செய்திகள்
புதிய கொரோனா வைரஸ் (மாதிரிப்படம்)

புதிரான கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்தே மனிதருக்கு பரவலாம் - சீனா அதிகாரிகள்

Published On 2020-01-15 10:09 GMT   |   Update On 2020-01-15 10:09 GMT
புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவலாம் என்பதை மறுக்க முடியாது என சீனாவின் வுஹான் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீஜிங்:

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் இவ்வருட தொடக்கத்தில் இருந்தே மர்ம வைரஸ் மூலம் நிமோனியா காய்ச்சல் பரவியது. வுஹான் நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர். 

இதையடுத்து இந்த நிமோனியா காய்ச்சலுக்கான காரணம் ‘சார்ஸ்’ நோயை உருவாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த கொரோனா வைரஸ்கள் என சீன ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். விலங்குகளிடமிருந்து மனிதர்களிடையே பரவும் கொரோனா வைரஸ்கள் உள்ளன. ஆனால் அவை மனிதர்களிடமிருந்து பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர் என வுஹான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய கொரோனா வைரஸ் மற்ற பகுதிகள் மற்றும் அண்டை நாடுகளில் பரவுவதற்கு முன்பு அதன் மூலத்தை கண்டறியுமாறு 
உலக சுகாதார அமைப்பு சீனா அரசை வலியுறுத்தியது. 

இந்நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவலாம் என்பதை மறுக்க முடியாது என சீனாவின் வுஹான் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

‘புதிய கொரோன வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதற்கான எந்தவொரு தெளிவான ஆதாரமும் தற்போதைய சோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது, எனினும் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதற்கான ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது’, என சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News