தமிழ்நாடு

சென்னை அம்மா உணவகங்களில் திடீரென அதிகரித்த விற்பனை

Published On 2022-07-13 06:10 GMT   |   Update On 2022-07-13 06:10 GMT
  • ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் விற்பனை இலக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.
  • அம்மா உணவகங்களை நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சி மூலம் 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் 3 உணவகங்களும் செயல்பட்டு வந்தன. இதில் வார்டுகளில் செயல்பட்ட 3 உணவகங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து தற்போது 400 அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

இந்த அம்மா உணவகங்களில் கடந்த சில வருடங்களாக விற்பனை சரிந்தது. இதனால் வருவாய் இழப்பை அதிகம் சந்திக்க நேரிட்டது. இதையடுத்து ஊழியர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன.

ஒரு சில அம்மா உணவகங்களில் ஊழியர்களின் சம்பளத்திற்கு கூட விற்பனை நடைபெறாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அம்மா உணவகங்களில் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்து செயல்படாமல் இருந்தது. அதனை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

மேலும் ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் விற்பனை இலக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.

அம்மா உணவகங்களை கண்காணித்து நிர்வகித்து வரும் 15 மண்டலங்களுக்கும் இலக்கு முடிவு செய்யப்பட்டது. மண்டலத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு உணவகத்திற்கும் வாரத்திற்கு ரூ.1.5 லட்சம், ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து அதற்கேற்ப விற்பனையை ஊழியர்கள் செய்ய தொடங்கினர்.

ஒவ்வொரு கடையிலும் தினமும் குறிப்பிட்ட அளவு விற்பனை செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் தற்போது அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 3-ந்தேதி வரை ஒரு வாரத்தில் 400 அம்மா உணவகங்களில் மொத்தம் ரூ.27 லட்சத்து 34 ஆயிரத்து 460-க்கு விற்பனை நடந்துள்ளது.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 90 ஆயிரத்திற்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த மாதம் 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்தில் ரூ.37 லட்சத்து 3 ஆயிரத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரி விற்பனை 5 லட்சத்து 33 ஆயிரமாகும். ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அளவிற்கு விற்பனை உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் அம்மா உணவகங்களை நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுசெய்ய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கு ரூ.98 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக அரசுக்கு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News