செய்திகள்
இந்தியா, பாகிஸ்தான்

கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் கையெழுத்து

Published On 2019-10-25 02:17 GMT   |   Update On 2019-10-25 02:17 GMT
கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்து போட்டன. இதன்படி, சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வரலாம்.
குர்தாஸ்பூர் :

சீக்கிய மதத்தின் நிறுவனரும், அந்த மதத்தின் முதல் குருவுமான குருநானக், தன் வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை, பஞ்சாப் மாநிலத்தையொட்டி, பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது அவர்களின் புனித கடமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விசா இல்லாமல், நேரடியாக கர்தார்பூருக்கு சீக்கியர்கள் சென்று தரிசிப்பதற்கு வழித்தடம் அமைத்து தருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளது.

இதற்கு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி பஞ்சாப்பில் தேராபாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இடையே (சர்வதேச எல்லையில் இருந்து) 4 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி, அடுத்த மாதம் 9-ந் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார்.

கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இங்குள்ள சீக்கியர் ஒருவர் சென்று வருவதற்கு பாகிஸ்தான் 20 டாலர் (சுமார் ரூ.1,400) கட்டணம் விதிக்கும்.



முதலில் இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் இரு தரப்பிலும் 3 முறை பேச்சு வார்த்தை நடந்தது. அதன்பின்னர் பாகிஸ்தானின் கட்டண விதிப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, சர்வதேச எல்லையில் கர்தார்பூர் ஜீரோ பாயிண்டில் நேற்று நடந்தது.

இதில் இந்தியாவின் தரப்பில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் எஸ்.சி.எல். தாஸ்சும், பாகிஸ்தான் சார்பில் அதன் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, சீக்கியர்கள் விசா ஏதுமின்றி கர்தார்பூருக்கு காலையில் சென்று, தர்பார் சாகிப் குருத்வாராவில் தரிசனம் செய்து விட்டு மாலையில் திரும்பி விட வேண்டும்.

தினந்தோறும் குறைந்தது 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு செல்ல உள்ள சீக்கியர்கள் பட்டியல், அவர்களது பயணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தப்படும். பயணிகளுக்கு உறுதி கடிதம் 4 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படும்.

கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் கையெழுத்து ஆன உடனேயே ஆன்லைன் முன்பதிவு தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News