செய்திகள்

மலேசியாவில் லெபனான் பேராசிரியரை நாங்கள் கொல்லவில்லை - இஸ்ரேல் திட்டவட்ட மறுப்பு

Published On 2018-04-22 14:11 GMT   |   Update On 2018-04-22 14:11 GMT
பாலஸ்தீன நாட்டை சேர்ந்த பேராசிரியரை மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகரில் மொசாட் உளவுப்படை சுட்டுக்கொன்றதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல் அவிவ்:

பாலஸ்தீனை சேர்ந்தவரும் ஹமாஸ் போராளிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவில் உறுப்பினராக இருந்த ஃபாதி அல்-பட்ஷ் கடந்த சில ஆண்டுகளாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பொறியில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி அங்கேயே வசித்து வருகிறார்.

உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகிலுள்ள சாலையில் ஃபாதி அல்-பட்ஷ் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பிச்சென்றனர்.



அல்-பட்ஷை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். கொலையான அல்-பட்ஷ் வருவதற்காக சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக கொலையாளிகள் அங்கு காத்திருந்தது சி.சி.டி.வி.யில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பின்னணியில் இயங்கியுள்ளது என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்பு இந்த கொலையில் தொடர்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால், மொசாட் மீதான சந்தேகப்பார்வை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் அரசு இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுதொடர்பாக, இஸ்ரேல் வானொலி மூலம் உரையாற்றிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி அவிக்டோர் லீய்பெர்மேன் ஹமாஸ் இயக்கத்தவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் எங்கள்மீது பழிபோடுவது அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. நமக்கும் அது கேட்டுக்கேட்டு பழகிப்போய் விட்டது என தெரிவித்தார்.

கோலாலம்பூரில் கொல்லப்பட்ட நபர் காசா பகுதியை மேம்படுத்த பாடுபட்ட புனிதர் அல்ல. ஹமாஸ் இயக்கத்தினருக்கான ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஈடுபட்டிருந்தவர். பயங்கரவாத இயக்கத்தவர்களுக்குள்ளே இருக்கும் பிரிவுகளுக்குள் அவ்வப்போது மோதல் வருவதும் சிலர் கொல்லப்படுவதையும் நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். அவ்வகையில், கோலாலம்பூரில் நடந்த இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியப் புள்ளிகளை மொசாட் உளவுப்படையினர் கொன்றுள்ளது பின்னர் பல்வேறு வகைகளில் நிரூபணமாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News