செய்திகள்

ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற பிரிட்டன் பிரதமர் கெடு

Published On 2018-03-14 14:34 GMT   |   Update On 2018-03-14 14:34 GMT
முன்னாள் உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ரஷ்யா உடன் மோதல் முற்றியுள்ள நிலையில், 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற பிரிட்டன் கெடு விதித்துள்ளது.
லண்டன்:

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது. 

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செர்ஜய் ஸ்கிர்பால்

இந்த சம்பவம் பிரிட்டனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என பிரிட்டன் கோரியது. அமெரிக்க அதிபர் டிரெம்பும் இவ்விவகாரத்தில் பிரிட்டன் பக்கம் நின்றார்.

ஆனால், பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷ்யா இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதனால், ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பு என பிரிட்டன் உறுதியாக தெரிவித்தது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷிய அரசுதான் கொலைமுயற்சி குற்றவாளியாகும் என தெரிவித்தார். 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும். 

ரஷ்யா உடனான உயர் மட்ட தொடர்பை துண்டிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை நான் ஏற்கிறேன்.
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ் பிரிட்டன் வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் திரும்ப பெறுகிறோம் என தெரசா மே கூறினார்.

ரஷ்யா - பிரிட்டன் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், ரஷ்யாவில் பணியாற்றிய முன்னாள் உளவாளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் உலவுகின்றன. #TamilNews
Tags:    

Similar News