செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் இன்று சிறைபிடிக்கப்பட்ட 149 பேர் மீட்பு

Published On 2018-08-20 14:23 GMT   |   Update On 2018-08-20 14:23 GMT
ஆப்கானிஸ்தானில் அதிபர் அறிவித்த போர்நிறுத்தத்துக்கு இடையில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். #Afghanforces #149hostagesfreed #Talibanambush
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 

நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி நேற்று அழைப்பு விடுத்தார். 

இன்றிலிருந்து (20-ம் தேதி) முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாதுன்நபி விழா (நவம்பர் மாதம் 21-ம் தேதி) வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அந்நாட்டின் குன்டுஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கான் அபாட் மாவட்டம் வழியாக இன்று காலை சென்ற மூன்று பேருந்துகளை துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து மடக்கினர். அவற்றில் வந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி சுமார் 170 பேரை கடத்திச் சென்றனர். 

பிணை கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் எங்கே கடத்திச் செல்லப்பட்டனர்? என்பது தெரியாத நிலையில் அவர்களை மீட்க குன்டுஸ் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த வேட்டையில் பிணைகைதிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் தலிபான்களின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் 7 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 149 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை மீட்பதற்காக அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Afghanforces #149hostagesfreed #Talibanambush
Tags:    

Similar News