செய்திகள்

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை - சிறுவன் வெறிச்செயல்

Published On 2018-11-18 05:23 GMT   |   Update On 2018-11-18 05:23 GMT
அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். #Indiankilled

நியூஜெர்சி:

தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வென்ட்னார் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். கடந்த 15-ந்தேதி இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியேவந்தார்.

அப்போது 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு காரில் வந்தான். அதில் இருந்து இறங்கிய அவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுனில் எட்லாவை சரமாரியாக சுட்டான்.

இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த சிறுவன் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டான்.


தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட சிறுவனை கைது செய்தனர்.

அவன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளை மற்றும் சட்டத்துக்கு விரோதமாக கைத் துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது.

சுனில்எட்லா கடந்த 1987-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தார். டிசம்பர் மாதத்தில் தனது தாயாரின் 98-வது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 2 மாத விடுமுறையில் இந்தியா வர இருந்தார்.

தாயாரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இவர் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பியானோ வாசித்து வந்தார். இதனால் இவர் பிரபலமானவராக திகழ்ந்தார். #Indiankilled

Tags:    

Similar News