செய்திகள்
ரவிதா மேக்வர்

கடத்திச் சென்று, மதம் மாற்றி திருமணம்: இந்து சிறுமியை ஆஜர்படுத்த பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு

Published On 2017-06-21 11:05 GMT   |   Update On 2017-06-21 11:05 GMT
பாகிஸ்தான் நாட்டில் 16 வயது இந்து சிறுமியை கடத்திச் சென்று முஸ்லிமாக மதம் மாற்றி 36 வயது நபர் திருமணம் செய்துகொண்ட வழக்கில் அந்த சிறுமியை நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட நகர்பர்கர் மாவட்டத்தில் உள்ள வரய்னோ கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்  ரவிதா மேக்வர்(16).

இந்து மதத்தைச் சேர்ந்த இந்த சிறுமியை முஸ்லிம் மதத்தை சேர்ந்த சையத் நவாஸ் அலி ஷா என்ற 36 வயது நபர் கடந்த 6-ம் தேதி கடத்திச் சென்று, முஸ்லிமாக மதம் மாற்றி பதிவு திருமணம் செய்துகொண்டார்.

இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் நகர்பர்கர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டிலும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே ரவிதா மேக்வருக்கு 18 வயதாகிவிட்டதாக போலி ஆவணங்களும், பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்து இந்த திருமணம் நடந்ததாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.

ரவிதா மேக்வர் 17-7-2001 அன்று பிறந்ததற்கான ஆதார ஆவணத்தையும் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் காட்டினர்.

திருமண வயதை அடையாத மைனர் பெண்ணை கடத்தி சென்று மதம் மாற்றி திருமணம் செய்துகொண்ட நவாஸ் அலி ஷாவை கைது செய்ய வேண்டும் என இங்குள்ள இந்து நல அமைப்பினரும் மறைந்த பெனாசிர் பூட்டோ கட்சியை சேர்ந்த மகளிர் அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கிடையில், தன்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. சையத் அலி ஷாவை நானாக விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவரிடமிருந்து என்னை பிரிக்கவும் என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் எனது பெற்றோர் மிரட்டி வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு வேண்டும் என ரவிதா மேக்வர் மற்றும் அவரது கணவரின் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், திருமண வயதை அடையாத தனது மைனர் மகளை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்துகொண்ட சையத் அலி ஷா நவாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது மகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ரவிதா மேக்வரின் தந்தை சிந்து மாகாண ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது நேற்று கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கடத்திச் சென்று மதம் மாற்றப்பட்டதாக கூறப்படும் சிறுமி ரவிதா மேக்வரை நாளை (22-ம் தேதி) தங்கள் முன்னர் ஆஜர்படுத்த வேண்டும் என வழக்கை விசாரித்த நீதிபதி சலாவுதின் பல்வார் தலைமையிலான அமர்வு மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாளை ஆஜர்படுத்தப்படும் போது ரவிதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு கோர்ட் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News