செய்திகள்

காபியில் விஷம் கலந்து தோழியை கொன்ற இந்தோனேசிய பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்

Published On 2016-10-27 12:45 GMT   |   Update On 2016-10-27 12:45 GMT
காபியில் விஷம் கலந்து தோழியை கொன்ற இந்தோனேசிய பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து இந்தோனேசியா கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜகார்த்தா:

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ. தோழிகளான இவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றனர். இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மிர்னா தனது தோழியின் நலன் கருதி, ஜெசிகா காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர் என கூறி காதலை கைவிடும்படி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெசிகா, மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் அவர்களின் நட்பு முறிந்தது.

இருப்பினும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மிர்னாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்த ஜெசிகா, கடந்த ஜனவரி மாதம் ஒரு ஓட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கு காபி அருந்திய மிர்னா உயிரிழந்துவிட்டார். மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான காபியை ஜெசிகா ஆர்டர் செய்து வரவழைத்து அதில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஜெசிகா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தோனேசியா கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆஸ்திரேலிய போலீசாரும் இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் ஆவணங்களை கொடுத்து உதவினர். விசாரணையில், ஜெசிகா தன் தோழியை திட்டமிட்டு கொலை செய்தது நிரூபணமானது. இதையடுத்து ஜெசிகா வாங்சோவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Similar News