செய்திகள்

மாலத்தீவு அரசியலில் திடீர் திருப்பம் - அதிபர் யாமீனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-02-19 09:11 GMT   |   Update On 2018-02-19 09:11 GMT
நெருக்கடி நிலை அமலில் இருக்கும் மாலத்தீவில் அதிபர் யாமீனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #Maldives
கொழும்பு:

மாலத்தீவில் அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க இம்மாதம் முதல் தேதியில் உத்தரவிட்டது. மேலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது எனவும் தலைமை நீதிபதி அறிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின் படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வந்தால் அதிபர் யாமீன் அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் அவர்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய அதிபர் மறுத்துவிட்டார். மேலும், சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஏற்க முடியாது என அதிபர் யாமீன் தெரிவித்தார்.

இதனால், யாமீனை அதிபர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காய் நகர்த்தினார். தனது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டதால், கடந்த 5-ம் தேதி நெருக்கடி நிலையை அதிபர் பிரகடணம் செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டார். பாராளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

நாளையுடன் நெருக்கடி நிலை முடிவடையும் நிலையில், 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என முன்னர் பிறப்பித்த உத்தரவில் இருந்து உச்ச நீதிமன்றம் மாறியுள்ளது. மீண்டும் அவர்கள் 12 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அதிபர் யாமீனின் அரசுக்கு இருந்த சிக்கல் தற்காலிகமாக விலகியுள்ளது. மேலும், சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும் என முன்னர் பிறப்பித்த உத்தரவையும் நீதிபதிகள் திரும்பப்பெற்றுள்ளனர். அதிபருக்கு ஆதரவான நீதிபதி, தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். #Maldives #TamilNews
Tags:    

Similar News