search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "removed"

    • 15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலைகளில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் அரசு பயணிகள் வாகனங்களும், ஏராளமான சுற்றுலா வாகனங்களும் செல்கின்றன. இதனால் தொண்டி பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்து வதற்கும், இச்சாலையில் உள்ள வணிக நிறுவ னங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் கட்டாயமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தவும் திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.

    தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க, வணிகர் நலச்சங்க பிரதிநிதிகள் தனியார் வாகன ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் வணிக நிறுவனங்கள் சாலைகளில் உள்ள தங்களது ஆக்கிர மிப்புகளை தாங்களாகவே 15 தினத்திற்குள் அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் வருகிற 26-ந் தேதி நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி துறை மற்றும் வருவாய்துறையினர் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் உட்பட வார்டு கவுன்சிலர்கள், நெடுஞ்சாலை, வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன.
    • விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே விளம்பர பலகைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விளம்பர பலகை சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் அடங்கிய குழு அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாநகராட்சிப் பகுதிகளில் 100 வார்டுகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 80 சதவீத விளம்பரப் பலகைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன.

    வடக்கு மண்டலத்தில் 26, கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில்16, தெற்கு மண்டலத்தில் 24, மத்திய மண்டலத்தில் 11 என மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பாலக்காடு சாலை, ஈச்சனாரி சாலை, பேரூர், ராமநாதபுரம், சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும், சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.

    • கோவை மாநகராட்சியின் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • போக்குவரத்தை எளிமைப்படுத்துவது குறித்து கோவை மாநகர காவல் துறை சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கோவை

    கோவை மாநகரில் சாலையோரங்களில் கடைகளுக்காக ஆக்கிரமித்துள்ளவர்கள் அடுத்த 3 நாள்களுக்குள் அவற்றை அகற்றிவிட வேண்டும் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கோவை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சாலை உபயோகிப்பாளர்கள் செல்ல வேண்டிய இடங்க–ளுக்கு கால விரயமி–ன்றியும், சிரமமின்றியும், பாதுகாப்பாகவும் செல்லும் வகையில் போக்குவரத்தை எளிமைப்படுத்துவது குறித்து கோவை மாநகர காவல் துறை பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கோவை மாநக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு அதிகாரிகள் இணைந்த குழு கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களையும், அதை சரி செய்வது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தது.

    இதில், மாநகரில் சில இடங்களில் தேநீர் விடுதிகள் மற்றும் சாலையோர கடைகள் நடத்துவோர் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

    எனவே, அடுத்த 3 நாள்களுக்குள் சாலையோர கடைகள் மற்றும் தேநீர் விடுதிகள் நடத்துவோர் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் மற்றும் அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு மாறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை காலி செய்து காவல் துறையின் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கோவை மாநகராட்சியின் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாட்டுத்தாவணியில் 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் அதிரடி அகற்றப்பட்டது.
    • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலை மற்றும் பஸ் நிலையப்பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது.

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பஸ் நிலையம் முதல் பூக்கடை பகுதிகள் வரை சாலையின் ஓரங்களில் சிறு சிறு கடைகள் அமைத்து பலர் ஆக்கிரமித்துள்ளதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன‌. இதனால் பூ மார்க்கெட் மட்டும் மாட்டுத்தாவணி பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    புல் டோசர் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்படுவதால் ரோடுகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.
    • 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற்றினர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தளி ரோடு, தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதிகளில், விதிமீறி ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனால் ரோடுகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், கவனச்சிதறல் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள், காற்றுக்கு தாங்காமல் பொதுமக்கள், வாகனங்கள் மீது விழுந்தும் விபத்தை ஏற்படுத்தி வருகிறது.விதி மீறல் பேனர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நகராட்சி சார்பில் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. பஸ் நிலையம், அனுஷம் ரோடு, பைபாஸ் மற்றும் கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற்றினர். நகராட்சி சார்பில், பஸ் நிலையத்தை சுற்றிலும் இருந்த பிளக்ஸ் பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டன.தளி ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, கொல்லன் பட்டறை, பழநி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், இன்னும் அதிக அளவு பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல், ஆபத்தான முறையில் உள்ளன. அவற்றையும் முழுமையாக அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.விதி மீறி கட்டடங்கள் மீதுள்ள விளம்பரத்தட்டிகளையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதிக்குள் பிளக்ஸ் பேனர்கள், ரோடுகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள், ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் அகற்றப்படும் என்றனர்.

    • பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 1-6-2022 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அருள்புரம் வரை பொதுமக்கள் நலன் கருதியும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றியும், விபத்துக்கள் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவினாசி- திருப்பூர்-பல்லடம்-பொள்ளாச்சி - கொச்சின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 1-6-2022 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 9-6-2022 தேதிக்குள் மேற்படி ஆக்கிரமிப்புகளை தங்கள் சொந்த செலவில் அகற்றி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

    கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்பு ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ள இடங்களில் இன்று 2-7-2022 முதல் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்ட பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்றனர். ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது அதனையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களை அகற்றியபோது மரம் முறிந்து மன்னார்குடி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவரது தம்பி தினேஷ் (28).

    இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்ததால் அதனை சக தொழிலாளர்களுடன் இணைந்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தென்னை மரம் முறிந்து ரமேஷ் மீது விழுந்தது.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு உள்ளிக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேசை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதுபற்றிய புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான ரமேசுக்கு பிரேமலத (32) என்ற மனைவியும், சாதனா (3) என்ற மகளும் உள்ளனர்.

    ரஜினி கட்சி தலைமை நிர்வாகி இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்பில் வி.எம்.சுதாகர் இருந்து வருகிறார். நீண்ட காலமாக ரஜினியுடன் இருந்துவரும் சுதாகர் அவரது ரசிகர் மன்றத்தையும் நிர்வகித்து வருகிறார். இவருக்கு துணையாக இருக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்பில் ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.

    திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தயாரிப்பு நிர்வாகியாக செயல்பட்டு வந்த ராஜு மகாலிங்கமும் சுதாகருக்கு துணையாக இருந்துவந்தார். சில மாதங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளராகவும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராகவும் டாக்டர் இளவரசன் நியமிக்கப்பட்டார்.

    இவர் பொறுப்புக்கு வந்த உடன் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நீண்ட காலமாக ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த மூத்த நிர்வாகிகள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நீக்கப்பட்டது சர்ச்சையானது.

    இதற்கிடையே இளவரசன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் செய்தி வந்தது. இளவரசனை தொடர்புகொள்ள முடியாத நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    ஆனால் நேற்று இளவரசன் நீக்கத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இளவரசனின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் விலக்கப்படுவதாக கூறினாலும் இளவரசன் நீக்கப்பட்டதில் ரஜினி மன்ற நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    ரஜினி இளவரசன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் மீது மன்ற நடவடிக்கைகளில் வந்த புகார்களை விட அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் மீதும் பல புகார்கள் வர தொடங்கின. முக்கியமாக கடலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் மாவட்டங்களில் மணல் திருட்டு தொடர்பான புகார்களில் இளவரசன் பெயர் அடிபட்டது. இதுதான் அவர் நீக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தது.

    ரஜினி பேட்ட படத்திலேயே மணல் கொள்ளைக்கு எதிராக வசனம் பேசியிருந்தார். நதி இணைப்பு, காவிரி விவகாரம் என்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தருபவர் ரஜினி. தனது கட்சியிலேயே மணல் கொள்ளைக்கு காரணமானவர் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அவரை நீக்கி உள்ளார்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 66,573 பூத் கமிட்டிகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 60 ஆயிரம் பூத் கமிட்டிகளை எங்கள் கட்சி சார்பில் நியமித்துவிட்டோம். உறுப்பினர் எண்ணிக்கையும் ஒரு கோடியை தாண்டி விட்டது. ரஜினி எதிர்பார்த்த இலக்கை தொட்டுவிட்டோம். எனவே ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பா அதற்கு பின்பா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது அவர் எடுக்கும் முடிவை பொறுத்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #RajiniMakkalMandram
    இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. #HarendraSingh
    புதுடெல்லி:

    இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த மே மாதம் ஹரேந்திர சிங் பொறுப்பு ஏற்றார். ஆனால் அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் ஆசிய விளையாட்டில் களம் இறங்கிய இந்திய அணி இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றது. ஒடிசாவில் நடந்த உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி கால்இறுதியுடன் வெளியேறியது.

