரடி ஒன்று சிற்றுண்டிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஒரு போலீஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், கரடி சிற்றுண்டியை தேடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை நெருங்குகிறது. பின்னர் அந்த கரடி வாயால் கார் கதவை திறக்க முயல்கிறது. மேலும் கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது. ஆனால் அதன் முயற்சி பலனளிக்கவில்லை. கார் கதவு பூட்டப்பட்டிந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.


    • சந்தா முறையை எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
    • முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின.

    டுவிட்டர் தளத்தை வாங்கி அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர் எலான் மஸ்க். இதில் பிரபல சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் அடங்கும். பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.

    பிறகு, இதேபோன்ற திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். மேலும் 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இலவச பிரீமியம் சந்தா பெறுவது எப்படி?

    எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பின் படி எக்ஸ் தளத்தில் 2500 ஃபாளோவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. மாறாக 2500 ஃபாளோவர்கள் இருப்பின் அவர்கள் எக்ஸ் தளத்தின் பேசிக், பிரீமியம் அல்லது பிரீமியம் பிளஸ் சந்தாக்களில் எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இதே போன்று பிரீமியம் பிளஸ் சந்தாவை இலவசமாக பெற, குறிப்பிட்ட எக்ஸ் அக்கவுண்ட்-ஐ குறைந்தபட்சம் 5000 ஃபாளோவர்கள் இந்த சந்தாக்களில் எதையேனும் வாங்கியிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    • படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது.
    • மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

    சமீபத்தில் வெளியாகி கேரளாவில் பெரும் ஆதரவு பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களிடமும் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை பரவா பில்ம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

    இதில் ஷோபின் ஷஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்த படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு "ஜான்-இ-மான்"படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படம் பெரும் வசூலினை பெற்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமா முன்னணி பிரபலங்களான நடிகர் விக்ரம், நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்தி சுப்பராஜ், நடிகர் சித்தார்த், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை பார்த்து படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இப்படத்தில் கமல் நடித்த குணா படத்தில் உள்ள கண்மணி அன்போடு காதலன் என்னும் பாடல் இப்படத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதனால் மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதையொட்டி மார்ச் 1 -ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன், மஞ்சும்மாள் பாய்ஸ் படக்குழுவினர் அனைவரையும் அவரின் அலுவகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, குணா படத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    • திருடியவன் பணத்தை எடுத்து கொண்டு பையை டான் நதியில் வீசியுள்ளான்
    • பையில் இருந்த கிரெடிட் கார்டில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டிருந்தது

    வட கிழக்கு ஸ்காட்லேண்டு பகுதியில் உள்ள நகரம், அபர்டீன் (Aberdeen).

    அபர்டீனில் வசிப்பவர் 81 வயதாகும் ஆட்ரி ஹே (Audrey Hay). சுமார் 30 வருடங்களுக்கு முன் இவரது பணியிடத்தில் இவரின் விலை உயர்ந்த கைப்பை திருடு போனது. பறி போன அவர் பையில் அப்போது சுமார் 200 பவுண்ட் பணம் இருந்தது.

    ஆட்ரி காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினரின் தேடலில் கைப்பை கிடைக்கவில்லை.

    திருடியவன் அந்த பையை டான் நதியில் (River Don) வீசி உள்ளான்.

    கடந்த செவ்வாய் அன்று மெய்சி கூட்ஸ் (Maisie Coutts) எனும் 11-வயது சிறுமி தான் வளர்க்கும் நாயுடனும், பெற்றோருடனும் டான் நதிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்தன.

    அதில் இருந்த சில கிரெடிட் கார்டுகளில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை தேட தொடங்கினார் அந்த சிறுமி.

    தனது நீண்ட தேடலில் அப்பையின் உரிமையாளரான ஆட்ரியை கண்டு பிடித்தார் மெய்சி. உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்தார்.


    இது குறித்து ஆட்ரி, "நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்" என தெரிவித்தார்.

    "சமூக வலைதளங்களின் தாக்கமும், பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது" என மெய்சியின் தாயார் கூறினார்.

    மெய்சியின் நேர்மைக்கும், உரிமையாளரிடம் பொருளை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் சிக்கப் பல்லாப்பூர் மாவட்டம் முருகமல்லே என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை மற்றொரு மாணவர் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் வைரல் ஆக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்வி சுற்றுலாவின் போது எடுத்த சில படங்கள் மற்றும் வீடியோக்களை தலைமை ஆசிரியை நீக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாணவருக்கு முத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

    • ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார்.
    • தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் ரீனா இளவரசி (வயது 40). தி.மு.க. மாவட்ட சமூக வலைதள பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.

