செய்திகள்
பாலஸ்தீன அதிபர் மஹ்மவுட் அப்பாஸ்

இஸ்ரேல், அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்போம்: பாலஸ்தீனம் மிரட்டல்

Published On 2020-02-01 15:01 GMT   |   Update On 2020-02-01 15:24 GMT
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான அனைத்து உறவுகளை துண்டிக்கப் போவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மவுட் அப்பாஸ் இன்று தெரிவித்துள்ளார்.
கெய்ரோ:

1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கே அமைந்துள்ள ‘வெஸ்ட் பேங்க்’ பகுதியில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த ’செட்டில்மென்ட்’ எனப்படும் வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக நீண்டகாலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த பதற்றத்தை தணிப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஒரு சமரச திட்டத்தை 28-1-2020 அன்று அறிவித்தார்.



இந்த திட்டத்தின்படி, வெஸ்ட் பேங்க் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீன மக்களின் எல்லைப்பகுதிக்கான தன்னாட்சி அதிகாரம் குறைக்கப்படும், அல்லது பறிக்கப்படும். மேலும், இஸ்ரேல் அரசால் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டு எல்லையுடன் இணைக்கப்படும். ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியும் இந்த இணைப்புக்குள் அடங்கும்.

இதற்கு பதிலாக, பாலஸ்தீன நாட்டின் பூர்வீக குடிமக்களான ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா முனைக்கு தனிநாடு என்ற அந்தஸ்து அளிக்கப்படும் என்பது டிரம்ப்பின் சமரச திட்டத்தின் ஒருபகுதியாகும்.

அமெரிக்காவின் இந்த சமரச திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாலஸ்தீன அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அராபிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் உயர்மட்ட அவசர கூட்டத்துக்கு பாலஸ்தீன அரசு ஏற்பாடு செய்தது.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய பாலஸ்தீன அதிபர்  மஹ்மவுட் அப்பாஸ் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் துண்டிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

'இந்த சமரச திட்டம் தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முயன்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்புகளை நான் நிராகரித்து விட்டேன். இவ்விவகாரம் தொடர்பாக எங்களுடன் (பாலஸ்தீனம்) ஆலோசனை நடத்தினேன் என்று கூறும் வாய்ப்பாக இதை டிரம்ப் பயன்படுத்திக் கொள்வார் என்பதால் அவரது அழைப்புகளுக்கு நான் பதில் அளிக்கவில்லை.

ஜெருசலேம் நகரை நான் விற்று விட்டேன் என்ற அவப்பெயர் எனது வரலாறில் பதிவாகி விடக்கூடாது என்பதால் அமெரிக்காவின் இந்த சமரச தீர்வை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவந்து கிழக்கு ஜெருசலேமை ஒரு தனிநாடாக அறிவிக்கும் இஸ்ரேல் அரசின் முயற்சிகளை முறியடிப்பதில் பாலஸ்தீனியர்கள் என்றும்போல் இனிமேலும் உறுதியாக இருப்பார்கள்’ எனவும் இன்றைய கூட்டத்தில் மஹ்மவுட் அப்பாஸ் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News