தமிழ்நாடு
எஸ்பி வேலுமணி

சென்னை, கோவை உள்பட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2022-03-15 08:12 GMT   |   Update On 2022-03-15 08:12 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்காண்டபள்ளி பொதிகை நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் உறவினர் வீட்டில் சோதனை நடந்தது.
கோவை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2-வது முறையாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று மட்டும் மொத்தம் 6 மாவட்டங்களில் 58 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. எஸ்.பி. வேலுமணியின் சொந்த ஊரான கோவை மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 41 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

இதேபோல சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

சேலம் ஏ.வி.ஆர் சொர்ண மகால் நகை கடை, ஆத்தூரில் உள்ள அதன் கிளை நகை கடை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வரதராஜ பெருமாள் வீடு, மேட்டூர் அருகே பொட்டநேரியில் மற்றொரு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்காண்டபள்ளி பொதிகை நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் உறவினர் வீட்டில் சோதனை நடந்தது.

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள மகா கணபதி ஜூவல்லர்ஸ் நகை கடையில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல திருப்பத்தூரில் உள்ள ஒரு நகை கடையில் சோதனை நடந்தது.

அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் உறவினர் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News