செய்திகள்

‘ஸ்கட்’ ரக ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதனை - அமெரிக்கா, ரஷியா கடும் கண்டனம்

Published On 2017-05-29 22:18 GMT   |   Update On 2017-05-29 22:18 GMT
‘ஸ்கட்’ ரக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
சியோல்:

விமான எதிர்ப்பு ஆயுத சோதனை நடத்திய மறுநாளே எதிரியின் ஏவுகணையை வழிமறித்து தாக்கும் ‘ஸ்கட்’ ரக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, அண்டை நாடான தென் கொரியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது அணுகுண்டு, அதிநவீன ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது. பக்கத்தில் உள்ள இன்னொரு நாடான ஜப்பானை சீண்டும் விதமாக அந்நாட்டின் கடல் பகுதியிலேயே ஏவுகணைகளை விழ வைக்கிறது.

வடகொரியாவுக்கு ஐ.நா. பல்வேறு தடைகளை விதித்து உள்ளது. ஆனால் அந்த நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் தொடர் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறார்.

இதுவரை 1,000, 1,500 3,500, 6,000 கிலோ மீட்டர்கள் தூரம் வரை பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. இறுதியாக 11,500 கிலோ மீட்டர்கள் தூரம் வரை சென்று, அமெரிக்காவை தாக்கும் விதமாக கே.என்.08 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், விமான எதிர்ப்பு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது. இதனால் மேற்கத்திய நாடுகளிடையே ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் வடகொரியா, வோன்சோன் என்னும் இடத்தில் நேற்று எதிரியின் ஏவுகணையை வழிமறித்து தாக்கி அழிக்கும் ‘ஸ்கட்’ ரக ஏவுகணை சோதனையை நடத்தியது.

இந்த ஏவுகணை 120 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கி.மீ. பறந்து சென்று 6 நிமிடங்களில் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ள சடோ மற்றும் ஒகி தீவு பகுதியில் விழுந்தது. கடந்த 15 நாட்களில் வடகொரியா நடத்திய 3-வது ஏவுகணை சோதனை இதுவாகும். ஏற்கனவே கடந்த 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருக்கிறது.

தனது கடல் பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை விழுந்ததால் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆவேசம் அடைந்தார். “எங்கள் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவதால் அப்பகுதியில் எங்களுடைய கப்பல் மற்றும் விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. அத்துமீறி செயல்படும் வடகொரியா மீது அமெரிக்காவுடன் இணைந்து தக்க நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் கூறினார்.

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் உடனடியாக நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி இதுபற்றி விவாதிக்கவும் செய்தார்.

வல்லரசு நாடான ரஷியாவும் தனது கண்டனத்தை பதிவு செய்தது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை சர்வதேச சமூகம் ஒன்றாக இணைந்து கட்டுப்படுத்தவேண்டும் என்று ரஷியாவின் வெளியுறவு மந்திரி விளாடிமீர் டிடோவ் கூறினார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சோதனை குறித்து ஜனாதிபதி டிரம்ப்பிடம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜி7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயிடம் உறுதி அளித்து இருந்தார்.

டிரம்ப்பின் இந்த நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் இந்த ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதாக கருதப்படுகிறது. 
Tags:    

Similar News