

வீரபாண்டி :
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அருள்புரம் வரை பொதுமக்கள் நலன் கருதியும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றியும், விபத்துக்கள் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவினாசி- திருப்பூர்-பல்லடம்-பொள்ளாச்சி - கொச்சின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 1-6-2022 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 9-6-2022 தேதிக்குள் மேற்படி ஆக்கிரமிப்புகளை தங்கள் சொந்த செலவில் அகற்றி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்பு ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ள இடங்களில் இன்று 2-7-2022 முதல் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்ட பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்றனர். ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது அதனையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.