செய்திகள்

சட்டவிரோதமாக குடியேற கண்டெய்னரில் அமெரிக்கா வந்த 9 பேர் மூச்சு திணறி பலி

Published On 2017-07-24 07:23 GMT   |   Update On 2017-07-24 07:23 GMT
கண்டெய்னர் லாரி மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு குடியேற முயன்ற 9 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெக்சாஸ்:

மெக்சிகோவில் இருந்து அண்டை நாடான அமெரிக்காவில் குடியேற பலர் சட்ட விரோதமான வகையில் ஊடுருவி வருகின்றனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரம் மெக்சிகோ எல்லையில் உள்ளது. நேற்று அங்குள்ள வால்மார்ட் வணிக வளாகத்துக்கு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

அது அங்குள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அதை வணிக வளாக ஊழியர்கள் திறந்து பார்த்தனர். உள்ளே 8 பேர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களில் 2 பேர் குழந்தைகள்.

இவர்கள் தவிர மேலும் 30 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 20 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனே அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற கண்டெய்னர் லாரியில் வந்தவர்கள். காற்று வசதி இன்மை, கடும் வெப்பம் காரணமாக மூச்சு திணறி பலியாகி இருப்பது குடியுரிமை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆட்களை கடத்தி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News