செய்திகள்

தேசத் துரோக வழக்கை சந்திக்க அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார் முஷாரப்

Published On 2018-03-23 15:08 GMT   |   Update On 2018-03-23 15:08 GMT
தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக, துபாயில் இருந்து அடுத்த மாதம் முஷாரப் பாகிஸ்தான் திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. #musharraf #Treasoncase
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முஷாரப் கடந்த 2007-ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.  அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், மூத்த நீதிபதிகளை சிறையில் அடைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார். 

இந்த விவகாரம் தொடர்பாக, முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2014-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சூழலில், மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு துபாய் சென்ற முஷாரப், அங்கேயே தங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவரை கைது செய்து பாகிஸ்தான் கொண்டு வரும்படி அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டது. ஆனால், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்தால் நாடு திரும்பி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயார் என்று முஷாரப் கூறியிருந்தார். அவரது பயணத்திட்ட விவரங்களை தெரிவித்தால் பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், முஷாரப் அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. முஷாரப் தலைமையிலான பாகிஸ்தான் அவாமி இத்திஹாத் கூட்டணியின் பொதுச்செயலாளர் இக்பால் தார் இத்தகவலை தெரிவித்ததாக பாகிஸ்தான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டணியில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் ஆலோசனை செய்து, அதன்பின்னர் முஷாரப் வரும் தேதி மற்றும் அவர் விமானத்தில் வந்து இறங்கும் இடம் குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும் இக்பால் கூறியுள்ளார். #tamilnews #musharraf #Treasoncase
Tags:    

Similar News