    இந்த நிலையில் ஆக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஹரேந்திர சிங் ஏற்கனவே இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சியின் கீழ் ஜூனியர் அணி 2016-ம் ஆண்டு உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதனால் மறுபடியும் அவர் ஜூனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்.

    சீனியர் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதையொட்டி, விண்ணப்பங்களை வரவேற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை இந்திய அணியின் மேற்பார்வையாளர்களாக உயர்செயல்பாட்டு இயக்குனர் டேவிட் ஜான் மற்றும் அணியின் பகுப்பாய்வு பயிற்சியாளர் கிறிஸ் சிரியலோ ஆகியோர் இருப்பார்கள் என்று ஆக்கி இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்க எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-

    நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்யாதவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் பயிர் சேதங்களுக்கு ஏற்ப கணக்கிட்டு உரிய இழப்புகள் வழங்கப்படும்.

    கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின்சாரம் வரிசைப்படி வழங்கப்படும். சேதமடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்படும். ஊராட்சி சாலைகளை சீரமைக்கவும், நெடுஞ் சாலைகளை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் சேதமடைந்த வீடுகளில் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். வீடுகளும் கட்டித்தரப்படும்.

    நெடுஞ்சாலை அமைப்பதற்கு விளை நிலங்கள் வழங்கியவர்கள் வருவாய்த் துறையின் மூலம் கணக்கிட்டு உரிய தொகை விரைவில் வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கேற்ப வருவாய்த்துறை சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்க எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும்போது அந்தந்த பகுதி விவசாயிகள் கண்காணித்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

    ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை கால்வாய்களாக இருந்தாலும் அவர்களிடம் தடையின்மை சான்று வாங்கி உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம் வரத்துக்கால்வாய்கள் சீர மைக்கப்படும். மேலும் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய இயக்குநர் செந்தில்குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருபுவனையில் ஒரு மாதத்துக்கு முன்பு சூறை காற்றினால் சாய்ந்த புளியமரம் இதுவரை அகற்றப்படாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    திருபுவனை:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை அருகே சுதானா நகர் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள இந்த பகுதியில் தனியார் பள்ளி மற்றும் 5-க் கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீசிய சூறைகாற்றினால் அங்கிருந்த ராட்சத புளிய மரம் வேறோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது மின்துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின்துண்டிப்பை சரி செய்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் சாயந்த புளிய மரத்தை வெட்டி அகற்றவில்லை.

    புளியமரம் விழுந்து ஒரு மாதமாகியும் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்புகுள்ளாகி வருகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும், கனரக வாகனங்கள் வரும் போது ஒதுங்கி செல்ல முடியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் சாய்ந்து விழுந்த புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக புகார் எழுந்துள்ளது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு, மதுரை, பெரியகுளம், திண்டுக்கல் ஆகிய மெயின்ரோடுகளிலும், பஸ் நிலையம் பின்புறமுள்ள காந்திநகர் பகுதி, பேரூராட்சி அலுவலகம் உள்பட பல இடங்களில் சாலைஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தது.

    இதனால் பெரும்பாலான சாலைகள் சுருங்கியே காணப்பட்டது. கொடைக்கானல், குமுளி, மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் வத்தலக்குண்டு வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

    மேலும் முகூர்த்த நாட்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளில் விதிகளை மீறி அதிவேக மாக செல்லும் ஷேர்ஆட்டோக்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தமான செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கடந்த 27-ந்தேதி இறுதிகெடு விதித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அன்று பெயரளவுக்கு மட்டுமே அளவீடு செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக உள்ளது. ஆனால் சாலையோரங்களில் உள்ள ஏழை வியாபாரிகளிடம் மட்டும் அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வரவேற்க்கத்தக்கது. ஆனால் பெரும் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் ஏழை வியாபாரிகளிடம் மட்டும் கெடுபிடி காட்டி வருகின்றனர். திண்டுக்கல் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக ஒரு ஓடை மற்றும் 2 சாலைகள் மாயமாகி உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெயின்ரோட்டில் உள்ள வியாபாரிகளிடம் மட்டும் தினந்தோறும் கடைகளை எடுக்கச்சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் நேர்மையான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×