செய்திகள்

காங்கோவில் கடும் நிலச்சரிவு: உயிரிழப்பு 200 ஆக அதிகரிக்கும் என தகவல்

Published On 2017-08-19 14:02 GMT   |   Update On 2017-08-19 14:02 GMT
காங்கோ நாட்டின் இதூரி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது.
கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனவ கிராமமான தோரா கிராமத்தில் புதன்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 50 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.

நிலச்சரிவு பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று வரை 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலரைக் காணவில்லை. வீடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை. எனவே, அவர்களையும் கணக்கிட்டு பார்க்கையில் உயிரிழப்பு 200-ஐ நெருங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி மாகாண கவர்னர் அப்தல்லா கூறும்போது, ‘வீடுகள் பாதிப்பு மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சர்வதேச சமூகம் ஈடுபட வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

இதேபோல் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News