செய்திகள்

சிரியா மீது ராணுவ தாக்குதலா? - அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை

Published On 2018-04-11 06:14 GMT   |   Update On 2018-04-11 06:14 GMT
சிரியா அரசு ராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலுக்கு ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது. #Syria #Trump Russia
மாஸ்கோ:

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கிழக்கு கவுட்டா பகுதியில் ராணுவம் வி‌ஷவாயு தாக்குதல் நடத்தி 80-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தது.

அதற்கு பதிலடியாக சிரியா ராணுவம் மீது விரைவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.



இது சிரியா அதிபர் பசர் அல்- ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் வி‌ஷவாயு தாக்குதல் நடத்திய சிரியா அதிபர் பசர் அல்-ஆசாத் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.

அதை ரஷியா தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. சீனா அதில் தலையிடாமல் விலகியது.

இந்த நிலையில் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸிலி நெபென்ஸியா பேட்டி அளித்தார்.

அப்போது, “ரஷிய படையுடன் இணைந்து போரிடும் சிரியா அரசு ராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய பதட்டத்தை தூண்டும் செயலாகும்.

பனிப்போர் நடைபெற்ற காலங்களில் கூட அமெரிக்க தலைவர்கள் அதுபோன்ற மிரட்டல்கள் விடுத்ததில்லை. சிரியா அரசு படைகள் மீது அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தினால் அதற்கான பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும்” என்றார். #Syria #President #Trump #DonaldTrump #Russia
Tags:    

Similar News