செய்திகள்
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்த்து தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

வங்காளதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2021-03-26 12:57 GMT   |   Update On 2021-03-26 12:57 GMT
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டாக்கா:

பிரதமர் நரேந்திர மோடி  2 நாள் பயணமாக இன்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார். வங்காள தேசத்தின் 50வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது. இன்று காலை பிரதமர் மோடி  அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து இன்று அவர் வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார்.

இன்று காலை வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உள்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.  காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.

போராட்டக்காரர்கள் டாக்கா வீதிகளில் பேரணி செல்ல முயன்ற போது தான் நிலமை கையை மீறி சென்றது என போலீசார் தெரிவித்துள்ளனர். இரு வேறு சங்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் தான் இந்த வன்முறைக்கு காரணம் என அரசை எதிர்த்து போராடியவர்கள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு ஆதரவான நிலை கொண்ட மாணவர்கள் தான் போராட்டத்தை வன்முறையாக  மாற்றி விட்டனர் எனவும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News