தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ந்தேதி கோவை வருகை

Published On 2022-08-07 03:52 GMT   |   Update On 2022-08-07 03:52 GMT
  • வருகிற 24-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருகை தர உள்ளார்.
  • அன்றைய தினம் கிணத்துக்கடவு பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர் கிட்டத்தட்ட 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

கோவை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15-ந்தேதி கோவை வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சரின் கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி கோவை வருகிறார். கிணத்துக்கடவு பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை கோவை வந்தபோது, வ.உ.சி மைதானத்தில் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதேபோல வருகிற 24-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் கிணத்துக்கடவு பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர் கிட்டத்தட்ட 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

மேலும் விடுபட்ட பகுதியில் சாலை அமைப்பதற்கு சிறப்பு நிதி வழங்கவும் தயாராக உள்ளார். மாநகராட்சி சார்பில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித பாகுபாடும் இல்லாமல் எல்லா மாவட்டத்திலும் சீரான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதியிலும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இருந்தாலும் இங்கு தடையில்லாமல் அரசின் வளர்ச்சி பணிகள் சீராக நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News