உலகம்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும் - கனடா பிரதமர் வலியுறுத்தல்

Published On 2022-02-17 20:01 GMT   |   Update On 2022-02-17 20:01 GMT
லாரி டிரைவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
ஒட்டாவா:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டாவா பாலத்தைப் போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. போலீசார் துணையுடன் பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.

போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். 1970-ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, பாராளுமன்றத்திற்கு வெளியே குவிந்த போராட்டக்காரர்களை அதிகாரிகள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

கனடா நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும். சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இது. நமது பொருளாதாரத்திற்கும் வர்த்தக பங்காளிகளுடனான நமது உறவுக்கும், பொது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News