செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மசூதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

Published On 2017-10-21 20:37 GMT   |   Update On 2017-10-21 20:37 GMT
ஆப்கானிஸ்தானில் இரு மசூதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் தாஷ்தி பார்ச் பகுதியில் அமைந்துள்ள ஷியா பிரிவினரின் இமாம் ஜமான் மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிச்சென்று வெடிக்க வைத்ததில் 30 பேர் உடல் சிதறி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறின.

இந்த தாக்குதலில் மொத்தம் 39 பேர் பலியானதாக நேற்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஜிப் டேனிஷ் உறுதி செய்தார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதையும் அந்த இயக்கம் வெளியிடவில்லை.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஷியா முஸ்லிம் பிரிவினர் குறிவைத்து கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான தாக்குதலுக்கு சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். இயக்கம்தான் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அங்குள்ள கோர் மாகாணத்தில் உள்ள மசூதியிலும் நேற்றுமுன்தினம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 33 பேர் பலியாகினர். உள்ளூர் ஜாமியாத் அரசியல் கட்சி தலைவர் ஒருவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பால்க் மாகாண கவர்னருமான அட்டா முகமது நூர் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 
Tags:    

Similar News