செய்திகள்

ரஷிய நாட்டில் இணையதளத்தில் புகுந்து ரூ.39 கோடி திருட்டு: ஹேக்கர்கள் கைவரிசை

Published On 2018-02-17 03:38 GMT   |   Update On 2018-02-17 03:38 GMT
ரஷிய நாட்டில் கடந்த ஆண்டில் இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து 6 மில்லியன் டாலரை (சுமார் ரூ.39 கோடி) திருடி விட்டதாக ரஷிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மாஸ்கோ:

கம்ப்யூட்டர் இணையதளத்தில் சட்ட விரோதமாக புகுந்து தகவல்களை திருடுபவர்கள், அழிப்பவர்கள் ‘ஹேக்கர்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.

இந்த ‘ஹேக்கர்கள்’ ரஷிய நாட்டில் கடந்த ஆண்டில் இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து ‘சுவிப்ட்’ என்னும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு அமைப்பு வழிமுறையின் கீழ் பட்டுவாடா செய்ய வேண்டிய தொகை 6 மில்லியன் டாலரை (சுமார் ரூ.39 கோடி) திருடி விட்டனர். இதை ரஷிய மத்திய வங்கி நேற்று தெரிவித்தது.

ரஷிய வங்கிகளில் நடைபெறுகிற இணைய வழி திருட்டு பற்றிய அறிக்கையின் இறுதியில், இந்த திருட்டு பற்றிய தகவல்கள் இடம்பெற்று உள்ளன. இது குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட ரஷிய மத்திய வங்கி மறுத்துவிட்டது.

இதுபற்றி மத்திய வங்கியின் பாதுகாப்பு துறை துணை இயக்குனர் ஆர்டெம் சிச்சேவ், “ஹேக்கர்கள் இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து 6 மில்லியன் டாலரை திருடி உள்ளனர். இந்த சுவிப்ட் முறை என்பது சாதாரணமாக வழக்கத்தில் உள்ள ஒரு நடைமுறைதான். கம்ப்யூட்டர் இணையதளத்தில் புகுந்து, குறிப்பிட்ட தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கைவரிசை காட்டி விடுகின்றனர்” என கூறி உள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற சுவிப்ட் அமைப்பு கடந்த ஆண்டு இணையவழி திருட்டு பற்றி கூறுகையில், “இணையவழி பண திருட்டு அதிகரித்து வருவதின் காரணம், ஹேக்கர்கள் அதிநவீன உபகரணங்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இணையதளங்களில் புகுந்து விடுவதுதான்” என கூறியது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News