    இந்த நிலையில் செய்யாறு சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக் கூறி பா.ம.க.வினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், அமைச்சர் எ.வ.வேலு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து வந்தவாசி கிழக்கு ஒன்றிய பா.ம.க. முன்னாள் செயலாளர் கீழ்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரபுதேவா (27) என்பவர் ரீனா இளவரசியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஆபாச வார்த்தையை கூறி பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று பிரபுதேவாவை கைது செய்தனர். தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் பிரபுதேவாவின் மனைவி சங்கீதா (23) என்பவர், ரீனாஇளவரசி சமூக வலைதளத்தில் தன்னை இழிவாக பேசி பதிவிட்டுள்ளார் என்று கூறி டி.எஸ்.பி. ராஜூவிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • சிறைக் காவலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் கிளை ஜெயில் உள்ளது.

    பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றும் சிறை காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் மது அருந்திவிட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தொந்தரவு செய்வதாகவும், அவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.


    இந்த நிலையில் அவர் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சிறைக் காவலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
    • சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவின்ராஜ். இவர் பா.ஜனதா மாநில ஊடகப்பிரிவு பெறுப்பாளராக உள்ளார்.

    இவர் சமூக இணையதளங்களில் தி.மு.க., காங்கிரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து சர்சைக்குரிய வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலையில் நாமக்கல்லுக்கு வந்து பிரவின்ராஜை கைது செய்து கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

    பா.ஜனதாக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சமூக வலைதளம் மூலம் பழக்கம்
    • திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கணவனை இழந்து வசித்து வருகிறார். இதையடுத்து அவர் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது சமூக வலைதளம் ஒன்றில் மறுமணம் செய்ய விருப்பம் தெரிவித்து வாலிபர் ஒருவர் பதிவு செய்திருந்தார். உடனே அந்த பெண் அந்த வாலிபரை தொடர்பு கொண்டார். இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த வாலிபர் பெண்ணை நெல்லை பகுதியில் உள்ள கோவிலுக்கு வருமாறு அழைத்தார். அந்த வாலிபரும் அங்கு வந்தார். அப்போது அந்த பெண்ணும் அங்கு சென்றுள்ளார். இருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னியாகுமரிக்கு வந்த இருவரும் கோவிலுக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தன்னை மறுமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் சில தோஷங்கள் இருப்பதால் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது அவர் அணிந்திருந்த நகையை கழட்டிக் கொடுக்குமாறு கூறினார். வாலிபரை நம்பி அந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழட்டி கொடுத்தார். உடனே அந்த வாலிபர் தங்க நகை வைத்துவிட்டு அவர் கையில் இருந்த கவரிங் நகையை பூஜைக்கு வைத்தார். பூஜை முடிந்த சிறிய நேரத்தில் அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் கடலில் பூஜை செய்த பொரு ட்களை போட்டுவிட்டு வருவ தாக கூறிவிட்டு 5 பவுன் நகையுடன் மாயமானார். நீண்ட நேரமாக அந்த பெண் வாலிபருக்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணை ஏமாற்றியது கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த யுவராஜ் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்று யுவராஜை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யுவராஜை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். கன்னியாகுமரியில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் இவரும், அவரது மனைவியும் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய சமூக வலைதளங்கள் மூலமாக பெண் தேடியுள்ளார். பல பெண்களிடம் நெருங்கி பழகி வந்த யுவராஜ் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
    • போலி அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

    எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என்று அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் எக்ஸ் சேவையின் ஐ.ஒ.எஸ்., ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் விண்டோஸ் உள்ளிட்ட தளங்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அதன்படி பயனர்கள் மொபைல் போன் நம்பர்கள் இல்லாமல் தங்களின் யூசர்நேம் கொண்டே அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    முன்னதாக எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்கப்படுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதை தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் டிசைனரான ஆண்ட்ரியா கான்வே - புதிய வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

    மேலும் எக்ஸ் தளத்தில் போலி அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. எனினும், இந்த வசதிகளை பிரீமியம் சந்தா இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது. தற்போது எக்ஸ் தளத்தில் "ஸ்பேசஸ்" எனும் அம்சம் கொண்டு பயனர்கள் உரையாடல்களை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், புதிய அழைப்புகளுக்கான வசதி கொண்டு எக்ஸ் தளம் புளூஸ்கை மற்றும் திரெட்ஸ் போன்ற சேவைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். எலான் மஸ்க்-இன் எல்லாவற்றுக்குமான செயலியை உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக புதிய அழைப்புகளுக்கான வசதி பார்க்கப்படுகிறது. 

    ×