செய்திகள்

இஸ்ரேல்: அல்-அக்‌ஷா மசூதியில் பொருத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் அகற்றம்

Published On 2017-07-25 02:50 GMT   |   Update On 2017-07-25 02:50 GMT
அல்-அக்‌ஷா மசூதி வாயிலில் பொருத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர்களை அகற்றுமாறு நடத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து அவற்றை இஸ்ரேல் அரசு அகற்றியுள்ளது.

ஜெருசலேம்:

மத்திய கிழக்கு நாடுகளான ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்‌ஷா மசூதியில் கடந்த 14-ம் தேதி இஸ்ரேல் போலீசார் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ‘மெட்டல் டிடெக்டர்களை’ பதிக்க இஸ்ரேல் முடிவு செய்தது. இதற்கு ஜோர்டான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இஸ்ரேலை கண்டித்து ஜோர்டானில் போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அங்கு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில், 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு அரசுடனான அரசுரீதியான உறவுகளை முறித்துகொள்ள இருப்பதாக பாலஸ்தீனின் பிரதமர் மஹ்முத் அப்பாஸ் கடந்த வெள்ளிகிழமை அறிவித்திருந்தார்.
 
இந்த எதிர்ப்புகளையும் மீறி அல்-அக்‌ஷா மசூதி வாயிலில் இஸ்ரேல் அரசு மெட்டல் டிடெக்டர்களை பதித்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவிவந்தது. வன்முறை ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜோர்டன் தூதரக வளாகத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரு ஜோர்டன்வாசிகளை இஸ்ரேலை சேர்ந்த காவல் அதிகாரி சுட்டுகொன்றார்.  

இந்நிலையில், மேலும் வன்முறைகள் தொடராமல் தடுக்க மசூதி வாயிலில் பொருத்தப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வேறு ஸ்மார்ட் மற்றும் குறைந்த கட்டுப்பாடான கண்காணிப்பு வசதியை பயன்படுத்த இருப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 28 மில்லியன் டாலர் செலவிடப்பட இருப்பதாகவும் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, மசூதி வாயிலில் பொருத்தப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர்களை போலீசார் நேற்றிரவு அகற்றினர்.
Tags:    

Similar News