செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் டிரம்ப் - மோடி நாளை சந்திப்பு

Published On 2017-11-12 05:45 GMT   |   Update On 2017-11-12 05:45 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நாளை நடக்கவுள்ள 50-வது ஆசியான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.
மணிலா:

50-வது ‘ஆசியான்’ மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது.

அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதற்காக இன்று அவர் பிலிப்பைன்ஸ் செல்கிறார். ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே, சீன பிரதமர் லீ கெ கியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் கியூயன் ஷூயாங் புக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் அதில் கலந்து கொள்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் மாநாட்டில் பங்கேற்கிறார். தற்போது ஆசிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே மாநாட்டின் இடை வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

அப்போது இருநாட்டு தலைவர்களும் சர்வதேச நிலவரம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். மேலும் ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சீன பிரதமர் லீ கெ கியாங் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட்டையும் சந்திக் கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

அதில் பணமோசடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தங்களும் அடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் டிரம்ப்-மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றார். அதையடுத்து கடந்த ஜுன் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்தித்தார்.



தற்போது 2-வது முறையாக டிரம்பை சந்திக்கிறார். தென்சீனக் கடல் தொடர்பாக தற்போது சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சீன பிரதமர் பிலிப்பைன்ஸ் வருவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News